Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுடனான பாசமிகு நேசம் - ஒரு தமிழ் சகோதரரின் நெகிழ்ச்சியான பதிவு


- Siva Murugupillai -


வெறும் சோத்துடன் பருப்பை மட்டும் சாப்பிடுவது என்று தினமும் வழக்கமாக்கிய வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஏன் அர்த்தமும் இருக்காது அதனுடன் தயிரோ மீனோ வேறு காய்கறிகளோ சேர்த்து உண்ணும் போது சுவையாகவும் எமக்குத் தேவையான சத்தும் கிடைப்பதற்கு அப்பால் கொண்டாடட்த்திற்குரிய வாழ்வாகவும் அது மாறும்.


இப்படியான ஒரு வாழ்வைத்தான் நாம் 1990 இற்கு முன்பு கொண்டிருந்தோம். இதற்குள் சாப்பாடு என்று குறிப்பிட்டாலும் இதற்கும் அப்பால் ஒரு சமூக வாழ்வியலையே அதிகம் கருத்தில் கொண்டு இதனைத் தெரிவித்தேன்.


யாழ்ப்பாணத்து கடைத் தெருக்கள் எல்லாம் சாகச்சேரி சந்தை பகுதியில் வவுனியா நகரெங்கும் இப்படியே அடுக்கினக் கொண்டு போகலாம்... ஒன்றாக பிணைந்து இணைந்து வாழ்ந்த வாழ்க்கை அது.


துணி மணி எடுக்க வேண்டும் அழகான உடைகளை தைத்தாக வேண்டும் யாழ் பேரூந்து நிலையத்திற்கு முன்னால் சற்று மேற்கத்திய கலாச்சார வகையிலான சாப்பாட்டு மேசையிற்கான பீங்கானகளை அதுசார்ந்த பொருட்களை வாங்கியாகியாகணும் என்று நாமும் முஸ்லீம் சகோதர்களும் இணைந்துதான் வாழ்ந்தோம்


கடை தெருவிற்கு போனால் வாங்கோ அக்கா அம்மா மச்சி என்று அழைத்து வணிகத்தையும் அதுசார்ந்த உறவுகளையும் அமைத்து வாழ்ந்த சமூகம் உறவு அது.


இவர்கள் இங்கிருக்க கூடாது என்ற புலிகளின் முடிவும், அதுசார்ந்த செயற்பாடுகளும் அதனை விரும்பாத தமிழர்களிடையே இருந்த பெரும்பான்மை மக்களால் தடுக்க முடியாத சூழலில் புத்தளம் நோக்கிய நகர்ச்சியும் அங்கு தற்காலகமாக வாழ்விடத்தை ஏற்படுத்தி இன்று பலரும் நிரந்தரமாக குடியேறிய நிலமை எற்பட்டு விட்டது.


2009 இற்கு பின்னரான சூழலில் வெளியேறிய எல்லோரும் 1990 இற்கு முந்தைய பழைய நிலமையை நோக்கி வந்தவிட்டார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக முன் வந்து நிற்கின்றது


ஆனால் என்னைப் போன்றவர்கள் 2009 இல் ஏ 9 பாதை .


திறக்கப்பட்ட உடன் முதல் நிகழ்வில் எமது முஸ்லீம் சகோதரர்களை குறியீட்டு ரீதியாக மேளதாதளங்களுடன் அழைத்து எம்முடன் இணைத்த அவர்கள் வாழ்ந்த இடங்களில் தொழில் செய்த இடங்களில் தொழுகை செய்த மசூதிகளில் அவர்களை இணைத்தாக வேண்டும் என்ற குரலை எழுப்பினோம்.


இந்தக் கோரிக்கையை முடிந்தளவிற்கு அதிகாரத்தில் உள்ள தமிழ் தரப்பிடம் தோழமையாக நட்பாக வேண்டுகோள் விடுத்தோம். இது பற்றி பொது வெளியில் எழுதியும் வந்தோம்.


ஆனால் 1990 இற்கு முந்தைய நிலமையின் இரு சகோதர இனங்களும் மிகச் சிறிய அளவே இணையும் மீள்குடியேற்றம் நிலமைகளே இதுவரை நடைபெற்றது. அதுவும் சிறப்பாக யாழ் குடா நாட்டில் அதிகம் நடைபெறவில்லை.


இதன் அடையாளமாகத்தான் அண்மையில் எனது நீண்டகால சகா தமயந்தி சைமனின் பதிவும் இந்த அழகான தனித்து நிற்கும் மசூதியும் இந்த பதிவு என்னை மீண்டும் எழுத வைத்துவிட்டது.


எமது சகோதரர்களே உங்களுக்கு தற்காலிகமாக வாழ்வை தந்த புத்தளத்தை மறந்துவிட நான் சொல்வில்லை, எவ்வளவு அழகான ஆரோக்கியமான இடம் புத்தளம் என்பதை என் பதின்ம வயதில் வாழ்ந்த அனுவங்களில் நானும் அறிவேன்.


இன்னமும் மீரா மாஸ்ரர் வீட்டு பொது முற்றமும் ஹினாயத்துல்லாவின் 13 சகோதர்கள் உறவும், அவரின் காதலி வீட்டில் உண்டு மகிழ்ந்த விருந்துபசாரத்தையும் நான் இன்னும் மறக்கவில்லை. அவ்வளவு அருமையான இடம்.


ஆனாலும் நீங்கள் இன்றி யாழ்ப்பாணத்து ஏன் வடக்கின் கிழக்கின் வாழ்வு வெறும் சோற்றை பருப்புடன் மட்டும் உண்பது போன்ற உணர்வையே எமக்கு ஏற்படுத்துகின்றது.


யாழ் இந்து பாடசாலையிலும், யாழ் பல்கலைக் கழகத்திலும் பல பத்து முஸ்லீம் நண்பர்களுடனான உறவும் பழகிய நாட்களும் இன்னும் என் மனதில் ஓடிக் கொணடிருக்கின்றது.


புத்தளம் சென்ற போது பள்ளியிற்கு என்னை ஒரு முஸ்லீமாக உருவகப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்று காட்டிய அந்த நிகழ்வுகளும் அந்த மணிக் கூட்டுக் கோபுரமும் சாந்தமருது, ஓட்டமாவடி ஏறாவூர் என் பல கிராமங்களில் எமக்கு அளித்த பாதுகாப்புகளும்..... 


கிண்ணியா திருமலை நகரம் என்று எனக்கு அளித்த விருந்துகளும் அது பொது வாழ்கையிற்காக, பாடசாலை மாணவனாக என்னிடம் கற்ற மாணவ ஆசிய உறவாக வவுனியா பட்டாணிச்சூர் கிராமத்து உறவும், நல்ல தேனீரை வழங்கிய நீராவிப்பிட்டி தண்ணிர்ஊற்று பசீர் காக்காவின் தேனிராக இருக்கலாம் எல்லாம் நினைவுகளாக இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.


யாழ் பெரிய கடைத் தெருவில் வணிகத்தில் தையல் வேலையில் ஈடுபட்டிருந்த அனேகரை நண்பராக ஒருவர் ஒருவராக மாறி மாறி அறிமுகமான நட்பு பாராட்டிய காலம் என்றிருந்த காலங்கள் அதிகம்


பெரிய கடைத் தெருவில் இருந்து பள்ளியிற்கு திரும்பும் மூலையில் இக்பாலின் தம்பி நசீம் இன் தையல் கடையிற்கு வாரத்தில் பல தடவை பட்டணம் போகும் போதெல்லாம் எட்டிப் பார்த்து கல்யாணி கூல் பாரில் குளிபானம் குடித்து மகிழ்ந்த தருணங்கள் என்று பலதுமாக...


பதின்ம வயது மொக்கன் கடையும் பிளாசா கடை மாட்டு றோசும் அந்த பொம்மைவெளி சோனகத் தெருவும் ஒஸ்மானியா கல்லூரியின் உடைபந்தாட்டங்களும் நடனமாடி சாதனை புரிந்த ஒஸ்மானியா கல்லூரி... பாம்பு நசீர் - கின்னஸ் சாதனை ஒஸ்மோனியா கல்லூரி வளாகத்தின் கிழமையைத் தாண்டி கொண்டாட்ஙகளும் யாழ் மக்கள் முழுவதையும் அங்கு வரவழைத்து ஆரவாரப்படுத்திய நினைவுகளும் தற்போதும் வந்து போகின்றன.


இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தில்... அமைச்சராக சபை உறுப்பினர்களாக அலுவலகர்களாக... அதற்கு முன்பான ஆயுதப் போராட்டத்தில் இன்றுவரை தொடரும் இணைந்த அரசியல் செயற்பாடுகளில் எல்லாவற்றிலும் இணைந்த கரங்களாக புரிதலாக தோளோடு தோள் கொடுத்த ...கொடுக்கும்.... நினைவலைகள் எனக்குள் வந்து போகின்றன...


இவற்றின் உச்சமாக எனது திருமணத்தின் போது அந்த அறுசுவை உணவை படைத்த மன்னார் முஸ்லீம் சகோதர்கள் திருமண வீட்டில் தங்கி நின்று சமைத்துப் பரிமாற்றி அந்த உணவே இன்றுவரை பலரும் அன்புடன் நினைவு கூரும் அறுசுவை உணவாக....


2009 இறுதி யுத்தத்தின் போது வவுனியாவில் அமைக்கப்பட்ட முள்ளுக் கம்பியிற்கு பின்னால் நின்ற ஆயிரம் ஆயிரம் தடை முகாங்களில் இருந்தவர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பில் இருந்து வந்த சிறப்பு சமையற்காரர்கள் எமது முஸ்லீம் சகோதர்கள்தான் என்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவில் கொண்டாக வேண்டும்.


அரசியல் பெரு மகனார் எஸ்.எல்.எம் ஹனிபாக்களும், பேராசான் நூர்மானுடனான ஆசிரிய மாணவ உறவுகளும், பாடசாலைத் தோழி அஜீஷாக்களும் பல்கலைக்கழக நட்பு உறவுகள் காதர், ஜலால்டீன், மன்சூர் சம்சுடீன் களும்,கல்முனை பாத்திமா உம்மாக்களும், பஸார் கடை நசீர் நானாக்களும் என்னுடனான அன்பும் நட்பும் உறவுகளும் இவ்விடத்தில் நினைவுகளா வந்துபோகின்றன. இவற்றில் பலவும் இன்றுவரை தொடர்பு அறாத அன்புகளாவும் தொடர்கின்றன.


இவை எல்லாம் இனியும் வேண்டும். இதனைத்தான் ஆரம்பத்தில் வெறும் சோறும் பருப்பும் என்றதாக வாழ்கை தற்போது உள்ளது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.


தற்போதும் பல மு. கார்த்திகேசன்கள் இருக்கின்றார்கள் யாழ் மாநகரசபையின் துணை மேயராக ஒரு முஸ்லீமை நியமிக்க வேண்டும் என்று கொள்கை சார்ந்த சகோதரத்துவ உணரவுடன்...


எனவே சகோதரகளே வாருங்கள் மீண்டும் அந்த பொம்மை வெளியிற்கும் யாழ்ப்பாணக் கடைத் தெருவிற்கும் சாகச்சேரி சந்தையிற்கும் ஒஸ்மானியாக கல்லூரிக்கும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் நாம் கரம் கோர்த்து பிரயாணியும் கொத்து ரொட்டியும் நோன்புகச்சியும் பால் பொங்கலும் தோசையும் புட்டும் மோதகமும் பயிற்றம் பலகாரமும் மாட்டுக்கறியும் ஆடைவிற்பனையும் ஆடை தைத்தலுமாக இணைந்து கொண்டாட்டமாக வாழுவோம்.


பெரு நாட்களில் நாமும் இணைந்து ஒற்றைத் தட்டில் சாப்பிடும் சகோதரத்துவத்தை வளர்போம்.


இது ஒரு மீண்டும் இணைதலுக்கும் மீள் குடியேறுவதற்குமான அழைப்புத்தான்.


நான் சாதாரணமானவன்தான் ஆனால் என்குரல் சாதாரணமானது அல்ல இது எனது குரல் மட்டும் அல்ல இதுதான் பலரினதும் குரல்கள் நாம் சேர்ந்திருப்பதே பலம் இந்தப் பலத்தை உருவாக்குவோம் எமது கிராமத்து தெருக்களில் மீண்டும் அந்த சயிக்கிள் பின்னால் பெட்டி கட்டி பொருட்களை, இறைச்சியிற்கான ஆடுகளை வாங்கும் அந்த குரலையும் சங்கீதமாக கேட்போம்.


இதற்கு அடையாளமாக நாம் முதிலில் அடையாளமாக எழுச்சியாக மண்கும்பானில் உள்ள அந்த பள்ளியை மசூதியை மீளுருவாக்கம் செய்து அனைவருக்குமானதாக அதனை அடையாளப்படுத்துவோம்.


இதற்கான முன்னெடுப்புகளை சமய சம்பிரதாயங்களின் அடிப்படையில் முஸ்லீம் சகோதர்கள் ஆரம்பிக்க நாம் இணைந்து செயற்படுவோம் எமது முழுமையான ஒத்துழைப்பு இதற்கு எல்லாவகையிலும் உண்டு சகோதர்களே.


வாழுவோம் இணைந்து பிணைந்து சகோதர்களாக...


(சகலரையும் சமனாக மதித்து எம்மோடு வாழ்ந்த.... இனியும் வாழ் வேண்டிய.....  மண்கும்பான் வெள்ளைக்கடற்கரைப் பள்ளிவாசலிd; புகைப்படம் இது.  தமயந்தி இன் புகைப்படக் கருவியினால் இங்கு பிரசுரமாகின்றது. நன்றி)



1 comment:

  1. Anpar ponra anpullankal aayiramayiram undu tamil sakothararkal maththiyil

    ReplyDelete

Powered by Blogger.