Header Ads



இலங்கை, துருக்கி, நெதர்லாந்து ஒத்துழைப்புடன் நீர் திட்டம் - மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை - ரணில்


வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கேகாலை அரநாயக்க "அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்" பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழ்,  இந்த நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 


இதன் நிர்மாணப் பணிகள் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.


தினந்தோறும் 21,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், 07 சேவை நீர்த்தேக்கங்கள், 37 கிலோமீற்றர் பரிமாற்றக் குழாய் அமைப்பு, 120 கிலோமீற்றர் விநியோக குழாய் அமைப்பு ஆகியன இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.


இந்த திட்டத்தின் கீழ், 52,300 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 169,000 மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதோடு, அதன் கீழ் 25,200 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்படும். இதனைத்தவிர ஏற்கனவே உள்ள 27,100 நீர் இணைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.


பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கையளித்த ஜனாதிபதி, நீர் கட்டமைப்பையும் திறந்து வைத்தார். பின்னர் குடிநீர் திட்ட வளாகத்தையும் பார்வையிட்டார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்தேன். இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


கபீர் ஹசீம் அமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பதவிக் காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்த குடிநீர் திட்டத்தால் சுமார் இரண்டு இலட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். இந்த குடிநீர் திட்டத்திற்கு உதவிய அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை. நாட்டில் இருந்த முதலீட்டாளர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். அவ்வாறான சூழலில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் நான் நாட்டின் பொறுப்பை ஏற்று, சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளேன்.


ஏனென்றால் சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி, மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் பெருமையுடன் கண்ணியமாக வாழவே விரும்புகிறார்கள்.


சர்வதேச நாணய நிதியம் எமக்கு கடினமான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் எங்களுக்கு வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை. இதற்கு முன்னரும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இதே போன்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.


அங்கு ஒரு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல்களில்  இருந்து விலகியது. ஆனால் நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று சரியான முகாமைத்துவத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.


எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள், நமது நாட்டின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்து, பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம்.


இன்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி தேவையான ஆதரவை வழங்கியுள்ளனர். இந்த நாடு அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.


நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

''இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. நெதர்லாந்து அரசுக்கும், துருக்கி அரசுக்கும் எனது சிறப்பு நன்றிகள். மேலும், இப்பணிக்கு பங்களித்த நீர் வழங்கல் சபை உட்பட அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் இங்கு தங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உழைத்தமைக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.


ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் எண் 6, அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் வழங்கும் இலக்கை அடைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.


இத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முயற்சி எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் இன்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சியே. இன்று இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றியடைய தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜனாதிபதி அவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்று ஜனாதிபதி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்துள்ளார். அவர் முன்னின்று நடத்தும் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தினால் கைவிடப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய நிலையை நாடு எட்டியுள்ளது என்றே கூற வேண்டும்.'' என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, 

''தற்போதைய ஜனாதிபதி 2018 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது இந்த நீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இன்று அவர் இந்த குடிநீர் திட்டத்தை திறந்து வைக்க வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கேகாலை மாவட்டம் நீரினால் தன்னிறைவு பெற்றுள்ள போதிலும் மாவட்டத்தில் 45 வீதமான மக்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இந்த நீர்த்திட்டத்தின் மூலம் சுமார் 60% மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதைக் கூற விரும்புகின்றேன்.


திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் 70% ஆக உயர்ந்துள்ளது. அம்பாறையிலும் அப்படித்தான். போராட்டக்காரர்கள் அரச சொத்துகளை இடித்து சேதப்படுத்தினாலும், இது போன்ற பாரிய திட்டங்களைப் பெற்றுக்கொள்ளவே போராட வேண்டும் என்று நான் நம்புகிறேன்."  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.


வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய 

"இந்த குடிநீர் திட்டத்தால் ஏராளமான மக்கள் பயன்பெறுவர். கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் எமது அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இதுபோன்ற முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்படும் போது, பல்வேறு சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்றிரவு, இந்த திட்டத்திற்காக கொண்டுவரப்பட்டிருந்த குழாய்களுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். இதன் பெறுமதி 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.


நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில் ஜனாதிபதி நாட்டின் பொறுப்பை ஏற்று சரியான பொருளாதாரக் கொள்கையை நோக்கி நாட்டை வழிநடத்தினார். உங்களின் பொருளாதார சீர்திருத்த திட்டம் மிகவும் முக்கியமானது. அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டமும் மிகவும் அவசியமானது என ஜனாதிபதிக்கு நான் பரிந்துரைக்கிறேன். ஜனாதிபதியின் புதிய பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தின் மூலம் இந்த நாடு ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்." இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.


தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், 

"ஜனாதிபதி, பதவியேற்றதன் பின்னர் கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். இந்த மாபெரும் குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கவே வருகை தந்துள்ளார். இந்த மாபெரும் குடிநீர் திட்டம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடங்கப்பட்டது. ஆனாலும் அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அதன் பயனை இன்று மக்களுக்கு வழங்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.


கேகாலை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. யானைகள் சரணாலயம், மிருகக் காட்சி சாலை, கித்துல்கல ராஃப்டின் விளையாட்டு போன்றவற்றின் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவர முடியும்.


ஜனாதிபதி தொடர்ந்து கூறும் பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.


இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் திருமதி போனி ஹோபேக்

"இந்த திட்டம் இலங்கை, நெதர்லாந்து மற்றும் துருக்கிய ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டது. இலங்கையின் பொறியியலாளர்கள் தங்களுடைய பெறுமதியான அறிவினால் அதிகளவான மக்கள் தொடர்ச்சியான சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுக்கொள்ளும் இந்த அற்புதமான திட்டத்தை உருவாக்க முடிந்தது. இது 81 மில்லியன் யூரோ செலவாகும் திட்டமாகும். இந்தத் திட்டம் திட்டமிடல் மற்றும் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல், அறிவைப் பகிர்ந்துகொள்வது மற்றும் மக்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியது. எனவே, இன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.


வடிவமைப்பு என்பது சம வாய்ப்புகளை அணுக அனுமதிப்பது என்று நான் நினைக்கிறேன். தற்போது, புதிய சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையில் புதிய வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகளுக்கு தேவையான பின்னணியை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.


நெதர்லாந்து நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் இலங்கைக்கு வந்து இலங்கை நிறுவனங்கள் மற்றும் இலங்கை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஆர்வமாக இருக்கின்றனர். இதுகுறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது இலங்கை மக்களுக்கு உயர் நன்மைகளை பெற்றுத்தரும். அவர்களுக்கு மேலும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன்." இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம், ராஜிகா விக்ரமசிங்க, சுஜித் சஞ்சய பெரேரா, உதயகாந்த குணதிலக்க, கேகாலை மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் திருமதி டெமெட் சர்காஷூலி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்..


ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

21-05-2023

No comments

Powered by Blogger.