Header Ads



எதிர்கால அரகலய போராட்டத்தை தடுக்கவும் - அமைச்சர்கள் கோரிக்கை


இலங்கையில் ‘அரகலய’ மக்கள் இயக்கத்திற்கு நிகரான போராட்டங்களை எதிர்காலத்தில் தடுக்கும் வகையில் பூரண அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சரவையினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று -09- இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அமைச்சரவை இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.


“பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் வீடுகள் தாக்கப்பட்டால், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை என்றால், நாடு ஒரு மோசமான சூழ்நிலையில் முடிவடையும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இத்தகைய போராட்டக்காரர்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை தடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை.


மே 09, 2022 அன்று இலங்கையில் ஏற்பட்ட நாடு தழுவிய அமைதியின்மையின் ஒரு வருடத்தை இன்று நிறைவு செய்யும் நேரத்தில் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.