Header Ads



மாணவர்களை ஆத்மீக ரீதியில் நெறிப்படுத்துமாறு, சமூக அமைப்புகளிடம் வேண்டுகோள்


(ஏயெஸ் மெளலானா)


இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர்தர டியூசன் வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்காமல், 30ஆம் திகதி வரை தாமதப்படுத்துவதற்கு கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்கள் மேற்கொண்ட நடவடிக்கையை அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வரவேற்றுள்ளதுடன் பாராட்டும் தெரிவித்துள்ளது.


உலமா சபையின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (11) பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் தலைமையில் இடம்பெற்றபோது இவ்வாறு பாராட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி தெரிவித்தார்.


மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மிகவும் கரிசனையுடன் விடுத்திருக்கின்ற அறிவுறுத்தல்களை தனியார் கல்வி நிலையங்கள் ஏற்று, செயற்பட வேண்டும் எனவும் இது விடயத்தில் அனைத்து தாப்பினரும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் அம்பாறை மாவட்ட உலமா சபை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


அதேவேளை இக்கால சூழலில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களை ஆத்மீக ரீதியில் நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உலமா சபையின் கிளைகள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், தஃவா அமைப்புகள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட உலமா சபை வலியுறுத்துவதாகவும் அதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு மாவட்ட உலமா சபை தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.