Header Ads



மஸ்ஜிதுல் நபவிற்கு வந்த திருடர்கள் - எதற்காக வந்தார்கள் தெரியுமா..?


இஸ்லாத்தின் எதிரிகளால் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனித உடலை அன்னார் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா பள்ளிவாசலில் இருந்து களவாடிச்செல்வதற்கான பல முயற்சிகள், பலதடவைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு முக்கிய சம்பவங்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


முதலாவது அபூ அலி மன்ஸுர் தாரிக் அல் ஹகீம் (996 -1021CE) ஆன அல் ஹகீம் பி அம்ருல்லாஹ் என அறியப்பட்ட எகிப்தை ஆட்சிசெய்த பாத்திமிய (சியாப்பிரிவு) ஆட்சியாளனினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும். மதினாவில் இருந்த அவனது நெருங்கிய சகாக்கள் மதினாவாசிகளை வெறுப்பூட்டுவதற்காக ரசூலுல்லாஹ்வின் புனிததேகத்தை எகிப்திற்கு கடத்துமாறு அல் ஹகீமிற்கு அறிவுரை பகர்ந்தனர். இதற்காக அல் ஹகீமால் மதினாவிற்கு அனுப்பப்பட்ட கொள்ளையர்கள் மதினாவை நெருங்கும்போது பெரும் சக்திவாய்ந்த  புயலை அல்லாஹ் அனுப்பினான். இப்புயல் மதினாவைவும் சுற்றுச்சூழலையும் பலமாக குலுக்கியது. இதனால் திருடர்கள் தங்களின் முயற்சியை கைவிட்டனர். இதுபோன்று இவனால் குறைந்தது இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


இரண்டாவது மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிகழ்வு ஹிஜ்ரி 557 (கி.பி.1164) இல் நிகழ்ந்தது.


அந்தலூசியாவில் (முஸ்லிம் ஸ்பைன்) இருந்து வரும் மொரொக்கொ நாட்டைச்சேர்ந்த முஸ்லிம்கள் எனக்கூறிக்கொண்டு வந்த இரண்டு ரோமைச்சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஹஜ் யாத்திரிகர்கள் போன்று மாறு வேடம் தரித்து மதினாவிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் மதினாவில் புனித மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு மிக அருகில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருந்தனர்.


அவ்விருவரும் அடிக்கடி பெருமானார் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்குச்செல்வதும் அதற்கு முன்னால் இருந்த ‘ஜன்னதுல் பகீய்’- al-Baqi’ - ஐ தரிசிப்பதும் நன்கொடைகளை அளிப்பதுமாய்  மதினாவாசிகளின் கண்ணில் மண்ணைத் தூவினார்கள், அவர்களின்மீது சந்தேகப்படாவண்ணம் கவனமாக நடந்துகொண்டார்கள்.


அவர்கள் மதினாவாசிகள் அறியாவண்ணம் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் இருந்து இறைத்தூதரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை நோக்கி துள்ளியமாக நிலக்கீழ் சுரங்கம் ஒன்றை தோண்டத்துவங்கினார்கள். அங்கிருந்து தோண்டி எடுக்கப்படும் மண்ணை ஒரு தோல்பையில் இட்டு ‘ஜன்னத்துல் பகீய்’ இல் கொட்டினார்கள்.


அப்போது சிரியா ஐ செல்ஜுக் (Seljuk Empire) அரசவம்சம் ஆட்சி செய்துகொண்டிருந்தது. அதன் சுல்தானாக நூருத்தீன் ஸங்கி(ரஹ்) - Noorudin Zangi ((February 1118 – May 15, 1174)  – பதவியில் இருந்தார். இவர் சலாஹுத்தீன் அய்யூபியினால் வழிநடாத்தப்பட்ட நம்பிக்கையான ஓர் ஆட்சியாளர். நூருத்தீன் ஸங்கி ற்கு நேர்மையான வீரம்மிக்க ஆட்சியாளர் என்ற நற்பெயர், கிறிஸ்தவ சிலுவைவீர்ர்களின் படையை பலமுறை தோற்கடித்ததினால் ஏற்பட்டு இருந்தது.


ஒருநாள் இரவு சுல்தான் நூருத்தீன் ஸங்கி (ரஹ்) தஹஜ்ஜுத் தொழுகையை தொழுதுவிட்டு தூங்கியபோது இறைத்தூதர் (ஸல்) அவர்களைக்கனவில் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுல்தானிடம் இரண்டு பளுப்பு நிற தலைமுடியையுடைய மனிதர்களைக்காட்டி: “ஓ....மஹ்மூத்,அவர்களில் இருந்து என்னை பாதுகாருங்கள்” எனக்கூறினார்.


குழம்பிப்போன சுல்தான் கண்விழித்தார். அக்கனவின் அர்த்தம் என்ன என்பது அவருக்கு புரியவில்லை. மீண்டும் தொழுதுவிட்டு தூங்கினார். அதே கனவை மீண்டும் மீண்டும் மூன்றுமுறை கண்டார்கள். தனது கனவைபற்றி ஆலோசனை பெர தனது அமைச்சர்களில் கனவுகள் பற்றி விளக்கமளிக்கக்கூடிய ஒருவரான ஜமாலுத்தீன் அல் மவ்சிலி (Jamaluddin Al-Mawsili) (ரஹ்) அழைத்துக்கூறினார். ஜமாலுத்தீன், சுல்தானிடம் ‘கனவைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம்’ எனக்கூறி உடனடியாக மதினாவிற்கு செல்லுமாறும் கூறினார்.


சுல்தான் நூருத்தீன் ஸங்கி (ரஹ்) அவர்களும் அவரின் படையினரும் ஆயிரம் ஒட்டகைகளில் சிரியாவிலிருந்து மதினாவை நோக்கிப்புரப்பட்டார்கள். அவர்கள் பதினாறு நாட்களில் மதினாவை அடைந்தார்கள். 


மதினாவை அடைந்ததும் முதல்வேளையாக சுல்தான் நூருத்தீன் ஸங்கி (ரஹ்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவிற்குச்சென்று தொழுதார்கள். மதினாவின் ஆளுநர் சுல்தான் நூருத்தீன் ஸங்கி (ரஹ்) அவர்களின் வருகையினால் ஆச்சரியமடைந்தார். கணிவாக ‘ஏன் திடீர் விஜயம் செய்தீர்கள்’ எனக்கேட்டார். சுல்தான் அப்போது தனது கனவைப்பற்றிக்கூறி அவரின் உதவியையும் கோரினார்.


மதினாவின் ஆளுநர் சுல்தானிடம் கனவில் கண்ட இருவரையும் நேரில் கண்டால் அடையாளம் காணமுடியுமா? எனக்கேட்டார்.சுல்தான் ‘நிச்சயமாக’ என பதிலளித்தார். உடன் மதினாவின் ஆளுநர், மதினாவாசிகளுக்கு உணவுப்பொருட்களும் பரிசுகளும் வழங்கப்போவதாகவும் அதற்கு மக்கள் அனைவரையும் சமூகம் தருமாறு பொதுமக்களுக்கு அறிவிப்புச் செய்தார். மக்கள் திரண்டார்கள்,ஆனால் அவர்களின் முகங்களை உற்றுநோக்கிய சுல்தானால் கனவில் கண்டவர்களை அடையாளம் காணமுடியவில்லை. 


ஆளுநர் ‘இங்கே வராத யாரும் இருக்கின்றனரா?’ என விசாரணை செய்தபோது அங்கிருந்த ஒருவர் ‘வாடகைக்கு இருக்கும் இரண்டு நபர்கள் இங்கே வரவில்லை’ எனக்கூறினார்.மேலும் அவ்விருவரும் நல்ல மனிதர்கள் என்பதற்கான சான்றிதழையும் சுல்தானுக்கு வழங்கினார்.


ஆளுநர் அவர்களை அழைத்துவருமாறு பணித்தார்.அவ்விருவரும் வந்தபோது அவர்களை சுல்தான் கனவில் கண்ட அதேமனிதர்கள் அவர்கள்தாம் என்பதை உறுதிப்படுத்தினார்.


அவர்களிடம் இங்கே வந்தமைக்கான காரணம் என்ன என விசாரித்தபோது ஹஜ் கடமையின் நிமித்தமாகவும் மஸ்ஜிதுன் நபவியை தரிசிப்பதற்காகவும் வந்திருப்பதாக்கூறினார்கள். அவர்கள் மதினாவில் ஒரு வருடம் தங்கியிருப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறினர். அதன்பின் சுல்தான் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தார், அங்கே தீய நடவடிக்கைக்கான எந்தவொரு தடயமும் அகப்படவில்லை. ஆனால் அங்கே பெருந்தொகைப்பணமும் ஒரு துணியினால் மூடப்பட்ட பலகை ஒன்றையும் கண்டார்கள். துணியை நீக்கிவிட்டு பலகையைதூக்கியபோது சுரங்கவழிப்பாதை தென்பட்டது,அது பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் கப்ரை நோக்கிச்சென்று அதனை மிகவும் அண்மித்திருந்தது.


உடனடியாக அவ்விருவரும் கைது செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள், ரோமர்கள் என்றும் அவர்களுக்கு அரபு மொழியையும் அரபுக்கலாச்சாரத்தையும் கற்பித்ததாகவும் கூறினார்கள். அவர்கள் பெருமானாரின் புனித உடலை திருடி ரோமுக்கு கொண்டு செல்வதற்காக வந்ததாகவும் கூறினர். அவ்விருவருக்கும் அவர்கள் செய்த குற்றத்திற்காக மரணதண்டனை வழங்க்கப்பட்டது.


மெய்சிலிர்க்க வைக்கும் இந்நிகழ்ச்சியின் பின்னர், சுல்தான் நூருத்தீன் ஸங்கி (ரஹ்) இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ள முடியாதவாறு, பெருமானாரின் அடக்கஸ்தலத்தை சூழவும் ஆழமாக குழிதோண்டி, அதில் உருக்கிய ஈயத்தை ஊற்றி நிலக்கிழ் மதிலமைத்தார்.


AKBAR RAFEEK



No comments

Powered by Blogger.