Header Ads



“உண்மையைத் தேடி அலைந்தேன், அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது”



“உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன், அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது!”


நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரர் யூஷா எவன்ஸ் அவர்களுடைய காணொளிகளை YouTube-பில் காண முடிந்தது. அதே தெளிவான பேச்சு, அதே அர்ப்பணிப்பு. மனோதத்துவம் மற்றும் இஸ்லாமிய அழைப்பில் தனித்துவம் பெற்றவர் யூஷா எவன்ஸ். Islamic Sciences பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர். தற்காப்பு கலை வல்லுநர் மற்றும் பிளாக் பெல்ட் உரிமையாளர்.


தீவிர ஆய்வுகளுக்கு பிறகு இஸ்லாமிற்குள் வந்த யூஷா எவன்ஸ், இதுக்குறித்து விளக்கும் காணொளிகள், YouTube-பில் மிகவும் பிரசித்திப்பெற்றவை. இலட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்று வரும் இந்த வீடியோக்களில், இஸ்லாம் தன்னுள் எப்படி வந்தது என்பதை மிக உணர்வுப்பூர்வமாக விளக்கி இருப்பார் எவன்ஸ். அவற்றில் இருந்து சில பகுதிகள் இங்கே உங்கள் பார்வைக்கு, இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட 1998 காலக்கட்டத்தை மனதில் கொண்டு படிக்கவும்.


“மதங்களை பின்பற்றுபவர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர. அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா?    என்பது மட்டும்தான்.


ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், ‘உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்’. பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.


நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது. பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன். இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.


ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,


‘முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற Moon God-டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்’ என்று என்னென்னவோ இருந்தது.


அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். ‘நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை’


பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே.

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,


‘இஸ்லாமைப் பற்றி தெரியுமா?’ என்று கேட்டார்.


‘இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்’ என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.


‘So, என்ன நினைக்கிறாய்?’


‘நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்’

‘உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்’

‘நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?’

‘ஆம், அதனால் என்ன?’

‘முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே’

‘என்ன?’ ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.


‘இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா’


‘ஜும்மாஹ் என்றால்?’


‘ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது’ (அரங்கத்தில் சிரிப்பு)


‘எங்கே இருக்கிறது பள்ளிவாசல்?’


அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு பள்ளிவாசல் இருக்கிறதென்று. அவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.


அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.


என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். ஒருவித பயம். பின்னர் சொற்பொழிவு ஆரம்பித்தது “இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு” என்று ஆரம்பித்தார் இமாம். அவ்வளவுதான் பயம் அதிகரித்தது. வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.


அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. சொற்பொழிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.


இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, ‘இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர’. அதுமட்டுமல்லாமல், இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம், மூசா அலைஹிஸ்ஸலாம் என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?


சொற்பொழிவு முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.


‘என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

‘தொழ போகிறோம்’

‘யாரை?’

‘இறைவனை’

‘எந்த இறைவன்?’


‘உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை’


என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.


தொழுகை ஆரம்பித்தது. குர்ஆனின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது. முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு. இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.


தொழுகை முடிந்தது. மிகவும் அவமானமாக உணர்ந்தேன். எல்லா சமய நூல்களையும் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.


தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டேன்.


பின்னர் அவர் என்னிடம் இஸ்லாமை பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,


‘இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?’


‘ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்’


‘அதை நான் படிக்கலாமா?’

‘நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன்.

முதல் அத்தியாயம், அல் பாத்திஹா,

கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள்.

மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள்.

அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள்.

நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள்.

நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது.


ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல்.


சூரத்துல் அல் இம்ரான் போன்ற அத்தியாயங்களில் கூறப்பட்டிருந்த ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களது வரலாறானது நான் இதுவரை படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா அலைஹிஸ்ஸலாம் இவர்தான்.


குர்ஆனை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன்.


ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.


முஸ்லிம்கள் என்றால் யார், எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை. ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.


‘இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்’ என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை. கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குர்ஆனின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.


அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக் கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன். ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.


திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாமை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள் என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்”


–   Aashiq Ahamed -

No comments

Powered by Blogger.