Header Ads



டாக்கா கிரிக்கெட் தொடரில் திமுத்


இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பங்களாதேஷில் நடைபெறும் டாக்கா பிரீமியர் டிவிசன் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். இதன்மூலம் அவர் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புகிறார்.


திமுத் கருணாரத்ன டாக்கா பிரீமியர் டிவிசன் கிரிக்கெட் தொடரின் சினேபுகூர் கிரிக்கெட் கழக அணிக்காக விளையாடவுள்ளார்.


திமுத் கருணாரத்ன கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியிருந்தார்.


குறிப்பாக, ஒருநாள் உலகக் கிண்ண இலங்கை அணியின் தலைவராகவும் அவர் செயற்பட்டு இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். எனினும் அதன் பின்னர் அவர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடவில்லை. அவரை மீண்டும் இலங்கை ஒருநாள் அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரிசீலிப்பதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட திமுத் கருணாரத்ன,


“மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு திரும்புவது புத்துணர்ச்சியை கொடுப்பதுடன், இந்தப் போட்டிகள் மிகவும் தேவையான ஒருநாள் போட்டிகளாக அமையவுள்ளன. இந்த தொடரின் போது என்னுடைய அனுபவங்களை அணி வீரர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவுள்ளதுடன், என்னுடைய ஆட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன்” என்றார். டாக்கா பிரீமியர் டிவிசன் தொடரானது 12 அணிகள் மோதும் லிஸ்ட் ஏ போட்டிகளாக அமையவுள்ளதுடன், தொடரில் முன்னிலை பெறும் 6 அணிகள் பிளே–ஓப் சுற்றுக்கு முன்னேறும்.


இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், திமுத் கருணாரத்னவின் இந்த ஒருநாள் போட்டிகளுக்கான மீள்வருகை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.