முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் வெற்றி - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உத்தரவாதம்
ஷண்முகா ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த (Writ) வழக்கு (07.11.2023) முடிவிற்கு வந்தது.
தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என ஆசிரியை பஹ்மிதா அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் Writ வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார்.
பாடசாலை அதிபர் சமூகம் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடையில்லை என்ற உத்தரவாதத்தைத் தந்ததைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிவிற்கு வந்ததிருந்தது. எனினும் நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அப்பாடசாலையினை மாத்திரமே கட்டுப்படுத்தும்.
ஆனால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஷண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், அரசைப் பிரதி நிதித்துவப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பாடசாலைகளில் ஹபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவாத்தினை எழுத்து மூலம் தந்ததை அடுத்து இவ்வழக்கு முடிவிற்கு வந்தது.
இந்த முடிவின் மூலம் இலங்கையில் இருக்கும் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொறேயா, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் இன்று ஆஜராகி இருந்தனர்.
குரல்கள் இயக்கம் (Voices Movement) பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாகஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment