Header Ads



MTV தாக்கல் செய்த வழக்கு- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திலித் ஜயவீரவுக்கு உத்தரவு


ஜோர்ஜ் ஸ்டுவர்ட் தனியார் நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவை மே மாதம் 18 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று -04- உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் MTV Channel தனியார் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கொன்றின் கேள்விகளுக்கு பதில்களை பெறும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு திலித் ஜயவீரவிற்கு ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, இன்னமும்  பதிலளிக்கப்படவில்லை என  MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அறிவித்தார்.


அதற்கு பதிலாக ஹப்புதந்திரிகே எரன்தித் என்பவர் சில ஆட்சேபனைகளையும் சத்தியக் கடதாசி ஒன்றையும் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.


குறித்த கேள்விளுக்கு திருப்தியடையக்கூடிய பதில்கள் வழங்கப்பட்டுள்ளதால், திலித் ஜயவீர தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என சட்டத்தரணி சனத் விஜேவர்தன இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவாவின் விளக்கத்திற்கு அமைய, அந்த ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம் திலித் ஜயவீரவை மே மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.


20  கேள்விகள் அடங்கிய கேள்விப் பட்டியலொன்று இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சில கேள்விகள் இவ்வாறு அமைந்துள்ளன...


01. குறித்த  நிறுவனத்தினால் Rapid Antigen பரிசோதனை தொகுதிகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அவதூறை ஏற்படுத்தும் வகையிலான செய்தி ஹிரு TV,  அருண பத்திரிகை, இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டதா? ஔிபரப்பு செய்யப்பட்டதா? அவ்வாறாயின், குறித்த நிறுவனம் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்ததா? அப்படியாயின், அந்த வழக்கின் இலக்கம் என்ன?


02. George Steuart Health தனியார் நிறுவனத்தின் தலைவரான திலீத் ஜயவீர தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து  தாக்கல் செய்த  டிஎம்ஆர் 216/ 2012 என்ற வழக்கு இலக்கத்தின்கீழ் சட்ட நடவடிக்கை எடுகப்பட்டதா?  அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில்   ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத் தலைவர்  திலித் ஜயவீர  நற்பெயருடன் கூடிய அல்லது பண்புள்ள ஒருவர் அல்லவென குறிப்பிடப்பட்டுள்ளதா?


03.  2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி "தடப்பரயா" என்ற    நூல் வெளியீட்டு விழாவில் George Steuart Health தனியார் நிறுவனத் தலைவர் திலித் ஜயவீர மக்கள் மத்தியில்,   தான் சில சந்தர்ப்பங்களில்  தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்துவதாகக் கூறினாரா? கஞ்சா பயன்பாட்டின் போது தாம் திருப்தியடைவதாகக் கூறினாரா?


04.  2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில்,  George Steuart Health தனியார் நிறுவனத் தலைவர் திலித் ஜயவீர, அதிகளவிலான மக்களுக்கு முன்பாக தாம் கவனயீனமாக சுயநினைவிழக்கும் வரை மதுபானம் அருந்தி திருப்தியடைவதாகக் கூறினாரா?


05. George Steuart Health தனியார் நிறுவனத்திற்கு எதிராக  நாணய கட்டுப்பாட்டு சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின், அந்த கொடுக்கல் வாங்கலின் பெறுமதி என்ன? அபராதம் வழங்கப்பட்ட திகதி என்ன?


06. George Steuart Health தனியார் நிறுவனம்  Rapid Antigen பரிசோதனை தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு முன்னர் விண்ணப்பித்ததா? அப்படியாயின், இணையவழியிலா அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டது? இல்லாவிட்டால்,  தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் நேரடியாக  கையளிக்கப்பட்டதா?


MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி G.G.அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, சட்டத்தரணிகளான மியுரு இகலஹேவா, N.K.அஷோக் பரன், தமித்த கரணாரத்ன, நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

 

No comments

Powered by Blogger.