அலிகர் நகரை 'ஹரிகர்' என மாற்ற திட்டம் - முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு
இந்தத் திட்டம் தற்போது மாநில அரசின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னும் உத்தர பிரதேச மாநில அரசு இஸ்லாமிய பெயர்கள் கொண்ட பல நகரங்களின் பெயர்களை மாற்றியுள்ளது.
இந்த மாற்றத்திற்கான தீர்மானம் நகராட்சி வாரியத்தின் பா.ஜ.க உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது என்றும், அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் ஆளும் பா.ஜ.க.வின் மேயரான பிரசாந்த் சிங்கால் தெரிவித்தார்.
‘அலிகர்’ என்ற பெயரை ‘ஹரிகர்’ என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது என்கிறார் சிங்கால். அவர் மேலும் கூறுகையில், "நமது பழைய நாகரிகம் மற்றும் கலாசாரம், நமது பாரம்பரியமான இந்து மதத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பெயரை மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது," என்றார்.
விரைவில் இந்த நகரம் ‘ஹரிகர்’ என்று அழைக்கப்படும் என்று பிரசாந்த் சிங்கால் நம்பிக்கை தெரிவித்தார்.
அலிகர் நகரைச் சேர்ந்த ஹைதர் கான் என்ற இளைஞர், நகராட்சி வாரியத்தின் இந்தத் திட்டத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அலிகர் நகருக்கு ஹரிகர் என்று பெயர் வைப்பதை தான் விரும்பவில்லை என்றும், அந்த நகரம் உருவானதில் இருந்தே அலிகர் என்றுதான் அழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
"பெயரை மாற்றினால் பிரச்னைகள் தீரும் என்றால் அதைச் செய்யுங்கள். முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரும் இதுபோல பெயர் மாற்றத்தில் ஈடுபட்டதால் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவர்களின் வழியைப் பின்பற்றுகிறாரா?" என்று கேள்வி எழுப்பினார் அவர்.
அலிகர் முஸ்லிம் வாரியத்தின் உறுப்பினரும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவருமான முஷாரப் ஹுசைன் மெஹ்சார், எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் பா.ஜ.க உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மோசடியாக நிறைவேற்றியுள்ளனர் என்றார்.
“இது பா.ஜ.க. தனது கொள்கையை வலிந்து திணிப்பதன் ஒரு பகுதி. கடந்த 15 ஆண்டுகளாக அலிகரின் பெயரை மாற்ற அவர்கள் முயன்று வருகின்றனர். நகராட்சி வாரியத்தில் எங்கள் கட்சி இருக்கும் வரை, அலிகர் என்ற பெயர் மாற்றப்படாது," என்றார்.
அலிகர் நகரத்தின் மூத்த குடியிருப்புவாசியும் முன்னாள் நகராட்சி உறுப்பினரான முசாபர் சயீத், பெயரை மாற்றும் திட்டத்தை ஒரு சதி என்று கூறினார்.
“அலிகரை ஹரிகர் என்று மாற்றினால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா? இதனால் யாருக்காவது பலன் கிடைக்குமா? இது 2024 தேர்தலுக்கு முன் மத உணர்வுகளைத் தூண்டுவதற்கான சதி,” என்றார். bbc

Post a Comment