Header Adsகிருஷ்ணகிரியில் பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில், வெல்டிங் கடை, ஹோட்டல்,வாட்டர் கம்பெனி மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன.


ரவி, வழக்கம் போல் பட்டாசு குடோனில் பட்டாசுகளை பேக்கிங் செய்துள்ளார். அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா,ருத்தீஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.


இன்று காலை,9:30 மணி அளவில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் உள்ள கடைகள் குடியிருப்பு பகுதிகளில் தீ பரவி வெடித்து சிதறியும் உள்ளது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்பு, இடிந்து விழுந்த கட்டிடங்களை,பொக்லைன் மூலம் அகற்றி சடலங்களை மீட்டு வருகின்றனர்.


இதுவரை பட்டாசு குடோன் நடத்திய ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகன் ருத்தீஷ், மகள் ருத்திகா ஆகிய நான்கு பேர், அருகில் வெல்டிங் கடை நடத்திய இப்ராஹிம், இம்ரான் ஆகிய இருவர், ஹோட்டல் நடத்திய ராஜேஸ்வரி, வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்த சரசு, ஜேம்ஸ் ஆகிய 9 பேர் இறந்துள்ளதாக தெரிந்துள்ளது. 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பட்டாசு கடையில் இருந்தவர்கள் உடல் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் உடல் பாகங்கள் சிதறி விழுந்துள்ளன. விபத்தின் போது ஓட்டலில் இருந்த 4 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திமுக எம்எல்ஏ மதியழகன், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.


நிகழ்விடத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்," பட்டாசு விற்பனையகத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பட்டாசு கடை உரிமம் பெற்றுத்தான் செயல்பட்டு வந்துள்ளது. அதற்கான ஆவணங்களை எடுக்கச்சொல்லியுள்ளேன். இதுவரை ஆறு உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா, மேலும் உயிரிழப்பு இருக்கிறதா போன்ற தகவல்கள் முழுமையான மீட்பு பணிகள் முடிந்தவுடன் தெரியவரும்" என்றார்.


விபந்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த பல வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீது கட்டிட இடிபாடுகள் சிதறி விழுந்து காயம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.


இச்சம்பவத்தை நேரில் பார்த்த சுகையில் நம்மிடம் பேசும்போது "10 மணி சுமாருக்கு இந்த வழியாக நடந்து போனேன். சுடுகாட்டை தாண்டும் போது வெடி சத்தம் கேட்டது. திரும்பி வந்து பார்த்த போது பட்டாசு கம்பெனியில் வெடித்து கொண்டு இருந்தது. பெண்கள் எரிந்து கொண்டு இருந்தாங்க, அங்கங்கே உடல் சிதறி கிடந்தாங்க. வெல்டிங் ஓர்க்‌ஷாப்பில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். அடிபட்டவர்களை ஆம்புலென்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வந்தோம். சிலிண்டரால் இந்த விபத்து நடைபெறவில்லை" என்றார். தான் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறிய அவர், பட்டாசு கம்பெனியால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததாக கூறினார்.


ஆட்சியர் பிபிசி தமிழிடம் பேசும்போது இந்த விபத்தில், 21 பேர் காயமடைந்தனர். இதில் ஒன்பது பேர் இறந்துள்ளதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார். மீதமுள்ள 11 பேர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் ஆரோக்கியசாமியை கைது செய்து, விசாரணை நடத்தி வருவதாகவும், வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசு கடைக்கு பரவியதாக கூறப்பட்டது. போலீஸ் விசாரணையில் சிலிண்டர் வெடித்து இவ்விபத்து நடக்கவில்லை எனதெரியவந்துள்ளது.


"கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும்,படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணமாக வழங்கப்படும்" என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மீட்பு பணியில் ஈடுபட்ட , கிருஷ்ணகிரி டவுன் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கே.வெங்கடாசலம் நம்மிடம் பேசுகையில் ரவி என்பவர் பட்டாசு விற்பனை கடை நடத்தி வருகிறார்.அவர் விற்பனை செய்வதோடு பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளார். பட்டாசுகளை தயாரிக்கும் போது இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்டுள்ளோம். மற்றவர்களின் உடல் சிதறியிருந்தது. சிலிண்டர் வெடித்து இவ்விபத்து நடக்கவில்லை எனவும், மீட்பு பணியில் 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தார். BBC

No comments

Powered by Blogger.