Header Ads



ஹமாஸ் தலைமை குறித்து ஜனாதிபதி கூறிய விடயம் - உடனடி போர் நிறுத்தத்திற்கும் வலியுறுத்து


இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென கருதப்படும் மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரையிலானது எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி,உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சர்வதேச அரங்கில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்ற பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இங்கு, சர்வதேச உறவுகள் தொடர்பான சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமா படிப்புகள் மற்றும் பட்டப்பின் படிப்பு பாடநெறிகள் ஆகிய நிலைகளில் கற்கைகளை முடித்த 390 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், 2020, 2021, 2022, 2023 ஆகிய கல்வி ஆண்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மானியமும் இங்கு நடந்தது.


இலங்கையின் சர்வதேச உறவுகள் தொடர்பில் சிறப்பான பங்களிப்பு வழங்கியதைப் பாராட்டி, மறைந்த ஜயந்த தனபால மற்றும் எச். எம். ஜி. எஸ். பளிஹக்கார அவர்களுக்காக, ஜனாதிபதி விசேட கௌரவிப்புகளை வழங்கியதுடன், இந்த விருதை மறைந்த ஜயந்த தனபாலவின் சார்பில் அவரது மகன் சிவங்க தனபால பெற்றுக்கொண்டார்.


கடன் நெருக்கடி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட கொவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது கருத்துத் தெரிவித்தார்.


காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஹமாஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை அழிப்பதன் மூலம் மாத்திரம் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்றும், மேலும் அது தீவிரமடைவதைத் தடுக்க உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.


சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள எபெக் (APEC) உச்சிமாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் ஆகியோருக்கு இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பின் ஊடாக தற்போதைய நிலைமையைத் தணிக்க சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


இந்த உலகளாவிய சிக்கல்களைக் கடந்து செல்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.


சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்சன், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிராங்சுவா பெக்டெட், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் தூதுவர்கள், சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், பேராசிரியர் காமினி கீரவெல்ல, பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான முகாமைத்துவ சபை மற்றும் கல்விசார் ஊழியர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

10.11.2023

No comments

Powered by Blogger.