Header Ads



பரீட்சையில் தோற்றுப் போனதாய் நினைப்போருக்கு...


எனது A/L பரீட்சையில் அடுத்தடுத்து இருமுறை தோற்றுப் போனேன். 2 தடவையும் 2S தான் பெறுபேறு. அப்போது எங்களுக்கு 4 பாடங்கள். 2 பாடங்கள்தான் பாஸ்; மற்ற 2 பாடங்களும் ஃபெயில்.


எப்போதும் வகுப்பில் முதல் ஆளாக வருவேன். O/L  இல் All D  எடுத்தேன். (அப்போது D தான் - Distinction Pass. A அல்ல). இதனால் கெட்டிக்காரன் என்று பேரெடுத்திருந்தேன்.


ஆனால், A/L இல் படுதோல்வி. எனது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு தோல்வி அது.


என்னை டொக்டராகக் கனவு கண்ட பலர் இருந்தார்கள். அவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


என்னை நோக்கி கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்கள்; என்னை அவமானப்படுத்தினார்கள். ஆறுதல் சொன்ன நல்லுள்ளங்களும் இருந்தன.


கடந்து செல்வதற்கு மிகவுமே  கடினமான நாட்களாக அவை இருந்தன. பெரும் பாரமாக இருந்தது.

இதனால், அப்போது என்னைச் சுற்றியிருந்த சமூகத்தை எதிர்கொள்ள மிகவும் சங்கடப்பட்டேன்.


அந்த நாட்களில் மனிதர்களை எதிர்கொள்வதே பெரும் பாடாக இருந்தது. அதிலிருந்து வெளியேற சில நாட்கள் தேவைப்பட்டன. 

படிப்படியாக விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகினேன்.


இங்கிருக்கும் சமூக மதிப்பீடுகள், டொக்டரையும் எஞ்ஜினியரையும் மட்டுமே அந்தஸ்தில் உயர்வாகக் கருதுவன.


என் மீதும் அதே மதிப்பீடுகளைத் திணிக்க முற்பட்டார்கள். நான் ஒரு சமூகப் பிராணி. மருத்துவம் எனது தெரிவோ துறையோ அல்ல. நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பது என் இயல்பும் அல்ல. பரந்த பூமியை நோக்கி என் இறக்கைகளை விரிக்கத் தொடங்கினேன்.


எனக்குப் பிடிக்காத தெரிவை உதறித் தள்ளிவிட்டு, மூன்றாவது தடவையில் கலைத் துறையைத் தெரிவு செய்தேன்- அதுவும் கடைசி நேரத்தில்.


இந்த முடிவை எடுப்பதற்கு - எனது துறையை மாற்றுவதற்கு - காலம் எடுத்தது; சில வருடங்கள் தேவைப்பட்டன. அதை ஒருபோதும் நான் இழப்பாகப் பார்க்கவில்லை.

 

பின்னர் பல்கலைக்கழகம் சென்று, முதல் தரத்தில் சித்தியெய்தினேன்.


ஆதலால், இந்தப் பரீட்சைப் பெறுபேறு வரும்போதெல்லாம், தோற்றுப் போனவர்களின் பக்கமே எனது கவனம் குவிவது வழக்கம். 


அவர்களை அவமானப்படுத்தி விடாதீர்கள்; அன்பான- ஆறுதல் நிறைந்த வார்த்தைகளால், கனிவான பார்வையால் வாரி அணையுங்கள். 


♦நல்ல பெறுபேறு அமையாதோருக்கு:


பரீட்சைத் தோல்வி, தோல்வியே அல்ல. வாழ்க்கைப் பாதை மிகவுமே விரிந்தது. ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும். 


சிலபோது அவமானம், ஆற்றாமை உணர்வுகள் குறுக்கறுக்கும். துவண்டு விடாதீர்கள். இறைவனின் ஏற்பாடு வேறாய் இருக்கும்.


இந்த நாட்கள் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். தைரியமாக இருங்கள். துவண்டு விடாதீர்கள். பொறுமையாகக் கடந்து விடுங்கள். கவலைகளைப் போக்க நண்பர்களோடும்  நெருங்கியவர்களோடும் உரையாடுங்கள். முடிந்தால் வெறொரு சூழலுக்கு மாறி விடுங்கள். ஒரு பயணம் செல்லுங்கள். அது மனதிற்கு அமைதி தரும்.


உலகத்திற்கு எல்லா வகையான மனிதர்களும் தேவை. நாம் இந்த உலகத்திற்கு நிச்சயம் வேண்டப்பட்ட மனிதர்கள். 


♦பரீட்சையில் நல்ல பெறுபேறு பெற்றவர்களுக்கு:


உங்களது அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த அடைவிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். 


எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் அமையட்டும்.


பேரன்புடன், 

சிராஜ் மஷ்ஹூர்.

05.09.2023

No comments

Powered by Blogger.