Header Ads



79 பக்கங்களை வெளியிடாமல், ரணில் மௌனம் காப்பது ஏன்..?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் பொழுது நாடாளுமன்றத்திற்கு இறுதி அறிக்கைதான் தரப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடத்தின் பின்னர் மிகுதி அறிக்கைகள் எங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் 79 பக்கங்கள் எங்களுக்குத் தரப்படவில்லை. அதனை நாங்கள் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னரும் கூறினோம். ரணில் மௌனமாக இருக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அன்று ஒரு குழுவை நியமித்தார்கள். ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் பொழுது இந்த குழு நியமிக்கப்பட்டது. அதற்கு பிறகு ஒரு விசாரணை நடந்தது.


அதன் பிறகு, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நியமித்தார். அதிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு மலலசேகர விசாரணைக் குழு என்று ஒன்று நியமிக்கப்பட்டது. அது கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது என நான் நினைக்கின்றேன்.


அதிலும் விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆகவே நாட்டில் மூன்று விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.


ஜனாதிபதி விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை நாங்கள் எடுத்து பார்த்தால் அவர்கள் கூறுகின்றார்கள், சாரா உயிருடன் இருக்கின்றார் என்று. சாராவை கண்டுபிடிக்குமாறும் கூறியிருந்தனர். ஆனால் 3 வருடங்களுக்கு பிறகு அரசாங்கம் சொல்கின்றது சாரா உயிரிழந்துவிட்டார் என்று.


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் பொழுது நாடாளுமன்றத்திற்கு இறுதி அறிக்கைதான் தரப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடத்தின் பின்னர் மிகுதி அறிக்கைகள் எங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் 79 பக்கங்கள் எங்களுக்குத் தரப்படவில்லை.


அதனை நாங்கள் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னரும் கூறினோம், அந்த அறிக்கையை வெளியில் காட்டுங்கள் என. அவரும் அதனை வெளியிடவில்லை. ரணில் மௌனமாக இருக்கின்றார். ஒன்றும் அவர் கூறுவதாகவும் இல்லை.


இந்த எல்லா அறிக்கைகளையும் வாசித்த ஒருவர் தான் தப்புல டி லிவேரா. அவர் முழுமையாக வாசித்ததன் காரணமாகத்தான் இது ஒரு சதி நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தார். அந்த அறிக்கையை வாசித்து செல்லும் போது இது ஒரு சதி நடவடிக்கை என்பது நன்றாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சனல் 4 காணொளியில் அசாத் மௌலானா கூறியவை ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன கூறியவற்றுடன் தொடர்புபடுகின்றன. அதனால் அந்த தகவல்களை விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.   

No comments

Powered by Blogger.