Header Ads



16 அரச பல்கலைக்கழகங்களின் பகிடிவதைகள் - உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு


கடந்த 3 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை சம்பவங்கள் மற்றும் பதிவான வழக்குகளின் விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2020ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது பெரிய பெக்ஹோ டயர் ஒன்றை மாடிப்படியில் இருந்து கீழே உருட்டியதால் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளான, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தின்போது பசிந்து ஹர்ஷன சில்வா என்ற மாணவனின் தலை, மண்டை ஓடு, மூளையில் காயம் உள்ளிட்ட பலத்த உடல் காயங்கள் ஏற்பட்டன. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டாலும், அவர் இதுவரை முழுமையாக குணமடையவில்லை.


இந்தநிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு மாணவியின் சகோதரி ஷர்மிளா பிரியதர்ஷனி சில்வா அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.


விசாரணைகளின் போது பகிடிவதை என்பது பல்கலைக்கழகக் கல்வியில் உடலியல் மற்றும் நடத்தை சார்ந்த விடயங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள அனைத்து 16 அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


உயர்கல்வி அமைச்சருக்கு தேசியக் கொள்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்க அதிகாரம் உள்ளதால் அவரையும் பிரதிவாதியாக குறிப்பிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதற்கமைய அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. Twin

No comments

Powered by Blogger.