Header Ads



இன்றைய அரபா தினத்தின், குத்பாப் பேருரை (தமிழில்)


இன்று 27-06-2023 நிகழ்த்தப்பட்ட அரபா தினத்தின் குத்பாப் பேருரை.  நிகழ்த்தியவர், பேராசிரியர் அஷ்ஷெய்க்  யுஸுப் பின் ஸஈத் (حفظه الله)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன், நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் அவன் தூதருமாவார்கள் என்று சாட்சி சொல்கின்றேன். ஒருவருக்கொருவர் உதவி செய்யுமாறும் ஒற்றுமையாக இருக்குமாறும் ஏவினார்கள். ஒருவரை ஒருவர் விரட்டுதல் பிரச்சினைப் படுதல் என்பவற்றை விட்டும் தடுத்தார்கள். அவரின் மூலம் அல்லாஹ் உள்ளங்களை ஒன்று சேர்த்தான். நிலமைகளை சீர்செய்தான். அமானிதத்தை நிறைவேற்றுமாறும் தூதுச் செய்தியை எற்றிவைக்குமாறும் அவருக்கு ஏவினான். அல்லாஹ் சொல்கிறான் ‘‘  (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான்’’ (7: 158) 


அல்லாஹ் அவர்கள் மீதும் அவரது குடும்பத்தார் தோழர்கள் அனைவர் மீதும் அதிகம் ஸலாம் சொல்வானாக. 


இறைவிசுவாகிளே! அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதன் மூலம் அவனை அஞ்சி நடந்துகொள்ளுங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்தவர்களாக சீர்திருத்தவாதிகளாக இருப்பதற்காக அவனது மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் அதனது வரையறைகளைப் பேணுங்கள். அல்லாஹ் சொல்கிறான் ‘‘அவை அல்லாஹ்வின் வரையறைகளாகும் யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகின்றாரோ அவர்களை கீழால் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் நுழைவிப்பான் அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பாகள் அதுவே மகத்தான வெற்றியாகும்.’’ (4:13) 


அல்லாஹ் அல்லாதவருக்கு எந்தவொரு வணக்கத்தையும் செலுத்தாமல் இருப்பது அல்லாஹ் இட்ட வரையறையாகும். ‘‘அல்லாஹ்விற்கே சட்டமியற்றும் அதிகாரம் உண்டும், அவனைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது என அவன் ஏவியுள்ளான் அதுவே நிலையான மார்க்கமாகும் என்றாலும் அதிகமான மனிதர்கள் அதை அறியமாட்டார்கள்.’’ (12: 40)  யார் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குகின்றானோ அவன் நேர்வளி பெற்றவர்களில் இருப்பான் அது அவனுக்கு வெற்றியாகவும் நல்ல இறுதி முடிவைப் பெற்றுக்கொடுப்பதாகவும் இருக்கும். அல்லாஹ் சொல்கிறான் ‘‘மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.’’ (16: 36) அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை எனும் தவ்ஹீதை உறுதிப்படுத்தியவனாக அல்லாஹ் சொல்கிறான் ‘‘அல்லாஹ்வோடு வேறு கடவுளை அழைக்காதீர்கள், அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவனைத் தவிர ஏனைய ஒவ்வொன்ரும் அழியக்கூடியதே அவனுக்கே சட்டமிடும் அதிகாரம் உள்ளது அவனின் பாலே மீட்டப்படுவீர்கள்.’’ மேலும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதை பின்வரும் அவனது வசனத்தில் உறுதிப்படுத்துகின்றான். ‘‘உங்களில் எந்த ஆணுக்கும் முஹம்மத் தந்தை கிடையாது என்றாலும் அவர் அல்லாஹ்வின் தூதராவார் மேலும் நபிமார்களில் இறுதியானவருமாவார்.’’ இந்த சாட்சியம் அவரது செய்திகளை உண்மைப்படுத்துவதையும் அவரது கட்டளைகளுக்கு கட்டுப்படுவதையும் அவரது விலக்கள்களை தவிர்ந்துகொள்வதையும் அவரது கொண்டு வந்தவற்றைக் கொண்டுதான் நாம் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதையும் அவசியப்படுத்துகின்றது. 


(அல்லாஹ்வின் நல்லடியார்களே!) பகலிலும் இரவிலும் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவது நபியவர்கள் ஏவியதாகும் மேலும் ஸகாத்தைக் கொடுப்பது வசதியுள்ளவர் அவரது சொத்திலிருந்து சிறிய ஒரு பகுதியை தனது தோழர்களான ஏழைகளின் துயர்துடைக்க கொடுக்கின்றார். பொதுப்பயன்பளில் பங்களிப்புச் செய்வதற்கும் வழங்குகின்றார் அல்லாஹ் சொல்கிறான் ‘‘ தொழுகையை நிலைநாட்டுங்கள் ஸகாத்தையும் கொடுங்கள்.’’ மேலும் அல்லாஹ் ஏவிய விடயம்தான் ரமழான் மாதம் நோன்பிருப்பதாகும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘ உங்களில் யார் அந்த மாதத்தை அடைந்தாரோ அவர் நோன்பிருக்கட்டும்.’’ மேலும் அல்லாஹ் ஏவய விடயம்தான் அல்லாஹ்வின் பரிசுத்த வீட்டை  ஹஜ் செய்வதாகும் அல்லாஹ் சொல்கிறான்  ‘‘மனிதர்களில் யார் ஹஜ்ஜுக்கு செல்வதற்கு சக்தி பெற்றுள்ளாரோ அவர் அல்லாஹ்விற்காக கஃபதுல்லாவை ஹஜ் செய்வது அவர் மீது கடமையாகும்.’’ 

இவைதான் இஸ்லாத்தின் தூண்களாகும். நபி (ஸல்) அவர்கள கூறினார்கள் ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை முஹம்மத் அவனது தூதராவார் என்று நீ சாட்சி சொல்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும் ரமழான் மாதம் நோன்பிருப்பதும், சக்தியிருந்தால் ஹஜ் செய்வதுமாகும்.’’ 


ஈமான் என்பது அல்லாஹ்வை நீ நம்புவதும் அவனது வாணவர்கள், அவனது வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், நன்மை தீமைகள் அனைத்தும் அவன் நாட்டப்படியே நடக்கிறது என்றும் நீ நம்புவதாகும். 


இஹ்ஸான் என்பது அல்லாஹ் நீ பார்த்துக்கொண்டிருப்பதைப் போல அவனை நீ வணங்குவதாகும் அவனை நீர் பார்க்கவில்லை என்றாலும் அவன் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான். 

அல்லாஹ்வின் சங்கை மிக்க வீட்டில் ஹஜ் செய்ய வந்திருக்கும் ஹாஜிகளே நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுடைய குத்பாவிலே பின்வருமாறு சொன்னார்கள் ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்களின் இரட்சகன் ஒருவனே நிச்சயமாக உங்களின் கடவுள் ஒருவனே  அறிந்துகொள்ளுங்கள் அரபியை விட அரபி அல்லாதவருக்கோ, அரபி அல்லாதவரை விட அரபிக்கோ எந்த சிறப்பும் இல்லை கருப்பரை விட வெள்ளையனுக்கோ வெள்ளையனை விடவும் கருப்பனுக்கோ எந்த சிறப்பும் இல்லை தக்வாவைக்கொண்டே அவர்களுக்குள் ஏற்றத்தாள்வு உள்ளது. அறிந்து கொள்ளுங்கள் நான் எத்திவைத்துவிட்டேனா? இந்த நாள் எவ்வளவு கன்னியம் பொருந்தியதோ இந்த மாதம் எவ்வளவு கன்னியம் பொருந்தியதோ இந்த ஊர் எவ்வளவு கன்னியம் பொருந்தியதோ அதுபோல் நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உயிர்களையும், உங்களின் பொருளாதாரத்தையும் உங்களின் மானகங்களையும் அடுத்தவர்களுக்கு ஹராமாக்கியுள்ளான் எனவே மொழிகள் வேறுபடுவதும் நிறங்கள் வேறுபடுவதும் பிரதேசங்கள் வேறுபடுவதும் முரண்படுவதற்கும் பிரச்சினைப்படுவதற்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க காரணம் அல்ல. மாறாக அது அல்லாஹ் இந்த உலகத்தில் வைத்துள்ள அவனது அத்தாட்சிகளில் ஒரு அத்தாட்சியாகும்  அல்லாஹ் சொல்கிறான் ‘‘ நிச்சயமாக வாணங்களையும் புமியையும் படைத்ததும் உங்களின் மொழிகள் நிறங்கள் மாறுபடுவதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்தும் உள்ளதாகும். நிச்சயமாக அறிவாளிகளுக்கு அதில் அத்தாட்சிகள் உள்ளது.’’ 


ஒற்றுமையை ஏவியதும் ஒருவருக்கொருவர் பாசம் கொள்வது ஐக்கியத்துடன் வாழ்வது பிரிவினைகளை  முரண்பாடுகளை விட்டும் தடுத்ததும் நபியவர்கள் கொண்டுவந்ததாகும் அதை இஸ்லாத்தின் போதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அல்லாஹ் சொல்கிறான் ‘‘நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்துவிடாதீர்கள். அல்லாஹ்வின் அருளை ஞாபகமூட்டுங்கள் நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்களின் உள்ளங்களுக்கு மத்தியில் அவன் இணைப்பை உண்டாக்கினான் அதனால் அவன் அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆனீர்கள்.’’ நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘‘நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதையும் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருப்பதையும் அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பற்றிப்பிடித்துக்கொள்வதையும் அதில் பிரியாமல் இருப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு விரும்புகின்றான்.’’ இதனால்தான் அல்லாஹ் அவனது தூதரின் விடயத்தில் அவரது தோழர்கள் ஒன்றினைந்திருப்பதை சொல்லிக்காட்டுகிறான். அல்லாஹ் சொல்கிறான் ‘‘அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான். மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (8: 62, 63)


பிரிவிணையை தடுத்த அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் ‘‘நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’’ (6:159)  மேலும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘ (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.’’ (3:105) ஏனெனில் ஒற்றுமையாக இருப்பதில்தான் உலகத்தின் மார்க்கதின் நலவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன தீவினைகள் நீங்குகின்றன அதன் மூலம் நன்மைகளிலும் தக்வாவிலும் ஒருக்கொருவர் உதவி செய்துகொள்வதும் உருவாகின்றது. அதன் மூலம் உண்மை வெற்றியளிக்கப்படுகிறது அசத்தியம் அழிக்கப்படுகின்றது. எதிரிகள், பொறாமைக்காரர்கள் முஸ்லிம்களைத் தாக்க எதிர்பார்த்திருப்போரின் எண்ணங்கள் தவிடுபொடியாக்கப்படுகின்றன. எப்போது ஒற்றுமை குழைந்துவிடுகின்றதோ அப்போது பிளவுகளும் ஒருவர் மீது ஒருவர் வஞ்சகம் கொள்வதும் நுழைந்துவிடுகின்றது. நோக்கங்களுக்கு நேர் எதிரானவை நடக்கின்றன அல்லாஹ்வால் தடை செய்யப்பட்ட உயிர்கள் போக்கப்படுகின்றன. அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் ஹலாலாக்கப்படுகின்றன கொரவம் கண்ணியம் அழிக்கப்படுகின்றது. அதனால் இஸ்லாமிய சமூக முன்னேற்றம் தடுக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பது கஸ்டமாகிவிடுகின்றது. 

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘‘முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் அன்பு கொள்வதிலும் பாசம் கொள்வதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்கள் அதில் ஒரு உறுப்புக்கு நோய் வந்தால் அடுத்த உறுப்புக்கள் விழித்திருப்பது சூட்டைத்தாங்கிக் கொள்வது கொண்டு அந்த நோயை நிவர்த்திக்க முயற்சிக்கின்றன.’’ நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘‘ஒரு முஃமினுக்கும் இன்னொரு முஃமினுக்கும் இடையில் உள்ள உறவு ஓர் கட்டிடத்தைப் போன்றதாகும் அதன் சிலது சிலதை இருக்கி தாங்கிப்பிடுக்கின்றன.’’ நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி கூட்டமைப்பிலே உள்ளது அதை விட்டும் பிரிந்தவர்களுடன் ஷைத்தான் இருப்பான். பிரிவினை முரண்பாடுகளால் தனிமனிதனிலும் குடும்பத்திலும் சமூகத்திலும் வந்திருக்கின்ற வேதனைக்குரிய நிலைகளினால் நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியமாகின்றது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘நிச்சயமாக இந்த வேதத்தில் முரண்பட்டவர்கள் மிகவும் தூரமான பிழவில் உள்ளார்கள்.’’ எனவே இங்கிருந்துதான் நடைமுறைச்சாத்தியமான காப்பீடுகளையும் போதிய பாதுகாப்பையும் இடுகின்றது. அவை சமூகத்தை அழிக்காதவைகளாக சிதைக்காதவைகளாக இருக்கின்றன. சமூகத்தின் கட்டுக்கோப்பை உடைப்பதைத் தடுக்கின்ற அதன் தூண்களை குழைக்கின்றவற்றைத் தடுக்கின்ற விதிகளை இடுகின்றது. குடும்பம் சமூகம் நாடு என்ற அடிப்படையில் அனைத்திற்கும் இவை இடப்பட்டுள்ளன. மாறாக உலகம் அனைத்திற்கும் இது இடப்பட்டுள்ளது. இதனால்தான் முஸ்லிம்களை பிரச்சினையின்போது குர்ஆனின் பாலும் ஸுன்னாவின் பாலும் மீளுமாறு அல்லாஹ் ஏவியுள்ளான். ‘‘நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.’’ (4:59) மேலும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.’’ (41:10) மேலும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘நபியே! உம்மீது இந்த வேதத்தை நாம் இறக்கிவைத்திருப்பது அவர்கள் எதில் முரண்பட்டுள்ளார்களோ அதைத் தெளிவுபடுத்தவே ஆகும் மேலும் அது நேர்வழியாகவும் முஃமின்களுக்கு அருளாகவும் உள்ளது.’’ 


மேலும் அவர்களை நற்பண்புகளுடன் நடக்குமாறும் அடுத்தவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் இரக்கத்தோடு நடக்குமாறும் ஏவியுள்ளான் அல்லாஹ் சொல்கிறான் ‘‘அல்லாஹ் செய்த அருளின் காரணமாக அவர்களுக்கு நீர் மிருதுவானவராக இருந்தீர் நீர் கடுகடுப்பானவராக இருகிய உள்ளம் கொண்டவராக இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் சென்றிருப்பர் எனவே அவர்களை மன்னிப்பாயாக அவர்களுக்காக பிழைபொருக்கத் தேடுவாயாக விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக’’ மேலும் நல்ல பண்புகளில் அவர்களை ஆர்வமூட்டியுள்ளதோடு அடுத்தவர்களின் தவறுகளில் பொறுமையாக இருக்குமாறும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் பிரச்சினைப்படாதீர்கள் தோற்றுப்போவீர்கள் உங்களின் பலம் குன்றிவிடும் பொறுமையை கடைப்பிடியுங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.’’ மேலும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.’’ (3: 133, 134) 

ஒற்றுமையை உருவாக்கும் நோக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் சமூக ஒற்றுமையையும் குடும்பப்பினைப்பையும் ஈமானிய உறவையும் உறுதிப்படுத்தும் வகையில் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. குடும்ப உறவுகளைச் சேர்ந்து வாழுமாறு ஏவியுள்ளது, கணவன் மனைவியின் கடமைகள் உரிமைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. பெற்றார்கள் பிள்ளைகளின் கடமைகளையும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் குடும்பங்களுக்கும் அண்டைவீட்டாருக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்யுமாறு ஏவியுள்ளது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.’’ ((3:36)  

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘‘உங்களில் ஒருவரும் தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராகமாட்டார்.’’ நல்லவற்றுக்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுமாறு மார்க்கம் ஏவியுள்ளது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘தக்வாவிற்கும் நன்மையான விடங்களிலும் ஒருவருக்கொருவர் உதவிடுங்கள் தீமை மற்றும் அநியாயத்திற்கும் உதவி செய்யாதீர்கள்.’’ மோசமான பேச்சுக்களை விட்டும் தடுத்துள்ளது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘நல்லவற்றை பேசுமாறு என்னுடைய அடியார்களுக்கு சொல்வீராக.’’ நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் பிழவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தவே முயற்சிக்கிறான். அல்லாஹ் சொல்கிறான் ‘‘ நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாகவே இருக்கின்றான்.’’ 


மேலும் வதந்திகள் சமூகத்தைப் பிரிக்கும் பொய்யான பேச்சுக்களுக்குப் பின்னால் ஓடுவதை மார்க்கம் தடுத்துள்ளது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.’’ (49:6) 

எனவே, இதனடிப்படையில் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குழைப்பதை இலக்காகக்கொண்ட பேச்சுக்கள் பொய்களில் முஃமின்கள் கவனமாக இருப்பது அவசியமாகின்றது. இன்றைய தினம் நீங்கள் அரபா திடலிலே ஒன்று சேர்ந்திருப்பதைப் போல மேலு ஜும்ஆ தொழுகைக்காகவும் ஜமாஅத்துத் தொழுகைக்காகவும் ஒன்று சேர்வதைப் போல அல்லாஹ் சில வணக்கங்களை கூட்டாக நிறைவேற்றுமாறு சொல்லியிருப்பதும் இதனடிப்படையிலானதாகும். 


மேலும் சமூக ஒற்றுமையைத் தூண்டும் இன்னொரு விடயம் இறைவன் ஏற்படுத்தியுள்ள சமூகப் பாதுகாப்பாகும் ஸகாத் கொடுத்தல், அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல், வக்புகளைச் செய்தல் போன்றவற்றின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.’’ (2:254) இதனால்தான் அல்லாஹ் சண்டையில் ஈடுபடும் சகோதரர்களுக்கு மத்தியில் அவர்கள் சகோதரர்கள் என்பதை ஞாபடுத்தி அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை உருவாக்குமாறும் ஒருவருக்கொருவர் மன்னிக்குமாறும் கட்டளையிடுகின்றான். அல்லாஹ் சொல்கிறான் ‘‘நிச்சயமாக முஃமின்கள் சகோதரர்களாகும் எனவே, உங்களின் சகோதரர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.’’  எனவே, சமூகத்தின் அங்கத்தவர்களை ஒற்றுமையாக இருப்பதற்கு தூண்டுவதும் அதற்கு பயிற்றுவிப்பதும் சமூகத்தின் மீது கடமையாகும். அல்லாஹ் சொல்கிறான் ‘‘நிச்சயமாக உங்களுடைய இந்த சமூகம் ஒரே சமூகம்தான் நானே உங்களின் இரட்சகன் எனவே என்னையே வணங்குங்கள்.’’ மேலும் அல்லாஹ் சொல்கிறான் ‘‘நிச்சயமாக இதுவே நேரான எனது பாதை அதை விட்டு ஏனைய பாதைகளைப் பின்பற்றாதீர்கள் அது அவனது பாதையை விட்டும் உங்களை பிரித்துவிடும்.’’ மேலும் அல்லாஹ் சொல்கிறான். ‘‘நீங்கள் தக்வா உள்ளவர்களாக ஆகும் பொருட்டு அல்லாஹ் அதைக் கொண்டே உங்களுக்கு உபதேசிக்கின்றான்.’’ 


மேலும் சமூக ஒன்றுமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. அல்லாஹ் சொல்கிறான் ‘‘விசுவாசங் கொண்டவர்களே அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள் அவன் தூதருக்கும் அதிகாரமளிக்கப்பட்டவர்களுக்கும் கட்டுப்படுங்கள்.’’ நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘‘தீமையைக் கொண்டு ஒரு முஸ்லிம் ஏவப்படாதவரை அவன் விரும்பினாலும் வெறுத்தாலும் அரசர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு வழிப்படுவது கடமையாகும்.’’ மேலும் அரசர்களோடு மனிதர்களின் உள்ளங்களை ஐக்கியமாக்குவதும் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க மனிதர்களைத் தூண்டுவதும் அவசியமாகும். மேலும் மனிதர்களின் நிலைகளையும் நாட்டின் நிலைகளையும் எவையெல்லாம் சீர் செய்யும் அத்தகைய விடயங்களில் அவர்களோடு இயங்குவதும் அவசியமாகும். அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும் அவசியமாகும். 


ஒற்றுமையாக இருப்பது எல்லா இடங்களிலும் தூண்டப்பட்டாலும் ஹஜ்ஜிலும் அதன் பிரதாண கிரியைகளிலும் அது மிகவும் உறுதிப்படுத்தப்படுவதுடன் அதற்கான பயிற்சியும் வழங்கப்படுகின்றது. நிச்சயமாக ஒரு ஹாஜி அவனது கடமைகளில் நிறைவேற்றுவதை விட்டும் திசை திருப்பக் கூடிய அனைத்து விதமான விடயங்களையும் தவிர்ந்கொள்கிறான் மாறாக அவனது இரட்சகனுக்கு கட்டுப்படுவதில் முழுமையாக ஈடுபடுவதும் தனது சகோதரர்களின் அமைதியைக் குழைக்கும் காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதும் அவன் மீது கடமையாகும். 


ரஹ்மானின் விருந்தினர்களே, முஸ்லிம்களே! யாருக்கெல்லாம் சமூகத்தில் அதிகாரம் இருக்கின்றதோ அந்தஸ்து இருக்கின்றதோ சமூக ஒற்றுமை விடயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். பிரச்சினைகளைத் தவிருங்கள் அதன் பால் அழைக்கின்ற அழைப்பாளர்களை தடுங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்  ‘‘இலகுபடுத்துங்கள் கஸ்டப்படுத்தாதீர்கள் நன்மாராயம் கூறுங்கள் விரட்டாதீர்கள்.’’ மேலும் நபி (ஸல்) அவர்களின் கூற்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ‘‘உங்களில் ஒருவருக்கு மற்றவர் கட்டுப்படுங்கள் முரண்படாதீர்கள்.’’ முஸ்லிம்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் நலவுகளைப் பாதுகாப்பதிலும் பிரச்சினைப்படுபவர்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள் அல்லாஹ் சொல்கிறான் ‘‘முஃமின்களில் இரு கூட்டம் பிரச்சினைப்பட்டுக்கொண்டால் அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்.’’ நீ சத்தியத்தைப் பின்பற்றுபவனாக இருப்பது அசத்தியத்தில் நீ பின்பற்றப்படுபவனாக இருப்பதை விடவும் சிறந்ததாகும். யார் அல்லாஹ்வுக்காக ஒரு விடயத்தை விட்டானோ அவனுக்கு அல்லாஹ் அதை விடவும் சிறந்த ஒன்றை அதற்குப் பதிலாகக்கொடுப்பான். 


ஹாஜிகளே! நபியவர்கள் அரபா தினத்தில் குத்பாவை நிறைவு செய்த பின்பு பிலாலை ஏவினார்கள் அவர் அதான் சொன்னார். பின்பு இகாமத் சொன்னார் நபியவர்கள் ளுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழுதார்கள் பின்பு பிலால் இகாமத் சொன்னார் அஸரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழுதார்கள். இன்ஷா அல்லாஹ் நாமும் அதுபோன்றே தொழுவோம் பின்பு அவரு ஒட்டகத்தில் அரபாவில் நின்றார்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தார்கள் பிரார்த்தனை செய்தார்கள். சூரியனின் வட்டம் மறையும் வரை இவ்வாறு நின்றார்கள் பின்பு முஸ்தலிபாவிற்கு சென்றார்கள். 


நபி(ஸல்) அவர்கள் மிருதுவான தன்மையுடன் அடுத்தவர்களுடன் நடக்குமாறு ஸஹாபாக்களுக்கு ஏவினார்கள். நபியவர்கள் சொன்னார்கள் ‘‘அமைதியைக் கொண்டும் இலக்குகளை நோக்கி மெதுவாக உறுதியாக நகருமாறும் உங்களுக்கு நான் உபதேசிக்கின்றேன் ஏனெனில் வேகமாக செல்வது நன்மையானதல்ல’’ முஸ்தலிபாவிற்கு வந்ததும் மஃரிபை மூன்று ரக்அத்துக்களாகவும் இஷாவை இரண்டாகவும் கஸ்ரு செய்து மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள் பின்பு அங்கே தூங்கி பஜ்ரின் ஆரம்ப நேரத்தில் அங்கு பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றினார்கள் பிறகு சூரியன் மஞ்சலிக்கும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் பின்பு மினாவிற்கு சென்றார்கள் சூரியன் உதமானதன் பின்பு ஜம்ராவில் ஏழு கற்களை எறிந்தார்கள். அவரது பலிப்பிராணியை அறுத்து முடியையும் இறக்கினார்கள் பிறகு தவாபுல் இபாழாவை நிறைவேற்றினார்கள் தஷ்ரீகுடைய நாட்களில் மினாவில் தரித்திருந்தார்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தார்கள் ஒவ்வொரு நாளும் சூரியன் உச்சியை விட்டும் நீங்கியதும் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிந்தார்கள் சிறிய ஜம்ராவிலும் நடுவில் உள்ள ஜம்ராவில் கல்லெறிந்த பின்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். மேலும் தேவையுடையவர்களுக்கு மினாவில் இராத்தரிப்பதை விடுவதற்கு சலுகையளித்தார்கள். மினாவில் பிறை பதின் மூன்று வரை தங்குவது நபியவர்களின் ஸுன்னத்தாகும். அதுவே மிகவும் சிறப்புக்குரியதாகும் மேலும் அவசரமாகச் செல்பவர்களுக்கு பிறை பன்னிரண்டில் வெளியேறுவதற்கு அணுமதியளித்தார்கள். ஹஜ்ஜினுடைய கிரியைகளை முடித்து மக்காவிலிருந்து வெளியேற நபியவர்கள் விரும்பியபோது கஃபாவை தவாப் செய்தார்கள் 


ஹாஜிகளே! நீங்கள் மிகச் சிறந்த இடத்தில் மிக முக்கியமான நாளில் இருக்குறீர்கள் இதில் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றது. இதனால்தான் நபியவர்கள் முழுமையாக திக்ரு துஆக்களில் ஈடுபடுவதற்காக தனது ஹஜ்ஜில் அரபா தினத்தில் நோன்பை விட்டார்கள் எனவே உங்களுக்காக அதிகமாக உங்கள் இரட்சகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீர்களோ யாருக்கெல்லாம் நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்களோ மேலும் எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களின் நிலைகளை சீர்படுத்துமாறும் அவர்களை சத்தியத்தில் ஒற்றுமைப்படுத்துமாறும்  அல்லாஹ்விடம் கேளுங்கள் மேலும் உங்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களை மறந்துவிடாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ‘‘உங்களுக்கு யாராவது நன்மை செய்தால் அவருக்கு பிரதி உபகாரம் செய்யுங்கள் உங்களிடம் அவருக்கு பிரதி உபகாரமாக கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றால் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.’’ 


இஸ்லாத்தின் இரண்டு புனிதஸ்தளங்களுக்கும் பணிவிடை செய்வோர் ஹஜ்ஜாஜிகள் தங்களின் கடமைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகளை செய்தோர் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு நன்மை செய்தவர்களில் முக்கியமானவர்களாகும் அவர்களில் முதண்மையானவர்கள் ஹாதிமுல் ஹரமைன் ஷரீபைன் மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மேலும் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மானும் அவர்களுடன் பணி செய்பவர்களுமாகும் எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.


என்றும் உயிரானவனும் நிலையானவனுமாகிய அல்லாஹ்வே! கொடையாளனே! கண்ணியத்திற் குரியவனே! இரண்டு புனிதஸ்தளங்களின் சேவகரான மன்னர் ஸல்மான் இப்னு அப்துல் அஸீஸை பொருந்திக் கொள்வாயாக அவருக்கு உதவுவாயாக அவரை உறுதிப்படுத்துவாயாக. எல்லா நலவுகளுக்கும் அவருக்கு துணை செய்வாயாக. முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்காக அவர் ஆற்றும் பணிகளுக்காக அவருக்கு நற்கூலி வழங்குவாயாக அவரின் பட்டத்து இளவரசரான முஹம்மத் பின் ஸல்மான் மீது பரகத் செய்வாயாக. யா அல்லாஹ் அவரைக் கொண்டு மன்னரின் பலத்தை பலப்படுத்துவாயாக அவரை முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதற்கான காரணமாக ஆக்குவாயாக! இறைவா! ஹாஜிகளின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வாயாக. அவர்களது காரியங்களை அவர்களுக்கு இலகுபடுத்துவாயாக, அவர்களுக்கு யாரெல்லாம் தீங்கை நாடினானோ அவனது தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாயாக. இறைவா! பாதுகாப்பானவர்களாக நன்மைகளை சம்பாதித்துக்கொண்டவர்களாக அவர்களின் நாடுகளுக்கு திரும்பிச்செல்ல உதவுவாயாக. இறைவா முஸ்லிமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாவ மன்னிப்பை வழங்குவாயாக. முஃமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாவ மன்னிப்பை அளிப்பாயாக. அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை பலப்படுத்துவாயாக அவர்களின் உள்ளங்களை சீர்படுத்துவாயாக. அவர்களின் விடயங்களை பொருப்பேற்பாயாக அவர்களின் நாடுகளில் அவர்களைப் பாதுகாப்பாயாக. அவர்களை ஒற்றுமைப்படுத்துவாயாக அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பாயாக.  அவர்களின் வசதிகளில் பரகத் செய்வாயாக மிகச்சிறந்த வார்த்தைகள் செயல்களின் பால் அவர்களுக்கு வழிகாட்டுவாயாக.  


By : dr. M.B.M.Ismail Madani, Ph.D 

Principal,  Dharussalam arabic college,  Oddamavadi, srilanka


No comments

Powered by Blogger.