செயற்கை நுண்ணறிவு மூலோபாயத்தில் சவுதி அரேபியா முதல் இடம்
- காலித் ரிஸ்வான் -
சமீபத்தில் வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு அறிக்கையின் "அரசாங்க மூலோபாயம்" பிரிவில் சவூதி அரேபியா உலகளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. இது உலகின் 60 க்கும் மேற்பட்ட நாடுகளை மதிப்பிட்டு பெறப்பட்ட அறிக்கையாகும் என சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
உலக செயற்கை நுண்ணறிவுச் சுட்டி என்பது ஐக்கிய இராச்சியத்தினை தளமாகக் கொண்ட செய்தி வலையமைப்பான டோர்டொய்ஸ் மீடியாவால் (Tortoise Media) வெளியிடப்படும் செயற்கை நுண்ணறிவின் சர்வதேச வகைப்பாட்டின் சுட்டிகளில் ஒன்றாகும். இது 100க்கும் மேற்பட்ட சுட்டிகளை உள்ளடக்கியுள்ளது. இவை பின்வரும் ஏழு பிரதான வகைப்படுத்தலின் கீழ் அடங்கும். அரச மூலோபாயம், ஆராய்ச்சி, மேம்பாடு, திறன், உள்கட்டமைப்பு, இயக்க சூழல் மற்றும் வணிகம்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய முன்முயற்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு, செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய இலக்குகளை உருவாக்குதல் மற்றும் கண்காணித்தல், AI துறையை வளர்க்கும் நோக்கில் எடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் அரசாங்க நிறுவனங்களது அதீத ஈடுபாடு, தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய வியூகத்தை நிறுவுதல் போன்றன அரசு மூலோபாய பிரிவில் சவூதி அரேபியா 100 சதவீதமான மதிப்பெண்களைப் பெற காரணமாக அமைந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவின் உருவாக்கி நிலைபெறச் செய்வதற்கான உறுதியான அர்ப்பணிப்பை சவூதி அரேபியா ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1979 ஆம் ஆண்டில், சவூதி அரேபிய தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தை (SDAIA), AI தொடர்பான அனைத்து அமைப்புகளையும், அதன் வளர்ச்சியையும் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பான மைய அதிகாரியாக நிறுவ அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
SDAIA இன் இயக்குநர்கள் குழுவின் தலைவரான பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மானின் தூர நோக்கங்களையும், இராச்சியத்தின் விஷன் 2030 இன் நோக்கங்களையும் அடைய தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தேசியத் திட்டங்களை SDAIA சிறப்பாக வழிநடாத்தியது.
சவூதியின் இந்த சாதனை விஷன் 2030 இன் இலக்குகளுடன் ஒன்றித்துப் பயணிக்கிறது, இது பல்வேறு தளங்களில் உலகளாவிய குறிகாட்டிகளில் சவூதி அரேபியாவானது முக்கிய இடத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment