Header Adsமறுமைக்குள் நுழைந்திருந்த நூற்று மூன்று பேர்கள்

 


பயங்கர இரவில் பள்ளிக்கு வெளியே....

+++++++++

Mohamed Nizous


இருபதாம் நூற்றாண்டின்

இறுதித் தசாப்தம்

எட்டிக் கொண்டிருந்த வருடம்


எட்டாம் மாதம்

இரண்டு நாட்களை விழுங்கி

மூன்றாம் நாளை

முடித்துக் கொண்டிருந்தது.


காத்தான்குடி என்ற

கலிமாக் கிராமம்

பூத்திருந்த இருளுக்குள்

புகுந்து கொண்டது.


இரவுத் தொழுகைக்கான

இறையில்ல அழைப்பொலி

பரவியது வான் வெளியில்

பக்தியாளர் விரைகின்றனர்.


மின்சாரம் இல்லாததால்

மிரட்டும் இருட்டுள்

சம்சாரங்கள்

சங்கடத்துடன் 

சமைத்துக் கொண்டிருந்தனர்.


இஷா முடிந்து வந்ததும்

விஷா முடிந்த

வெளினாட்டவர் போல

அவர் பசியால்.

அவதிப்படுவார் 

சுறுக்கா சோறு வைத்து

சுடச் சுடக் கொடுக்க வேண்டும்.

குடும்பத் தலைவி

குசினிக்குள் பரபரத்தாள்


தொழுதிட்டு வந்ததும்

தோளில் போட்டுக் கொண்டு

தூக்கமாக்குவார் வாப்பா


அதுக்கிடையிலே

ஆ வென்று சொல்லி

அச்சா தின்னனும்.

குழந்தை மொழியில்

இளந்தாய் கெஞ்சினாள்

அந்த

இஷாவின் 

இருளில்...


காக்கா வந்ததும்

கடைக்குப் போய்

கேக் வாங்கி வரச் சொல்லி

கேட்டு அழணும்

இஷாவுக்கு சென்ற

இளைய காக்காவுக்காய்

உசார் நிலையில் காத்தாள்

ஊட்டுக் கடைக்குட்டி


உருண்டு போயின

ஓரிரண்டு நிமிடங்கள்

இருண்டு கிடந்த ஊருக்குள்

இலேசாக ஒரு சத்தம்.


கொங்ரீட்கல் லோடை

கொட்டுறான்கள் போல.

பகலைல கொட்டாம

படுக்க போகக்க கொட்டினா

இருட்டில வாறவன்கள்

இடறி விழுவான்களே..

உஞ்சிலில் இருந்த படி

உம்மம்மா சொன்னா.

தெரியாதவன் கூட

தெருவில் விழுவதை

விரும்பாத சமூகத்தில்

விளைந்த மூத்தம்மா.


அடுத்தடுத்து சத்தம்

அசாதரணமாய்க் கேட்க

படுத்திருந்த ராத்தா

பதறி எழும்பினா

என்னமோ ஆபத்துடா

எட்டிப் பார்க்காதே.


ஐந்து நிமிடங்கள்

அச்சத்துள் கழிந்தன

ஜந்துகளின் வெறியாட்டம்

சரித்திரத்தில் கறையானது.


இருண்ட வீதியில்

எங்கிருந்தோ ஒரு குரல்

தூரத்தில் அலறுவது

துல்லியமாய் கேட்டது.

சுஜூது செய்யக்க

சுட்டுப் போட்டாண்டா

மஜீதிட வாப்பாவும்

மெளத்தாம்டா எண்டள்ளா

ஜீரணிக்க முடியாமல்

ஜீவன் தவித்தன

 

முதலாம் குறிச்சி

மூச்சுத் திணறியது

காத்தான்குடி முழுக்க

கதி கலங்கி நின்றது.

ஹுசைனியாப் பள்ளியில்

திசையெங்கும் உடல்கள்

மீரா பள்ளிக்குள்

பூராக இரத்தம்.


அடுத்த நாள் சுபஹ்

அழைப்பொலி கேட்ட போது

படுத்துக் கிடந்தனர்

பதில் சொல்ல உயிரின்றி.

நூற்று மூன்று பேர்கள்

நுழைந்திருந்தனர் மறுமைக்குள்


சுடச் சுடச் கொடுக்க

சோறாக்கிய வீட்டில்

சுடப் பட்டவனின் ரத்தம்

சேறாக்கியது தரையை


தொழுகை முடிந்த பின்

தோளில் தூங்கவென

காத்திருந்த பிள்ளைக்கு

கடைசியில் கிடைத்தது

தோளில் தூக்கிவரப்பட்ட

தொழுதவனின் உடல்தான்


காக்கா வரும்வரை

காத்திருந்த தங்கச்சி

ஏக்கத்தால் அழுதது

இன்னும் மறக்கல்ல


அன்று சுட்டது

அடி மனதை சுடுகிறது

என்றும் மாறாது

இந்தக் காயங்கள்

No comments

Powered by Blogger.