மோடியின் உரையை புறக்கணித்த 2 அமெரிக்க முஸ்லிம் Mp க்கள்
பிரதமரின் உரைக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி எம்பி இல்ஹான் ஓமர் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றன. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் குறிவைத்து நசுக்கப்படுகின்றனர். எனவே மோடியின் ஆட்சி காலத்தில் நடந்த அடக்குமுறை, வன்முறை சம்பவங்கள் குறித்து மனித உரிமை குழுக்களுடன் சேர்ந்து விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு எம்பியான ரஷிதா த்லைப் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவில் பேசுவதற்கு மோடிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் வெட்கக்கேடானது. மோடியின் ஆட்சிக் காலத்தில், மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள், சிறுபான்மையினர் மீதான தாக்கல் அதிகமாக நடந்துள்ளது. அதனால் கூட்டு கூட்டத்தின் உரையை புறக்கணித்தேன்’ என்று கூறியுள்ளார். மேற்கண்ட இரு பெண் எம்பிக்களின் புறக்கணிப்பு குறித்து தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் அதிஃப் ரஷீத் வெளியிட்ட பதிவில், ‘இந்திய சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நான், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எனது மத சுதந்திரம் மற்றும் மத அடையாளத்துடன் சுதந்திரமாக வாழ்கிறேன்.
இந்தியாவில் நான் என்ன எழுத விரும்புகிறேனோ அதை எழுத எனக்கு சுதந்திரம் இருக்கிறது. மோடி மீதான வெறுப்பின் காரணமாக, இந்தியாவைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை வெளிப்படுத்துகின்றீர்கள். இதற்காக வருந்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன், 75 அமெரிக்க எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, அதிபர் ஜோ பிடனுக்கு கடிதம் எழுதினர்.
அதில் ‘பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, மத சகிப்புத்தன்மை புகார்கள், மனித உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பேச வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளனர். அதேநேரம் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர், மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அவர்கள் ஜோ பிடன், மோடி உருவத்துடன் கூடிய பொம்மையை அணிந்து கொண்டு போராடியது பார்வையாளர்களை கவர்ந்தது.
Post a Comment