Header Ads



பாஜகவை தோற்கடிப்பதற்கான வியூகங்கள், 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'INDIA என பெயர் சூட்டல்


- திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது -


வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டத்தை கடந்த மாதம் நடத்தினர். அதில், 16 கட்சிகள் கலந்து கொண்டன.


இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் திங்கட்கிழமை தொடங்கியது. முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.


இந்த நிலையில் பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்க காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் லாலு பிரசாத் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகமூபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், கேரளா மாநில காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மணி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஜி.பிரைன் உள்பட 26 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


செவ்வாய்க்கிழமை 2-வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? என்பது குறித்தும் பேசப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களை பரிந்துரைக்க திங்கள்கிழமை நடந்த இரவு விருந்தில் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடந்த 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம்: I - Indian, N - National, D - Democratic, I - Inclusive, A - Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி.


வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கான வியூகங்கள் இந்த கூட்டத்தில் வகுக்கப்படவுள்ளன. பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளன.


கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தன. இந்த கூட்டணி 2014-ஆம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை இழந்தது.


தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெறாத திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.


இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.


இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி(Indian National Democratic Inclusive Alliance) ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளை கொண்டு ‘இந்தியா’ என சுருக்கமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சிவசேனை கட்சிகள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். மேலும் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களின் அடுத்த கூட்டம் மும்பையில் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





No comments

Powered by Blogger.