Header Ads



தபால் நிலையத்தை காப்பாற்றக்கோரி போராட்டம்



செ.திவாகரன், டி.சந்ரு 

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நுவரெலியாவில் பிரதான நகரில் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள்  முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பிரதானமாக நுவரெலியா மக்கள் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் ,

சட்டத்தரணிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஏராளமான தபால் நிலைய ஊழியர்கள் பெருமளவிலானவர்கள் போராட்டத்துடன் இணைந்ததுடன் போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடி காட்டிய வண்ணம் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நுவரெலியா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி   போராட்டத்தில் இணைந்து கொண்டுடனர்.  வர்த்தக சங்கம் , நுவரெலியா முச்சக்கர வண்டிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கினர்.

நுவரெலியா நகரில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள்  தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துடன் நுவரெலியா பிரதான நகரில் உள்ள வீதிகளில் பேரணியாக சென்று  பெருந்திரளானவர்கள் திரண்டு   தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

குறித்த போராட்டம் காரணமாக நுவரெலியா பிரதான நகருக்கான வீதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலயம் தடைப்பட்டு இருந்தது . போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.