Header Ads



முனவ்வரா புதைக்கப்பட்ட இடம் பரிசோதிக்கப்பட உள்ளது


கம்பளை - வெலிகல்ல, எல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி காணாமல் போன 22 வயதுடைய யுவதி படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யுவதியின் கிராமத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரைப் பற்றி கிடைத்த தகவலின்படி, அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலைச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பணியிடத்திற்குச் செல்வதற்கு, குறித்த யுவதி தனது வீட்டிலிருந்து வெலிகல்லவிற்கு சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.


அந்த சாலையில் பல இடங்கள் வெறிச்சோடி கிடப்பதால், முதல் சிசிடிவி கெமராவை பார்த்த பிறகு, அந்த வாலிபர் யுவதியின் கையைப் பிடித்து இழுத்து, வெறிச்சோடிய இடத்தில் உள்ள தென்னந்தோப்பு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.


ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், இதுபற்றி தந்தையிடம் கூறுவதாக கூறியுள்ளார்.


இதன் காரணமாக சந்தேகநபர் இளம் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


பின்னர் யுவதியை தென்னந்தோப்பில் புதைத்து தென்னை மரக்கிளைகள் முதலியவற்றை வைத்து மூடினார். யுவதியின் காலணி, தண்ணீர் போத்தல் உள்ளிட்டவைகள் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த தகவலையடுத்து பெருமளவான மக்கள் அவ்விடத்திற்கு வந்ததையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டி மரண விசாரணை அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதுடன், நாளைய (13) தினம் யுவதி புதைக்கப்பட்ட இடம் பரிசோதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.