Header Ads



நீரை திறந்துவிட மறுக்கும் அரசாங்கம், கொந்தளிக்கும் மக்கள் - சமனலவெவ அணைக்கட்டு அருகில் பதற்றம்


சமனலவெவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு அருகில் இன்று (05) முற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.

பல நாட்களாக தமது நெற்செய்கைக்கு நீர் கிடைக்காமையால் சிரமத்தை எதிர்கொண்டுள்ள வலவ கமநல திட்டத்தின் விவசாயிகள் ஏதோ ஒரு வகையில் நீரை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு முன்பாக இன்று முற்பகல் கூடினர்.


உடவலவ நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பல மாதங்களாக மழை பெய்யாததால், உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் வற்றத்தொடங்கியுள்ளது.


உடவலவ நீர்த்தேக்கத்தை நம்பி 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கையும்  பயிர் செய்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


வறட்சி காரணமாக வயல்களும் மேட்டு நிலப் பயிர்களும் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சமனலவெவ நீர்த்தேக்கத்தில் உள்ள நீரை உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விடுவிக்குமாறு பல நாட்களாக விவசாயிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.


எனினும், இதற்கு உடனடியாக உறுதியான தீர்வொன்று அதிகாரிகளிடமிருந்து கிடைக்காததால், வலவ விவசாயிகள் இன்று முற்பகல் சமனலவெவ நீர்த்தேக்கத்திற்கு முன்பாக கூடினர்.


அழிவடையும் தமது நெற்செய்கைக்கு ஏதேனும் ஒரு முறையில் நீரை பெற்றுக்கொள்வதே அவர்களது நோக்கமாக அமைந்திருந்தது.


விவசாயிகள் அங்கு வருகை தருவதற்கு முன்னதாகவே பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


 விவசாயிகள் அனைவரும் சமனலவெவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு பிரவேசிக்கும் இடத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.


சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்ப்பாசனத்திற்கு பொறுப்பான தலைமை பொறியியலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்ட விவசாயிகள்,  பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


பின்னர் விவசாயிகள் அனைவரும் பொலிஸ் தடைகளை மீறி சமனலவெவ நீரித்தேக்கத்தின் அணைக்கட்டுக்குள் பிரவேசிக்கும் இடத்திற்கு செல்ல முயன்றபோது அமைதியின்மை ஏற்பட்டது.


திங்கட்கிழமை கமநல தலைவர்கள் ஐவருக்கு அதிகாரியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எற்படுத்திக்கொடுக்க முடியும் என உதவி பொலிஸ் அத்தியட்சகர், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.


எனினும், அதுவரை தம்மால் பொறுமை காக்க முடியாது என தெரிவித்த விவசாயிகள், மீண்டும் அணைக்கட்டை நோக்கி செல்ல முயற்சித்தனர்.


இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.

 

சுமார் 7 மணித்தியாலங்களாக அங்கிருந்த விவசாயிகள் பின்னர் கலைந்து சென்றனர்.


இதேவேளை, உடவலவ நீர்த்தேக்கத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற நீரின் அளவு மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


நிலவும் கடும் வறட்சியால் நீர் மட்டம் குறைந்து வருகின்றமையே இதற்கு காரணமாகும்.


நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு அளவு மட்டம் தற்போது 0.9% வரை குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ குணசேகர கூறினார்.


இந்த நிலையில், தற்போது விடுவிக்கப்படுகின்ற நீரின் அளவு விநாடிக்கு 359 கன அடிகள் வரை குறைவடைந்துள்ளது.


இந்த நீர் விவசாய செய்கைக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் கூறினார்.


விவசாய செய்கைக்கு நீர் விடுவிக்கப்படுமாயின், அதன் அளவு விநாடிக்கு 750 கன அடிகளை விட அதிகரிக்க வேண்டும்.


வலது மற்றும் இடது கால்வாய்கள் ஊடாக குடிநீர் தேவைக்கான நீர் தற்போது விநியோகிக்கப்படுவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சுட்டிக்காட்டினார்.


இடது கரைக்காக நீரை விநியோகிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.


நீர் கட்டுப்பாட்டு செயலகத்தின் ஆலோசனைக்கு அமைய, அடுத்த கட்ட தீர்மானங்களை எடுப்பதாகவும் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் குறிப்பிட்டார். newsfirst

No comments

Powered by Blogger.