Header Ads



படு மோசமான நஷ்டத்தில் இயங்கும் ரூபவாஹினியும், SLBC யும் (விபரம் இணைப்பு)


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவை உரிய விளம்பரத்தை வழங்கவில்லை எனவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.


பல்வேறு பாழடைந்த கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களின் அசௌகரியங்களை பொது ஊடகங்கள் ஒளிபரப்பும் அதேவேளை அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான அமைச்சர் பந்துல  தெரிவித்தார்.


அண்மையில் பாராளுமன்றத்தில் ஊடகத்துறை அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


சமூக கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் ஊடகங்களால் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து குழுவிடம் ஒப்படைக்குமாறும் இலங்கை பத்திரிகையாளர் சபைக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.


தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனமாக மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக வெளிப்படுத்தப்பட்டது. 


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 2023 இல் 277 மில்லியன்   ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 2023 இல் ரூ. 457 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர்  சுட்டிக்காட்டினார். 


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.