ஹஜ் செல்ல ஆசைப்படுவோம் (அடுக்கடுக்கான உண்மைச் சம்பவங்கள்)
அந்த நூல் சுவையானது. அந்த நூலுக்கான பின்னணி அதை விடச் சுவையானது.
1960 களின் காலம்.
பி.டி வீராண் குட்டி முஸ்லியார் கேரளத்தின் ஒரு சிறிய பள்ளிவாசலின் இமாம்.
இமாம் என்றாலே அவர் "ஏழ்மையாக இருக்கவேண்டும், எளிமையாகவும் இருக்கவேண்டும்" என்று சமூகம் வரையறுத்து வைத்து இருப்பது போல் அவரும் மிக ஏழ்மையானவர். ஹஜ்ஜை நினைத்துப் பார்ப்பதே அவரது அன்றைய வசதிக்கு சாத்தியமில்லாதது.
அந்த ஊரின் பெரும் பணக்காரர் ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல தயாராகிறார். வீட்டை விட்டு கிளம்பும் போது துஆ செய்வதற்காக அந்த மஹல்லா இமாமான வீராண் குட்டி முஸ்லியாரை அழைத்திருக்கிறார்.
அந்த இமாம் துஆ ஓதி முடித்த போது பணக்காரருக்கு நம் முஸ்லியாரை திருவணந்தபுரம் வரை அழைத்துச் செல்லலாம் என்று தோன்றியது. முஸ்லியாரிடம் "நீங்கள் திருவணந்தபுரம் வரை என்னோடு வந்து எனக்கு ஹஜ்ஜின் முறைகளைச் சொல்லிக் கொடுத்து கொண்டு வாருங்கள். தேவையான துஆக்களையும் செய்யுங்களேன்".. என்று கேட்டார்.
இமாம் சற்று யோசித்து விட்டு வீட்டிற்கு போய் மனைவி குழந்தைகளிடம் சொல்லிக் கொண்டு இரண்டு துணியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
திருவணந்தபுரத்தில் அந்தப் பணக்காரர் "உஸ்தாதே..! என்னோடு அப்படியே மும்பை வரை வந்து என்னை கப்பலேற்றி விட்டு வர வேண்டும்"... என்று கோரினார்.
திருவனந்தபுரம் வரை வந்த உஸ்தாதின் பயணம் மும்பை வரை நீண்டது .
மும்பையில் வைத்து அந்தப் பணக்காரருக்கு "நம் உஸ்தாதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றால் என்ன ? நமக்கும் பிரயோஜனமாக இருக்குமே..?" என்று தோன்றியது .
உஸ்தாதிடம் கேட்டார்.
உஸ்தாதின் கண்களில் கண்ணீர் மல்கியது, அது பாஸ்போர்ட் போன்ற சமாச்சாரங்கள் தேவையில்லாத நேரம். கப்பலில் இடம் கிடைப்பது மட்டுமே முக்கியமாக இருந்தது.
செல்வந்தர் கப்பல் கம்பெனியிடம் பேசி உஸ்தாதுக்கு சீட் வாங்கினார்.
இரண்டு செட்டு துணிகளை எடுத்துக்கொண்டு திருவணந்தபுரத்திற்கு புறப்பட்ட உஸ்தாது இறுதியில் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு திருவணந்தபுரம் திரும்பினார்.
இது சம்பந்தமான விஷயங்களை புத்தகமாக அந்த பிடி முஸ்லியார் என்கிற இமாம் எழுத... அதுவே "பி, டி யின் ஹஜ்ஜு" என்ற பெயரில் புத்தகமாக வந்து "சாகித்ய அகாடமி" என்கிற உயரிய விருதும் பெற்றது.
ஹஜ்ஜுப்பயணம் இப்படித்தான் வாழ்க்கையில் நினைத்துப் பார்த்திராத பலருக்கும் வாய்த்திருக்கிறது.
பணம் படைத்த பலருக்கு வாய்ப்புக் கிடைக்காமலும் போயிருக்கிறது.
இந்தியாவில் 600 வருடங்கள் மாமன்னர்களாக, செல்வச் செழிப்போடு வலம் வந்த முகலாய மன்னர்களில் யாருக்கும் ஹஜ்ஜின் வாய்ப்பு கிடைக்கவில்லை. எளிமையாய் வாழ்ந்த சக்கரவர்த்தி அவுரங்கசீப் பாதுஷா அவர்களைத் தவிர..
சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரு இஸ்லாமிய டிவி "மும்பையில் வியாபாரிகளின் வீட்டிலிருந்து அவர்களுக்கான சாப்பாட்டை சைக்கிளில் அடுக்கிவைத்து கொண்டு போய் அவர்களிடம் சேர்த்து குறைந்த ஊதியத்தை பெற்று வந்த "டப்பாவாலாக்கள்" எனப்படுபவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளி , ரோட்டோர தையல்காரர் என இவர்களுக்கெல்லாம் ஹஜ்ஜின் பாக்கியம் எப்படி கிடைத்தது..? என்று ஆச்சரியப்பட்டு அவர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் அற்புதமானவை .
"நாங்கள் டப்பாவாலாக்கள் தான். ஆனால் எங்கள் ரப்பு டப்பாவாலாக்கள் இல்லை".
"நாங்கள் செருப்புத் தைக்கும் தொழிலாளி தான். ஆனால் எங்கள் ரப்பு செருப்பு தைக்கும் தொழிலாளி இல்லை".
நாங்கள் ஹஜ்ஜுக்கு ஆசைப்பட்டோம். அல்லாஹ் எங்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்".
என்ன ஒரு அற்புதமான பதில்..
எனவே ஹஜ்ஜூ செல்ல பணம் முக்கியமல்ல.. ஆசைப் படுதலே முக்கியம் .
நாமும் ஆசைப்படுவோம்.
பி . டி முஸ்லியாருக்கு ஒரு செல்வந்தரைக் கொடுத்த இறைவன் நமக்கு துணை வருவதற்கு நம்முடைய ஆர்வத்தையும், ஆசையையும் தவிர வேறு என்ன வைத்திருக்க வேண்டும்..?
செய்யது அஹமது அலி. பாகவி.

Post a Comment