Header Ads



பலஸ்தீனர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கூறிய தகவல்



பாராளுமன்ற அமர்வில் எதிரட்ச்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைய 'தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம் பெற்றது.இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை.


தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே,


இன்றைய தினம் நாம் பாலஸ்தீன மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்காக எமது உயர் சபையின் ஊடாக பெரும் குரல் எழுப்ப நமக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் இந்த பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக பெரும் குரல் கொடுக்க இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் முன்மொழிவுக்கு அமைவாக நிரோஷன் பெரேரா அவர்களினால் வழிமொழியப்பட்ட பிரேரணையின் ஊடாக பாலஸ்தீன மக்களின் உரிமைகளை வலுப்படுத்தும் பயணத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. 


இந்தத் தருணத்தில் பாலஸ்தீன மக்கள் மீது பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. தாய்மார்கள், பிள்ளைகள், பாலஸ்தீன மக்கள் இன்று பாரிய அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அரசின் கொடூரத்தில், பாலஸ்தீன மக்களின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கொடூரமான, கொலைகார, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு உள்ளாகும் பாலஸ்தீன மக்களுடன் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் ஒன்றுபட்டு நிற்பார்கள் என்பதை இந்த உயர்ந்த சபையில் மிகத் தெளிவாக அறிவித்துக் கொள்கின்றோம். இந்தக் கொடூரமான கொலைக் கலாச்சாரத்தை நிறுத்தி, பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும், ஒற்றுமையுடனும் இப்பிரச்சினையை தீர்க்க இஸ்ரேலை கேட்டுக்கொள்கிறோம்.

 

1948 அரபு-இஸ்ரேல் போர் மற்றும் அதைத் தொடர்ந்த மோதல்களுக்குப் பிறகு - அதாவது 1956 சுயஸ் கால்வாய் மோதல், யோம் கிப்பர் மோதல், 06 நாள் போர், லெபனான் போர் மற்றும் சிரியப் போர் - பின்னர் அதிலிருந்து இன்று வரை பாலஸ்தீன மக்களின் ஜனநாயக உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்ற விடயத்தின் அடிப்படையில் மோதல்கள் விரிவடைந்து சென்றுள்ளன. 


இந்த இரண்டு தரப்பும் ஒன்றுக்கொன்று இணக்கமாக வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அதுபற்றி எந்த விவாதமும் இல்லை. பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசீர் அராபத் மற்றும் இஸ்ரேல் பிரதமர்  இட்சாக் ராபின் - ஜனாதிபதி பில் கிளிண்டனின் பேச்சுவார்த்தை ஏற்பாடுகளை உருவாக்கும் பணியின் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தம் என்ற வரலாற்று உடன்படிக்கையை எட்டியதை நினைவு கூர்கிறேன். மோதலின் இரு தரப்பினரும் மிகவும் சமநிலையான அணுகுமுறையை எடுத்தனர்; பல்வேறு தியாகங்களைச் செய்து, இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு  வேலைத் திட்டமொன்று கலந்துரையாடப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதற்குப் பின் வந்த காலகட்டத்தில், அரபு நாடுகளில் அமைதியின் விடியலை நாம் காணவில்லை. மோதல்கள் வழக்கமாகிவிட்டது. இது விதிவிலக்கு என்பதை விட வழக்கமாக மாறியது. 

 

 ஐக்கிய நாடுகள் சபையின்  242 மற்றும் 338 இலக்க தீர்மானங்கள் , கேம்ப் டேவிட் இணக்கப்பாடுகள், ஒஸ்லோ இணக்கப்பாடுகள், ஆபிரகாம் இணக்கப்பாடுகள் போன்ற பல இணக்கப்பாடுகள் உள்ளன, அவை  எமக்கு, சர்வதேச சமூகத்திற்கு நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைக்கின்றன.


தற்போது பாலஸ்தீன மக்கள் கொலைக் கலாச்சாரத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் மீது தோட்டாக்களும் ராக்கெட்டுகளும் மழை போன்று பொழிகின்றன. உண்மையில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை என்னவென்றால், அந்தச் சூழலில் உயிர் இழப்புகள், உட்கட்டமைப்பு அழிவுகள் மற்றும் பெரிய அளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போட்டியானது பாலஸ்தீனத்தின் முழு சமூக-பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே, நிறவெறிக் கொள்கையை நடைமுறைப்படுத்த எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நிறவெறிக் குற்றத்தை அடக்குதல் மற்றும் தண்டனை பற்றிய 1973 ஆம் ஆண்டு சர்வதேச சமவாயம்,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான  1998 ஆம் ஆண்டு ரோம் சாசனம் இவை அனைத்தும் இனவாத அதிகாரங்கள் நடத்தப்படக்கூடாது என்பதற்கும் அது சட்டவிரோதமானது என்பதற்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது. 


உலகின் முக்கிய வகிபாகங்களை வகிக்கும் தரப்பினரை நோக்கி  நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் சரியான முடிவுகளை சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் எடுக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அமைதியும் நல்லிணக்கமும் பேணப்படுவதை உறுதிப்படுத்தவும்,பாலஸ்தீனியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவும்,கொலைகார ஆட்சிகளினால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களைத் தடுத்து, அமைதியான மற்றும் இணக்கமான உறவைப் பேணுவதன் மூலம், இந்த இரு தரப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள அனைவரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதை உறுதி செய்யவும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் மத்திய கிழக்கில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே  எங்களின் நிலைப்பாடாகும்.  

 

எந்த விலை கொடுத்தாவது பெற்றுக் கொள்ளும் அமைதி மற்றும் பாலஸ்தீன மக்களின் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்து, இஸ்ரேலும் பாலஸ்தீனும் ஒன்றுக்கொன்று இணக்கமாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் அமைதி எமக்குத் தேவை.நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதுடன் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கவும் வேண்டும். அவர்களின் தேசியம்,அரச நிருவாகம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இது சர்வதேச அளவில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும். இருப்பினும், பாலஸ்தீனத்தில் நடக்கும் கொலைகாரச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, விரைவாக இந்த சமாதான உடன்படிக்கைகளை  செயல்படுத்த அந்த சக்தி வாய்ந்த சர்வதேச பங்குதாரர்களுக்கு திறமையும், உறுதியும், அரசியல் ஆர்வமும் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 

எனவே,இலங்கை உங்களுடன் இருக்கின்றது என்பதை பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன். தேசியத்துவம் மற்றும் அரச நிர்வாகத்திற்கான உங்களின் அபிலாஷைகளுக்கும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கும் நாங்கள் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இது ஒரு கட்டாயத் தேவை என்பது எங்கள் நம்பிக்கையாகும்.

 

நன்றி.


No comments

Powered by Blogger.