Header Adsஆதரவு கொடுங்கள், அவமதிக்காதீர்கள் என்கிறார் அன்பளிப்பு வழங்கிய ஆட்டோ ஓட்டுநரின் மகன்


ஆசிய கோப்பை கிரிக்கெட்  இந்திய அணி வெற்றிக்குகாரணமாக இருந்தார் முஹம்மது சிராஜ். தனக்கு கிடைத்த பரிசுத்தொகை சுமார் 4.15லட்சம் ரூபாயையும் இலங்கை மைதான ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.


ஐதாராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் மிக எளிய குடும்பத்தில் வளர்ந்தவர். தந்தை ஆட்டோ ஓட்டுநர். பதின்ம வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சிராஜ், 2015-ம் ஆண்டு தனது 21-வது வயதில்தான் கிரிக்கெட் பந்தில் முறையாக பந்துவீசத் தொடங்கினார். தனக்கிருந்த சிறப்பான பந்துவீசும் திறனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில், அதாவது 2017-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.


முதல் ஐ.பி.எல். தொடரிலேயே திறம்பட செயல்பட்டு, கவனிக்கப்படும் வீரராக மாறிய முகமது சிராஜ் அந்த ஆண்டே சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக தடம் பதித்தார். இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கான வாய்ப்பும் கதவு தட்டியது.


2019-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு முகமது சிராஜூக்கு கிரிக்கெட் உலகில் தொடர்ந்து ஏறுமுகம்தான். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கால் பதித்த கால கட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித்சிங் பும்ராவும், முகமது ஷமியும் ஆதிக்கம் செலுத்தினர்.


ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித்சிங் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பிரதான வீச்சாளர்களாக இருக்க, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவே அணியில் நுழைந்தார் முகமது சிராஜ்.


ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிகக் குறுகிய கால கட்டத்திலேயே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறியுள்ளார்.


பந்தை வீசும் போது அவர் கைக்கொள்ளும் முறை, வேகமாகவும் துல்லியமாகவும் தொடர்ச்சியாகவும் வீசும் திறன், சரியான லைன் மற்றும் லெந்தில் பந்தை வீசுவது, பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது போன்றவையே சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜை அபாயகரமான வேகப்பந்துவீச்சாளராக மாற்றியுள்ளன.


குவியும் பாராட்டுகள்

முகமது சிராஜ் சிம்பிளி அவுட் ஸ்டேன்டிங் என குறிப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இதேபோன்று


பல விளையாட்டு நட்சத்திரங்கள் சிராஜை பாராட்டி வருகின்றனர்.


சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜின் செயல்பாடுகள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக அவரை மாற்றியிருப்பதாகவும், வரும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான பிரம்மாஸ்திரமாக அவர் திகழ்வார் எனவும் இந்திய முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை முன்பே பெற்றவர் முகமது சிராஜ்.


ட்ரோல்களையும் எதிர்கொண்டவர்

தற்போது பாராட்டுகளை வாங்கி குவித்து வரும் சிராஜ் ஒருகாலத்தில் ஐபிஎல்லில் சில மோசமான பந்துவீச்சால் கடுமையான டிரோல்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.


இதுகுறித்து ஒருமுறை மனம் திறந்து பேசிய சிராஜ், "நன்றாக விளையாடினால் பாராட்டுகிறார்கள். சொதப்பிவிட்டால் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டச் செல் எனக்கூறி மோசமான வசைகளை மொழிகிறார்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் சகஜம்தான். ஆதரவு கொடுங்கள். யாரையும் அவமதிக்காதீர்கள். சக மனிதனாக நான் இதைக் கேட்கிறேன். அனைவரையும் மதித்து நடப்போம்." என்றார்.

No comments

Powered by Blogger.