Header Adsஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பொன்விழா, பட்டமளிப்பு விழா நிகழ்வுகளின்போது முதல்வர் ஏ.ஸீ. அகார் முஹம்மத் ஆற்றிய உரை


2023.06.24 ம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பொன்விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளின்போது கலாபீட முதல்வர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களால் ஆற்றப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல உரையின் தொகுப்பு. 


இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இன்று உங்கள் அனைவர் மத்தியிலும் உரையாற்ற கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.


எங்கள் அன்புக்குரிய நிறுவனமான ஜாமிஆ நளீமியாவின் பொன்விழாவைக் கொண்டாட நாங்கள் இங்கு கூடியிருக்கும் இத்தருணத்தில் நன்றியுணர்வுடன் நிறைந்த இதயத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.


அல்லாஹ்வின் கிருபையினாலும், எமது நிறுவனர், மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் அயராத முயற்சியினாலும், சங்க உறுப்பினர்கள், நிர்வாக சபை, முன்னாள் தலைவர்கள், குறிப்பாக மறைந்த கலாநிதி சுக்ரி உட்பட  மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பணிப்பாளர்கள், விரிவுரையாளர்களது முயற்சியால் நாம் இந்த நிலையை அடைந்துள்ளோம்.  இன்று, கல்வி மேம்பாடு மற்றும் ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றால்  சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்த பெருமையுடன் நளீமியாவின் பொன்விழாவை கொண்டாடுகிறோம்.


வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்தர்ப்பத்தில் முதன் முதலாக, இந்த அற்புதமான பயணம் முழுவதும் எங்களை வழிநடத்தி வந்த கருணையாளனாகிய அல்லாஹ்வுக்கு எமது ஆழ்ந்த (ஷுக்ர் ) நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் அதனுடைய பொன் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த மகத்தான சந்தர்ப்பத்திலே கலாபீடத்தை உருவாக்கி அதன்  வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் தன்னை அர்ப்பணித்த நமது ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம்  நளீம் ஹாஜியார் அவர்களை நினைவு கூரவும் அவர்களுக்காக துஆ செய்யவும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.


கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியிருந்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வித் துறை சார்ந்த விழிப்புணர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவர்களிலே அறிஞர் சித்தி லெப்பை,ஐ.எல்.எம்.ஏ அஸீஸ், T.B ஜாயா,ஸேர் றாஸிக் பரீத்,கலாநிதி பதீஉத்தீன் மஹ்மூத்  முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.ஷரீஆ கல்வியின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்த முன்னோடிகளில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் சிறப்பிடம் பெறுகின்றார்.


இவர்களின் வரிசையிலே கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவரே நளீம் ஹாஜியார் அவர்கள்.


இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம்,இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரி ஆகிய இரு பெரும் கல்வி சார் செயற்திட்டங்களின் முன்னோடியாக விளங்குபவர் நளீம் ஹாஜியார். கல்வித் துறைக்கான அவரது மகத்தான வரலாற்று பங்களிப்பாக அமைந்தது ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் உருவாக்கம்.இலங்கை முஸ்லிம்களின் கல்வித் துறையில் மிகப் பெரும் திருப்புனையை ஏற்படுத்திய பெருமை ஜாமிஆ நளீமிய்யாவைச் சாரும் எனக் குறிப்பிட்டால் அது மிகையாகமாட்டாது.


இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்திலே மர்ஹூம் நளீம் ஹாஜியாருக்காகவும் அவருடன் தோளோடு தோள் நின்று உழைத்து, நம்மை விட்டும் பிரிந்து சென்ற நளீமிய்யா பரிபாலன சபை மற்றும் முகாமைத்துவ சபை அங்கத்தவர்களுக்காகவும் நலன் விரும்பிகளுக்காகவும் நாம் துஆ செய்கின்றோம்.


மேலும் ஐந்து தசாப்ப கால வரலாற்றிலே நிறுவனத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய மர்ஹூம்களான தாஸீன் நத்வி,ஷாஹுல் ஹமீத் பஹ்ஜி ஆகியோருக்காவும் சுமார் நான்கு தசாப்த காலம்  பணிப்பாளராக கடமையாற்றி மகத்தான பணி செய்து நம்மை விட்டும் பயணித்த மர்ஹூம் கலாநிதி ஷுக்ரி அவர்களுக்காகவும், வபாத்தான விரிவுரையாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களுக்காகவும் இந்த வேளையிலே வல்ல றஹ்மானிடம் கையேந்துவோம்.


اللهم اغفر لهم وارحمهم!


நிறுவனத்திலே ஒரு குறிப்பிட்ட காலம் அதிபராக கடமை ஆற்றிச் சென்ற யூசுப் தல்லால் அலி அவர்களும் நமது துவாவுக்கு உரியவராவார்.


அதே போல் இன்று வரை கலாபீடத்தைக் கட்டிக் காத்து வருகின்ற, அதன் மேம்பாட்டுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் உழைத்து வருகின்ற, பங்களிப்புச் செய்துவருகின்ற அனைவருக்கும் வல்ல றஹ்மான் நல்லருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திப்போம்.


ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தோடு சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் பாக்கியசாலிகள்; பெரும் பேறு பெற்றவர்கள் என்று சொன்னால் அது மிகையாக மாட்டாது. 


நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஒரு ஹதீஸ் இவர்களுக்கு சுப செய்தியாக அமைகின்றது. ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும் இந்த உலகத்துக்கும் இடையிலான எல்லா தொடர்புகளும் அறுபட்டு விடுகின்றன. ஆயினும் மூன்று அம்சங்கள் ஒருவருடைய மரணத்துக்குப் பின்பும் அவருக்கு பயன் அளிக்கக்கூடியவை. அவையாவன:صدقة جارية-நிலையான தர்மம், علم ينتفع به- பயனளிக்கக் கூடிய அறிவு, ولد صالح يدعو له -ஒருவருக்காக துஆ செய்கின்ற நல்ல சாலிஹான பிள்ளை.


இந்த கலாபீடம் நிச்சயமாக ஒரு நிலையான  தர்மம். இங்கு போதிக்கப்படுவது பயனுள்ள அறிவு.


ஒருவருக்கு அவர் பெற்று வளர்த்த பிள்ளைகளைப் போலவே அவர் உருவாக்கிய பிள்ளைகளும் அவரது பிள்ளைகளாகக் கருதத்தக்கவர்கள்.இந்த வகையில் இங்கு கற்ற, கற்கின்ற மாணவர்கள் கலாபீடத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிள்ளைகளாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் ஸாலிஹானவர்களாக உருவாக்கப்பட்டவர்கள்; உருவாக்கப்படுபவர்கள். இந்தவகையில் அவர்களுடைய துஆவிலே நிச்சயம் இவர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.


இது பயனுள்ள கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அனைத்து நிறுவனங்களும் பொருந்தும் என நான் நம்புகின்றேன்.


ஜாமியா நளீமிய்யா கடந்த அரை நூற்றாண்டு காலமாக மகத்தான ஒரு கல்விப் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் கல்விக் கொள்கை கூடாக  good servents of Allah- நல்ல இறையடியார்கள் உருவாக்கப்படுகின்றார்கள்;நல்ல இறைடியார்கள் கண்டிப்பாக good human- நல்ல மனிதர்களாக இருப்பார்கள்;நல்ல மனிதர்கள் நிச்சயமாக தாம் வாழும் நாட்டிலே Good Citizens -  நற்பிரஜைகளாக விளங்குவார்கள்.


යහපත් බැතිමතා

යහපත් මිනිසා

යහ පුරවැසියා


එකම අවස්ථාවේදී යහපත් බැතිමතුන්, යහපත් මිනිසුන් සහ යහ පුරවැසියන් පරම්පරාවක් බිහිකිරීමට අප ආයතනය සමත්වීම පිළිබඳව අපි සතුටු වෙනවා.... ආඩම්බර වෙනවා....


 அல்லாஹ்வுக்கு உகந்த நல்லடியார்களை, மனித சமூகத்தின் மேம்பாட்டுக்காக உழைக்கின்ற நல்ல மனிதர்களை, தான் வாழும் நாட்டுக்கு பங்களிப்புச் செய்கின்ற நற் பிரஜைகளை நமது கலாபீடம் உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.


 நமது நாட்டில் இயங்கும் அறபு, இஸ்லாமிய கலா நிலையங்கள் எல்லாம் இத்தகையதொரு பரம்பரையையே உருவாக்கி வருகின்றன என்பதையும் இங்கு நான் ஈண்டு குறிப்பிட விரும்புகின்றேன்.


இந்த மகத்தான நிகழ்வை நாம் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், இதுவரை எம்மை வழிநடத்தி வந்த இஸ்லாத்தின் போதனைகளையும்  கோட்பாடுகளையும் மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாத்தின் போதனைகள்,  பெறுமானங்களின் மீது கட்டமைந்த (knowledge, intellectual curiosity, and critical thinking) அறிவு, அறிவுசார் ஆர்வம் மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றை ஜாமிஆ நளீமியா எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 


இந்த விழுமியங்களை நிலைநிறுத்துவதும், பல்வேறு துறைகளில் அறிவாற்றல் கொண்ட வலுவான ஒழுக்க விழுமியங்களால் வார்க்கப்பட்ட பட்டதாரிகளை உருவாக்குவதை உறுதி செய்வதும் எம் மீதுள்ள பொறுப்பாகும்.


எமது நிறுவனமான ஜாமிஆ நளீமியா, இலங்கையின் பல்லின, மத, கலாச்சார கட்டமைப்பிற்குள் இஸ்லாத்தின் போதனைகளாலும் கொள்கைகளாலும் வழிநடத்தப்படும் மிதமான, திறந்த மனப்பான்மை, உள் வாங்கும் தன்மை ஆகிய பெறுமானங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.


அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, கருணை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு விரிவான கல்வித் திட்டத்தை நாம் கொண்டுள்ளோம். எமது பாடத்திட்டமும்   முன்முயற்சிகளும் இந்த கொள்கைகளை எங்கள் மாணவர்களிடம் விதைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தங்கள் தாய்நாட்டின் மீது ஆழ்ந்த பற்றுள்ள நற் பிரஜைகளையும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்யும் அறிஞர்கள், தொழில் வல்லுநர்களின் தலைமுறையை உருவாக்குவதில் எமது வகிபாகம் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.  இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் , இன்ஷா அல்லாஹ், இந்த விழுமியங்களை உள்ளடக்கிய எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.


இறுதியாக ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.


நமது நாட்டிலே கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சில,பல நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக இந்த நாட்டில் வாழும் சமூகங்கள், சமயத்தவர்கள், இனங்கள் மத்தியில் Polarization -துருவப்படுத்தல் செயற்பாடு பாரிய அளவில் இடம்பெற்றுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனால் சமூகங்களுக்கிடையில் எத்தகைய இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.


குறிப்பாக இஸ்லாம், முஸ்லிம்கள் குறித்து நிலவுகின்ற தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்கள் பல.


இந்த நிலையிலே மீண்டும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய சரியான புரிதலையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற கடப்பாடு நம் அனைவருக்கும் பொதுவாகவும் நளீமிய்யா பட்டதாரிகளுக்கு குறிப்பாகவும் உண்டு என்பதையும் இது காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும் என்பதையும் இங்கு வலியுறுத்தி சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.


கருணையாளன் வல்ல றஹ்மான்  மனித நேயமும் நல்லிணக்கமும் ஐக்கியமும் நிலவுகின்ற ஒரு வளமான பூமியாக நம் தாய் திரு நாட்டை ஆக்கியருள் புரிவானாக!


நமது இந்த மகத்தான இலட்சியப் பயணம் இனியும் வெற்றிகரமாகத் தொடர அனைவரும் பிரார்த்திப்பீர்கள் என்று எதிர்பார்த்து விடைபெறுகிறேன்.


No comments

Powered by Blogger.