Header Ads



ஜனாதிபதிக்கு சாலிய பீரிஸ், சுடச்சுட பதிலடி


2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் தாம் பிரதமராக பதவியேற்கும் அபிலாஷைகளை கொண்டிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் நிராகரித்துள்ளார்.


முகப்புத்தகத்தில் இது தொடர்பில் பதிவொன்றினை பகிர்ந்துள்ள பீரிஸ், ஜனாதிபதி தனது பெயரை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும், தனக்கு பிரதமர் பதவியில் ஆசை இருப்பதாக பொய் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிக்கு பதில் சொல்ல முடியாத நிலையில், நாடாளுமன்ற போர்வையின் கீழ் இந்த பொய்யான கருத்துக்களை வெளியிட்டார் என்றும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நிலையில் அவர் போன்ற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், தாம் ஒருபோதும் நாட்டின் தேவைகளுக்கு மேல் தனிப்பட்ட அபிலாஷைகளை வைக்கவில்லை.


அத்துடன் தமது கொள்கைகளை தனிப்பட்ட இலாபத்திற்காகவோ அல்லது பதவியின் பேராசைக்காகவோ ஒருபோதும் தியாகம் செய்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.


2022, மே மாதத்தில் முன்வைக்கப்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் ஒருபோதும் தனிநபர்களைப் பற்றியது அல்ல. அவை அதன் செயற்குழுவால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.


இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் நோக்கிலேயே சட்டத்தரணிகள் சமூகம் இந்த முன்மொழிவுகளை முன்வைத்தது என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.