Header Ads



தோல்வியை தானே தேடிக் கொண்டதா இந்திய அணி..?


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது. ஐந்தாவது நாளில் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தி, குறைந்த நேரத்திலேயே இந்திய பேட்ஸ்மேன்களின் சவாலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டனர். இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விராட் கோலி, அஜிங்கிய ரஹானே ஜோடி ஏமாற்றத்தையே பரிசளித்தது.


ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் முறையே 469, 296 ரன்களை எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.


இதையடுத்து 444 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது. கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணியின் கைவசம் 7 விக்கெட்டுகளே இருந்தன. எனினும், கோலி - ரஹானே ஜோடி கைகொடுக்கும், இந்திய அணி வரலாறு படைக்கும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


ஆனால், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே நிலைமை வேறு வகையில் இருந்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்ந்துவிடக் கூடாது என்று கோலி - ரஹானே கூட்டணி நிதானம் காத்தது. தேவையின்றி பந்துகளை அடித்தாடக் கூடாது என்பதில் அந்த ஜோடி உறுதியாக இருந்தது. இதனால், இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே இருந்தது.


கம்மின்ஸ் வகுத்த வியூகத்தில் வீழ்ந்த கோலி

இந்திய ஜோடி நிதானமாக ஆடினாலும், எது நடந்துவிடக் கூடாது என்று நேற்றிரவெல்லாம் இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அது வெகு சீக்கிரத்திலேயே நடந்துவிட்டது.


உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கு ஆஸ்திரேலியாவுக்கும் குறுக்கே நிற்பது விராட் கோலி என்று கிரிக்கெட் நிபுணர்கள் வர்ணித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த தடையை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் விரைவிலேயே உடைத்தெறிந்தார். மிகவும் நிதானமாக ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவருமே ஆமை வேகத்தில்தான் ரன்களை சேர்த்தனர். அதிலும், முதல் 39 பந்துகளில் கோலி வெறும் 9 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்தார். பெரும்பாலும் நான்-ஸ்டிரைக்கர் முனையிலேயே அவர் நிற்க வேண்டியிருந்தது.


கோலியை அடித்தாடத் தூண்டும் வகையில், அவருக்குப் பிடித்தமான கிளாசிக் கவர் டிரைவுக்கு முயற்சிக்கச் செய்யும் நோக்கில் கவர் பகுதியில் பீல்டர்களையே கம்மின்ஸ் நிறுத்தவில்லை. பெரும்பாலும் நான்-ஸ்டிரைக்கர் முனையிலேயே நின்றிருந்த கோலி சந்தித்த ஒருசில பந்துகளையும், சரியான லென்த்தில் வீசி ரன்களை எளிதில் எடுக்க விடாமல் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அவரை கட்டிப்போட்டனர். அதனால்தானோ என்னவோ, போலண்ட் வீசிய அந்த பந்தை கோலி அடித்தாட முயற்சிக்க, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நினைத்தபடியே அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவன் ஸ்மித் கையில் கேட்சாக மலர்ந்தது.


ஆஸ்திரேலிய அணி வைத்திருந்த பொறியில் அவர்கள் நினைத்தபடியே வலியச் சென்று சிக்கிய கோலி, தான் அவுட்டான விதத்தில் அதிருப்தி கொண்டு வேதனையுடன் வெளியேறினார். இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவரது அவுட் பேரிடியாக அமைந்தது.


இந்திய ரசிகர்களின் வேதனை அத்துடன் நிற்கவில்லை. அடுத்த இரண்டாவது பந்திலேயே ரவீந்திர ஜடேஜாவையும் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் போலண்ட். ஜடேஜாவுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் கச்சிதமாக திட்டத்தை வகுத்து, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டார்கள்.


ஜடேஜா வந்தவுடனே, ரவுண்ட் தி விக்கெட் முறையில் பந்துவீசத் தொடங்கிய போலண்ட், முதல் பந்தில் சரியான லென்த்தை தவறவிட்டார். எனினும், சுதாரித்துக் கொண்டு அடுத்த பந்தை ஃபுல் லென்த்தில் போலண்ட் வீச, பந்து ஜடேஜாவின் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரேவிடம் தஞ்சம் புகுந்தது. ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார்.


ஒரே ஓவரில் கோலி, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அதே உத்வேகத்துடன் இந்திய அணியை விரைந்து காலி செய்ய எத்தனித்தது. அதற்கு உடனே பலனும் கிடைத்தது.


இம்முறை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சுக் கூட்டணி வைத்த பொறியில் சிக்கியது ரஹானே. ஐ.பி.எல்.லில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் இந்தியாவைக் காத்த ரஹானே இம்முறை பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் ஏமாற்றம் தந்தார். முதல் இன்னிங்சின் போது, ஸ்டம்பில் இருந்து விலகிச் செல்லும் பந்துகளை தொடாமலேயே தவிர்த்து வந்த ரஹானே இம்முறை இமாலய தவறு ஒன்றைச் செய்தார்.


ரவுண்ட் தி விக்கெட் முறையில் ஸ்டார்க் வீசிய முந்தைய ஓவர்களில் பவுலரின் தலைக்கு நேரே 2 பவுண்டரிகளை அடித்திருந்தார் ரஹானே. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் அவரை அடித்தாடச் செய்து தவறு செய்ய தூண்டும் வகையில் அதே முறையில் ஸ்டார்க் தொடர்ந்து பந்து வீசினார். அவர் எதிர்பார்த்தபடியே, ரஹானே அந்த தவறைச் செய்ய பந்து அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் காரேவின் கைகளில் கேட்ச்சாக மாறியது.


ஐந்தாவது நாளின் போது பிட்ச்சில் பந்து நன்றாக திரும்பியதை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். கோலி அவுட்டான போதே தோல்வி உறுதி என்றெண்ணிய ரசிகர்கள், கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்த ஜடேஜா, ரஹானே ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறியதால் ஏமாற்றம் அடைந்தனர்.


இந்திய பேட்ஸ்மேன்களை எளிதாக வெளியேற்றிவிட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பாரத் மற்றும் பந்துவீச்சாளர்களை அவுட்டாக்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமாக இருக்கவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் அவர்கள் விரைவிலேயே சரணடைந்துவிட்டனர். இந்திய அணி 234 ரன்களில் ஆல்அவுட் ஆகிப் போனது. ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் இந்திய அணி வெறும் 70 ரன்களை எடுப்பதற்குள்ளாக 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.


209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை படுதோல்வியடையச் செய்த ஆஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் ஒருநாள், இருபது ஓவர், சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐ.சி.சி. நடத்தும் அனைத்து தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது.


உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கும் முன்னரே இந்திய அணி தவறான முடிவுளால் தனது விதியை தானே தேடிக் கொண்டது என்றே கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அதாவது, புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அப்படி இருக்கையில், இந்திய அணி டாஸை வென்றும் பீல்டிங்கை தேர்வு செய்து மாபெரும் தவறிழைத்துவிட்டது என்று ரசிகர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீசும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.


அடுத்தபடியாக, லண்டன் ஓவல் மைதானம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கக் கூடியது எனும் போது, டெஸ்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காமல் இந்திய அணி தவறிழைத்துவிட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.


நான்காவது இன்னிங்சில் அதாவது இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி, கோலி, ரஹானே போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் கூட தவறான ஷாட்களை தேர்வு செய்து அவுட்டாகி வெளியேறியதுடன் அணியின் சரிவுக்கும் வித்திட்டுவிட்டனர்.


இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகாமல் ஐ.பி.எல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்ததே இதற்குக் காரணம் என்றும் சில ரசிகர்கள் விமர்சனக் கருத்துகளை சமூக வலைதளங்களில் முன்வைத்துள்ளனர்.


ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய சுப்மன் கில்லும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான நீலநிறத் தொப்பியை வசப்படுத்திய முகமது சிராஜூம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டுள்ளனர்.


உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, முதல் இன்னிங்சில் அதிரடி சதம் கண்டு இந்திய அணியின் தோல்வியை நிச்சயித்து ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட்டை கிரிக்கெட் ஜாம்பவான்களும், விளையாட்டு நிபுணர்களும் பாராட்டியுள்ளனர். BBC

No comments

Powered by Blogger.