Header Ads



மாணவர்கள் காலை உணவை கட்டாயமாக உட்கொண்டே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்


- நூருல் ஹுதா உமர்  -


பாடசாலை மாணவர்கள் காலை உணவை கட்டாயமாக உட்கொண்டே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக போசாக்கான உணவுகளையே உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.


சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற காலை ஆராதணை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இயற்கையானதும், போசாக்கானதுமான உணவுகளை விட்டுவிட்டு பொருத்தமற்ற உணவுகளையே நாம் உண்ணத்தொடங்கியுள்ளோம். இப்போது பெண்கள் வீடுகளில் சமைப்பதனை குறைத்துக்கொண்டு வருகின்றனர். தொழில் செய்யக்கூடிய பெண்கள் அதனை சிரமம் என்று பார்க்கின்றனர். என்றாலும் ஒரு வீட்டின் ஆரம்பம் சமையல் அறைதான். குறிப்பாக பெண்கள் சமையலை ஒரு அடிமைத்தனமாக நினைக்கக்கூடாது சமையல்தான் ஒரு வீட்டின் மிக முக்கியமான விடயமாகும். 


கல்வியினைப் பொருத்த வரையில் நமக்கு தெரிந்த விடயத்தினை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எமது அறிவு விருத்தியடையும். எமக்கு தெரிந்த விடயங்களை இரகசியமாக பேணிக்கொள்ளாது ஏனையவர்களுக்கும் சொல்லிக்கொடுக்க மாணவர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.


கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள், வலய மட்ட தமிழ் தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகள் மற்றும் கோட்ட மட்ட சிறுவர் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்று வலயமட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் என பலர் இந்நிகழ்வின் போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.


பாடசாலை அதிபர் எம்.சீ.என்.றிப்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எஸ்.முபாரக், எம்.எப்.ஐ.மர்சூனா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.






No comments

Powered by Blogger.