Header Ads



தன்மானம் காக்க தனிமையில் போராடி ஷஹீதாக்கப்பட்ட முனவ்வரா, மரணம் தரும் படிப்பினைகள்...


தன்மானம் காக்க தனிமையில் போராடி ஷஹீதாக்கப்பட்ட (கெலிஓய- எல்பிடியவைச் சேர்ந்த) சகோதரி பாதிமா முனவ்வரா விற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உயரிய சுவன வாழ்வை வழங்க மன்றாடிப் பிரார்தித்தவனாக!


ஒரு 22 வயது சகோதரி தனிமையில் தனக்குரிய வாழ்வைத் தேடிய போராட்டத்தில் தான் ஒரு கொடிய மிருகத்தின் கோரக் கரங்களால் காவு கொள்ளப் பட்டிருக்கின்றாள்.


இது தனிப்பட்ட ஒரு விவகாரம் என்பதனை விட ஒரு தேசத்தின் பாதுகாப்புசார் விவகாரமாகவும் குறிப்பாக ஒரு சமூகத்தின் சமய கலாசார மரபுகள் சார் விவகாரமாகவும் பார்க்கப் பட வேண்டும்.


அதிலும் குறிப்பாக  சம்பந்தப்பட்ட இருவரும் இரண்டு பாலினங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர், சுரண்டுகின்ற ஒரு வர்க்கமும் சுரண்டப்படுகின்ற ஒரு வர்க்கமும்  இருக்கின்றன, இங்கு எந்தத் தரப்பு இத்தகைய அக்கிரமங்களின் பங்குதாரராக இருக்கின்றது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.


அந்த வகையில் ஒரு பெண்மீது திணிக்கப்படுகின்ற சமூக கலாசார அநீதிகளை கொடுமைகளை காலகாலமாக கண்டுகொள்ளாத ஒரு சமூகம் இங்கு வெட்கித் தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.


தனக்கு ஒரு கெளரவமான வாழ்வை வாழ்வாதாரத்தைத் தேடி ஒரு பெண் வாசல் தாண்டி வரும் நிலை ஏற்பட்டு விட்டால் அவளது ஹிஜாப் நிகாப் பற்றியும் மஹ்ரம் பற்றியும் கற்பு நெறிபற்றியும் பத்வாக்களை அள்ளி வீசும் சமூகம் அவளுக்கு கெளரவமான வாழ்வை வாழ்வாதாரத்தை வழங்க வேண்டிய ஆண்களின் சமூகக் கடப்பாட்டை பற்றி கவலை கொண்டதில்லை.


நபிமார்கள் சஹாபாக்களது திருமணம் குடும்ப வாழ்வு பற்றி அலுப்புத் தட்டும் வரை மணிக் கணக்கில் நிகாஹ் பயான் நடத்தும் உலமாக்கள்  திருமணம் சார் சீர்கேடுகளை வரதட்சணை சீதன சீர்வரிசைக் கொடுமைகளைப் பற்றி வாய் திறப்பதில்லை.


எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த சகோதரி தான் பெறும் மாத வருவாயினைக் கொண்டு பஸ்வண்டி தரிப்பிடத்திற்கு நம்பகமான முச்சக்கர வண்டியிலாவது இரண்டு கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வசதிபடைத்தவரல்ல, இந்நிலை அவருக்கு மட்டும் உரியதல்ல என்பதனை எல்லோரும் உணர வேண்டும்!


இன்று போதை வஸ்துகளுக்கு அடிமையாகிய காமுகர்கள் இரைதேடி அலைந்து திரிகின்றமை பகிரங்க இரகசியமாகும், நாம் வாழும் சூழல் குடிபோதைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் வாழும் சூழலுமாகும்!


கொலைக் குற்றத்தை ஒத்துக் கொண்டு பொலிஸில் சரணடைந்துள்ள அஹ்மத் எனும் இளைஞன் தான் போதைவஸ்திற்கு அடிமையானவன் என்றும் தனது ஊரில் 98 % வீதமானோர் போதை பாவனையில் இருப்போர் எனும் அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன.


அவ்வப்போது இவ்வாறான செய்திகளை நாம் கடந்து செல்கின்றோம், அவற்றிலிருந்து நாம் படிப்பினை பெறுவதில்லை!


இந்த சம்பவத்தை மட்டுமல்ல இது போன்ற சம்பவங்களை எமது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நடந்த நடக்கிற சம்பவங்களாகக்  கருதி நாம் விளிப்புணர்வு அடையத் தவறிவிட்டால் கைசேதமே நாளை எமது சந்ததிகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு உலகத்தையே நாம் விட்டுச் செல்வோம்!


சகோதரி பாதிமா முனவ்வராவின் பிரிவால் வாடும் பெற்றார்கள் உடன் பிறப்புக்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையையும் மன அமைதியையும் தரப் பிரார்திப்பதோடு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*

✍️12.05.2023 || SHARE if you CARE

1 comment:

  1. Nadenthathu kudumai! Adhatku sariyaana thandanai yuden! Ini seiya ninaikum owwrowarukkum padipinaiyaaha iruka wendum!

    Aththuden! Neegal kattureiyil kooriyethil werum 20% to 25% aana wadayagalaiye purinthu kolla mudinthathu. Meethi puriya willai! Enaku tamil theriya willai yo allathu unga mozhinadai enakukku puriye willaiyo ennamo!

    ReplyDelete

Powered by Blogger.