Header Ads



தொழுகைக்காக பேருந்தை நிறுத்திய நடத்துநர் பணிநீக்கம் - விரக்தியில் எடுத்த விபரீத முடிவு


பேருந்து பயணத்தின் நடுவே சில பயணிகள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக, பேருந்தை சில நிமிடங்கள் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடத்துநரின் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.


அதன் எதிரொலியாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலம், பரேலிக்கு உட்பட்ட ஒரு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில் மோஹித் யாதவ் என்ற வாலிபர் ஒப்பந்த அடிப்படையில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.


கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் வழக்கம்போல் பணியை மேற்கொண்டிருந்த அவர் மீது, குறிப்பிட்ட அந்த நாளில் ராம்பூருக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தை திடீரென சில நிமிடங்கள் நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.


அந்தப் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகளில் சிலர் தொழுகை நடத்துவதற்காக, பேருந்து நிறுத்தப்பட்டதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பிற பயணிகள் குற்றம்சாட்டினர்.


இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், நடத்துநர் மோஹித் யாதவின் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஓட்டுநரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.


இந்தச் சம்பவம் நிகழ்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு, மெயின்பூரிக்கு உட்பட்ட கோஸ்மா ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார் மோஹித்.


வேலை பறிபோன நிலையில், பணப் பிரச்னையில் சிக்கித் தவித்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.


அத்துடன் மோஹித் தற்கொலை செய்து கொண்டார் என்று அவர்கள் ரயில்வே போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் மோஹித் யாதவின் மரணம் தொடர்பாக, மெயின்பூர் ரயில்வே கோட்ட பொறுப்பு அதிகாரியான ஓம்கார் சிங் பிபிசியிடம் கூறும்போது, “திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த விபத்தில் பலியான நபர் மோஹித் யாதவ் என்று அவரது உறவினர்கள் உடலை அடையாளம் காட்டியுள்ளனர்.


தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிப்பட்டு மோஹித் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எங்களுக்குத் தெரிந்தவரை இது தற்கொலையாகத் தெரியவில்லை,” என்று ஓம்கார் சிங் கூறியுள்ளார்.


மோஹித் மரணம் குறித்து அவரது தம்பி மனோஜ் யாதவ் ஊடகங்களிடம் கூறும்போது, “பேருந்து பயணிகள் சிலர் தொழுகை மேற்கொள்வதற்காக, பயணத்தின் வழியில் பேருந்தை சில நிமிடங்கள் நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, எனது சகோதரர் (மோஹித்) பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.”


ஆனால், குறிப்பிட்ட நபர்கள் நமாஸ் செய்த தருணத்தில் பிற பயணிகள் கழிப்பறைக்குச் சென்று வரவும் அவர் அனுமதித்திருந்தார். மற்ற பயணிகள் பேருந்துக்குத் திரும்புவதற்குள் நமாஸ் செய்து முடித்துவிடும்படியும் குறிப்பிட்ட சில பயணிகளை அவர் அறிவுறுத்தி இருந்தார்.


இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த அவர், தனது கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோஸ்மா ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டார்,” என்று மோஹித்தின் சகோதரர் மனோஜ் யாதவ் கண்ணீர் மல்கக் கூறினார்.


மெயின்புரி நகருக்கு உட்பட்ட நங்லா குஷல்பூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மோஹித். அங்கு அவரது உடல், செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.


இந்த நிலையில் தனது மகனின் மரணம் குறித்து மோஹித்தின் தந்தை ராஜேந்திர சிங் பிபிசியிடம் கூறும்போது, “வேலை பறிபோனதில் இருந்து மோஹித் மிகவும் வருத்தத்தில் இருந்தார். இனி நான் என்ன செய்வேன், எங்கு செல்வேன் என்று எங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.


அவரது உயிரை பலிவாங்கிய விபத்து எங்கள் கண் முன் நடக்கவில்லை. ஆனால், வேலையை இழந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தார். என் மகனை இழந்துவிட்டேன்; இனி நான் என்ன செய்வேன்?” என்று கண்ணீர் மல்கக் கூறினார் ராஜேந்திர சிங்.


“பயணிகள் சிலர் நமாஸ் செய்வதற்காக பேருந்தை நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு என் கணவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் தவறு எதுவும் செய்யவில்லை. வேலையை இழந்தது குறித்த வருத்தம் அவருக்கு இருந்தது,” என்று ஊடகங்களுக்கு கண்ணீருடன் அளித்த பேட்டியின்போது மோஹித்தின் மனைவி ரிங்கி யாதவ் கூறினார்


ஆனால் உறவினர் பிங்கு யாதவ், மோஹித் குறித்து சொல்வது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.


“வேலையை இழந்ததில் இருந்து மோஹித் மிகவும் சுதந்திரமான உணர்வையே கொண்டிருந்தார். தினமும் காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே செல்வது அவரது வழக்கம். அவரது குடும்பத்தினருக்கான செலவுகளை எங்கள் குடும்பம் செய்து வந்தது,” என்று பிங்கு யாதவ் பிபிசியிடம் கூறினார்.


மெயின்பூரிக்கு உட்பட்ட கோஸ்மா ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் மோஹித்.


மோஹித்தின் மரண செய்தி கேட்டு அவருடன் பணியாற்றி வந்த ஒப்பந்த பணியாளர்கள் பலரும் சோகத்தில் ஆழந்துள்ளனர்.


மோஹித்துக்கு நன்கு பரிச்சயமான ஒப்பந்தப் பணியாளர் ரவி பிரசாத் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நமாஸ் விவகாரத்தில் மோஹித்தின் வேலை பறிபோனது. ஆனால் இந்த புகார் சரியானதல்ல. இந்த குற்றச்சாட்டை எழுப்பிய நபர், சிறிய விஷயத்தைப் பெரிதுப்படுத்திவிட்டார்.


தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள அவர் லக்னௌ வரை சென்று முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. தற்போது மோஹித் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது,” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் ரவி பிரசாத்.


வேலை இல்லாமல், மோஹித் மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்தார் என்று நங்லா குஷல்பூர் கிராமத்தின் தலைவர் அகிலேஷ் என்.மோகனும் பிபிசியிடம் உறுதிப்படத் தெரிவித்தார்.


தனது கணவர் தவறு எதுவும் செய்யவில்லை. வேலை இழந்தது குறித்த வருத்தம் அவருக்கு இருந்தது என்று கூறுகிறார் மோஹித்தின் மனைவி ரிங்கி யாதவ்.


அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த மோஹித் யாதவ் மரணம் குறித்து, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பயணி ஒருவர் மத பிரார்த்தனை மேற்கொள்வதற்காக சில நிமிடங்கள் பேருந்தை நிறுத்தியதற்காக, பணியாளர்கள் இருவரை உத்தர பிரதேச போக்குவரத்துக் கழகம் பணி நீக்கம் செய்தது எந்தவிதத்தில் நியாயம்? இதனால் மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, உத்தர பிரதேச போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அரசிடம் வலியுறுத்த வேண்டும்,” என்று தனது ட்விட்டர் பதிவில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். BBC

No comments

Powered by Blogger.