Header Adsஏறாவூரின் முஸ்லிம் படுகொலைகளும், தெறிப்புக்காட்டிக்கொண்டு திரிந்த புலி வால்களும்
- Nawas Dawood -

1990ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இதே காலப்பகுதியில் ஏறாவூர் எவ்வாறு இருந்திருக்கும் என்று இதை வாசிக்கும் உங்களில் பலருக்கு தெரிந்திருக்காது. அந்த வகையில் நான் அவதானித்தவைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் கேளுங்கள்.


மின்சார விநியோகத்திற்கான ட்ரான்ஸ்போமரை விடுதலைப் புலிகள் வெடிக்க வைத்து விட்டிருந்தனர்.அதனால் ஊரில் மின்சாரமும் இல்லை. பெற்றோல் டீசல் மாத்திரமின்றி மண்ணெண்ணைக்கும் தட்டுப்பாடு.வானொலி பெட்டி மற்றும் டோச் லைட்டுக்கான பெட்டரிக்கும் தட்டுப்பாடு.இவ்வளவும் ஏன்.மக்களின் அத்தியவாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதும் பெரும்பாடு.ஏனென்றால் தரைவழிப்போக்குவரத்தும் இல்லை.அப்படி இருந்தாலும் புலிகளின் வழிப்பறிக்கொள்ளை.


ஊரில் இருந்த பொலிஸ் நிலையத்தையும் அங்கே மிஞ்சிப்போய் இருந்த பொலிசாரை புலிகள் கைது செய்ததுடன் பொலிஸ் நிலையத்தையும் விரட்டியடித்தாயிற்று.


சில்லரை கடைகளில் பெரும்பாலனவை அவரவர்களின் வீடுகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. அதுவும் இரகசியமாகத்தான். காரணம் புலி வால்களாலும் புலிகளின் சூரையாடல்களாலும்,கொள்ளைகளாலும்.


ஊரில் மோட்டார் சைக்கில்களை வைத்திருந்தவர்கள் புதைகுழியில் போட்டு பதுக்கி வைத்திருக்க வேண்டிய நிலை.புலிகளின் வால்கள் மோப்பம் பிடித்தால் அன்றைய இரவு புலிகள் வந்து பறித்தெடுத்து சென்று விடுவார்கள்.வங்கியை கூட மிச்சம் வைக்கவில்லை,பட்டப்பகலில் சூரையாடினார்கள்.


அரசாங்க உத்தயோகத்தர்களுக்கான சம்பளமும் வந்தபாடில்லை, விவசாயிகளும் ஏனைய தொழிலாளர்களும் தொழில்களுக்கு சென்றபாடுமில்லை. ஆதலால் பெரும்பாலோர் தமது வீடுகளில் பசியும் பட்டினியும் நுலம்புக்கடிக்குள்ளும்தான்.இத்தனை நெருக்கடிகளுக்குள்ளும் மக்களுக்கு இது ஒன்றும் கணக்கிலுமில்லை.காரணம் உயிர் மட்டுமாவது மிஞ்சினால் போதுமென்ற நட்பாசை.


ஊர் முழுதும் வரிப்புலிகளின் அட்டகாசமும் ஆக்கிரமிப்பும் ஒருபுறமென்றால் புலிவால்களின் தெறிப்புக்கள் இன்னொரு புறம்.


புலிகளிடம் இருந்து தப்பித்துக்கொண்டாலும் புலிவால்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதுதான் பெரும் அவஸ்தையாக இருந்தது.காரணம் காட்டிக்கொடுப்பதி்லும்,புலிகளை கூட்டிக்கொண்டு வருவதிலும் புலிவால்களின் அவஸ்தை மிகவும் பிரபல்யம்.


இன்னொரு பக்கம் புலிகளின் இயக்கத்துக்கும் புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்களுக்குமான பரஸ்பர துப்பாக்கி சூடுகளுடனான தெரு யுத்தம். இடையில் யாராவது பொதுமகன் அகப்பட்டால் அந்தோ கதிதான்.


இன்னொரு புறம் மக்களுடன் மக்களாக ஒற்றர்களாக புலிவால்கள்.தப்பித்தவறி புலிகளைப் பற்றி யாராவது ஒருவர் தறக்குறைவாக அல்லது விமர்சித்து தெருக்கதை பேசிக்கொண்டிருந்தாலும் அவ்வளவுதான், புலிகளுக்கு தகவல் பறந்து விடும். பிறகென்ன துரோகிகளின் பட்டியலில் அவர்களின் பெயரும் இணைந்துவிடும்.


மாட்டுப்பட்டிகள் வைத்திருந்தோரும் விவசாயிகளும் புலிகள் கேட்கும் பணத்தை கப்பம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.யார் போடியார்,யார் முதலியார் போன்ற தகவல்கள் கச்சிதமாக புலிகளுக்கு புலி வால்கள் மூலம் தகவல் கிடைத்துவிடும்.


மக்களில் பலர் வீட்டு முற்றங்களில் மையத்தை அடக்க குழி தோண்டுவது போல் தோண்டி வீட்டில் உள்ள தங்க ஆபரணங்கள்,மின் உபகரணப் பொருட்கள் உட்பட இதர பாவனைப் பொருட்கள் அடங்கலாக தஷ்தாவேஜ்களை புதைத்து வைத்து மண்ணைப்போட்டு நிரப்பி விடுவார்கள்.காரணம் அவசரமாக புலிகள் ஊரை விட்டு வெளியேறச் சொன்னாலோ,அல்லது உயிர் தப்பிக்க ஊரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டாலோ தமது பொருட்களை காப்பாற்றிக்கொள்ளும் முகமாக.


ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த ஏறாவூர் மக்களும் தத்தமது வீடுகளில் சில காலம் அகதிகளாத்தான் காணப்பட்டார்கள்.


பாடசாலைகளின் நிலைமைகளை எழுத்தில் சொல்ல முடியாது.வகுப்பறைக்குள் புலிகளும் புலிவால்களும் அனுமதியின்றியே உள் நுழைவார்கள். பாடம் எடுப்பது போல் புலிகள் பற்றிய பாடத்தை எடுப்பார்கள்.


மூளைச்சலவைக்கு ஆளாகிய உயர் வகுப்பு மாணவர்களில் சிலர் கட்டுண்டு போனாப்போல் அவர்களுடன் சென்று விடுவார்கள். அலிகார் தேசிய பாடசாலையில் இதனால் புலிகளுக்கும் அதிபருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன.


மாணவ மாணவிகள் குழுமியிருக்க அதிபர் அறைக்கு அருகாமையில் முஸ்லிம் புலியைச் சேர்ந்த ஒருவனுக்கு அதிபர் அறைந்த சம்பவமும் உள்ளன. இதனால் ஆத்திரமுற்ற அந்த புலி, இரவு நேரம் அதிபரின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்து சுட்டுவிடுவேன் என்று மிரட்டிய சம்பவமும் உள்ளன.


வாசிகசாலை உட்பட பிரதேச சபையில் காணப்பட்ட புத்தகங்களும் தஸ்தாவேஜ்களும் எரியூட்டப்பட்டன. முஸ்லிம்களுக்கு சொந்தமான பிடவைக்கடைகள் உட்பட சில்லரைக்கடைகள் பட்டப்பகலில் சூரையாடப்பட்டன.இது அனைத்துக்கும் புலிவால்கள் அனுசரனையும் பெரும்பங்கை வகித்தது.


இதற்கிடையில் புலிகளின் பஞ்சாயத்துக்கான அலுவலகம் ஒன்றும் ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலின் அருகில் திறந்தாயிற்று. அங்கே சென்றால் பார்த்திருக்கலாம் புலிவால்களின் கர்வங்களையும் திமிரையும்.


1990,ஜூன் மாத இறுதிப் பகுதியில் மக்களை ஊரை விட்டு வெளியேறும்படியான அறிவித்தல்களும் ஊரின் சம்மேளன தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் சொல்லியாயிற்று.இதனை கொண்டு வந்து சொன்னதும் புலியும் அதன் வால்களும்தான். 


ஆனாலும் இதனை ஊர்த்தலைவர்கள் மக்களுக்கு அறிவிக்கவே இல்லை.ரெண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்ற தைரியத்தில் ஊரின் தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அல்லாஹ் கூட இருப்பான் என்றும்,ராணுவம் எம்மை பாதுகாக்க எப்படியும் வந்துவிடுவார்கள் என்றும் சர்வதேசம் தட்டிக்கேட்கும் என்றும்.


1990ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் திகதி,ஆத்திரமுற்ற விடுதலை புலிகள் எனது வாப்பா உட்பட இன்னும் இருவரை கடத்திச் சென்று கொன்ற சம்பவத்தால் புலிகளின் மரண தன்டனை பட்டியலில் இருந்த வேறு சிலர் ஊரை விட்டு தப்பியோடி விட்டனர்.


அதன் பின்னர் காத்தாங்குடியில் ஹஜ்ஜுக்கு சென்று திரும்பிய பெருந்தொகையான மக்களை அவர்கள் பயணித்த வாகனத்தை ஜூலை 12ம் திகதி வழிமறித்து கொன்று குவித்த சம்பவமும், காத்தாங்குடியில் ஆகஸ்ட் 3ம் திகதி இரண்டு பள்ளிவாயல்களி்ல் இஷா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட புலிகளின் துப்பாக்கிச் சூட்டால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவங்கள்  உட்பட இன்னபிற புலிகளின் ஆக்கிரமிப்புக்களும் மனிதாபிமானத்தையும் ஒருசேர குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தையும்,


கண்ணுற்ற மக்கள் இனி நாங்களும் புலிகளால் குழி தோண்டி புதைக்கப்படுவோம் என்ற அச்ச நிலைக்கு திரும்பினார்கள். எனினும் ஒதுங்கிச் செல்ல இடமில்லாததால் அப்படியே இருந்து விட்டார்கள்.


மக்கள் எதிர்பார்த்தவாறு ஆகஸ்ட் 12ம் திகதி ஏறாவூர் மக்களை கொன்றொழிக்க நடுநிசி நேரத்தில் ஏறாவூரை சூழ்ந்து கொண்ட விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனம் அமைந்திருந்தது.


இருப்பினும் மர்ஹூம் ஜலால்தீன் போன்ற இளைஞர்களின் விவேகமான செயற்பாட்டினால் கொன்றொழிக்க வந்த புலிகளுக்கும் புலியின் வால்களுக்கும் 120 கொலையுடன் பயத்தை போட்டு பின்வாங்கச் செய்திருந்தான் அல்லாஹ் தஆலா.


அதற்கடுத்த இரண்டு நாட்களின் பின்னர் இந்த புலி வால்களில் பலருக்கு என்னவாயிற்று தெரியுமா?


புலிகளின் வால்களைக் கூட கண்டால் பயத்தால்  நடுங்கிக்கொண்டிருந்த தொடை நடுங்கியும் கூட, ராணுவத்திடம் புலி வாலின் தோளைத் தொட்டு’ சேர் இவன் புலி’ என்று காட்டிக்கொடுத்தார்கள். புலிகளின் வால்களில் சிலர் ஊரை விட்டு ஓட்டம் எடுத்தார்கள்.


ஜிப்ரி தைக்கா வீதியின் அருகில் அமையப்பெற்றிருந்த புலிகளின் அலுவலகத்தில் ஒய்யாரமாக பொழுதை கழிக்க புலிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு தெறிப்புக்காட்டி திரிந்த வால்களும் புலிகள் என்று மக்களால் முத்திரை குத்தப்பட்டு ராணுவத்தினரிடம் காட்டிப்கொடுக்கப்பட்டு உடனடி மரண தன்டனையை பெற்றுக்கொடுத்தார்கள்.


அந்த வகையில் ஏறாவூரின் தெறிப்புக்காட்டிக்கொண்டு திரிந்த புலி வால்களை மக்கள் தறுணம் வரும்வரை காத்திருந்து தமது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்கள்.

No comments

Powered by Blogger.