Header Ads



தனிப்பட்ட திருமண வைபவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பிரதமர் அலுவலக கார்


 பிரதமர் அலுவலகத்தின் சொகுசு காரை பழுது பார்ப்பதற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை திருமணத்திற்கு பயன்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கார் பழுது பார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியின் கோரிக்கைக்கமைய, திருமண நிகழ்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.


அதனை கொண்டு சென்ற வாடகை வாகன சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 15 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தயான் நிரங்க என்ற நபரை அபராதம் செலுத்தும் வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சிறைத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதனால் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வாகனத்தை ஒப்படைத்த வாகன பழுதுபார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவருக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


பிரதமர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட வாகனத்தை இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவது மிகவும் பாரதூரமான குற்றமாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


அப்படி ஒரு வாகனத்தை எடுத்து கொலை அல்லது வேறு ஏதேனும் குற்றத்திற்காக பயன்படுத்த சாத்தியம் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.