பேத்தை மீனை உண்ட பெண் உயிரிழப்பு - கனடாவுக்கு செல்லவிருந்த நிலையில் சோகம்
மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், ஒவ்வாமை ஏற்பட்ட மற்றவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் தேர்ச்சிவாய்ந்த சமையற்கலை நிபுணர்களால் நச்சுத்தன்மை நீக்கப்பட்டு பக்குவமாக சமைக்கப்படும் puffer fish மீனை பலரும் விரும்பி உட்கொள்கின்றனர்.
எனினும், மட்டக்களப்பில் குறித்த வகை மீனை நேற்றைய மதிய உணவில் சேர்த்துக்கொண்ட இளம் தாய் உயிரிழந்துள்ளார்.
S. உயேந்தினி எனப்படும் அப்பெண் ஒரு பிள்ளையின் தாய் ஆவார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி கனடா சென்று தனது கணவருடன் வாழ்வதற்கான எதிர்பார்ப்பில் இருந்த இளம்தாயே இவர்.
உயேந்தினியின் தாய் நேற்று (08) மாலை மதிய உணவிற்காக கடற்கரைக்கு மீன் வாங்கச்சென்றுள்ளார்.
இதன்போது, கடற்கரையில் உள்ள மீன்களை குறித்த தாய் சேகரித்ததாகவும் , இவை சமைப்பதற்கு உகந்த மீன்கள் இல்லை என மீனவர்கள் தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல் அவர் மீன்களை எடுத்துச்சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மீன்களை உண்ட குறித்த குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மயங்கிய நிலையில், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து 27 வயதான உயேந்தினி உயிரிழந்துள்ளார்.
உயேந்தினியின் மூன்றரை வயதான பிள்ளையும் அவரது 50 வயதான தாயாரும்,19 வயதான தம்பியும், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
ஒவ்வாமையின் பின்னர் இவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment