Header Adsஅக்குரனை குண்டுப் புரளி - கைதானவர் விடுதலை, முஸ்லிம் சட்டத்த்தரணிகளின் வாதம், - நீதிபதி கூறிய முக்கிய விடயங்கள்


- BY: M.F.M.Fazeer -


கண்டி - அக்குரனை, 6 ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற தகவல் வழங்கியமைக்காக கைது செய்யப்பட்ட மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் எனும் சந்தேகநபரை பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


"சந்தேக நபர் தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலை பொது வெளியில் எங்கும் பகிர்ந்துகொள்ளவில்லை. அவர் அதனை உரிய அதிகாரியான பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடனேயே பகிர்ந்துகொண்டுள்ளார்.


பொறுப்புள்ள ஒரு குடிமகன் செய்ய வேண்டிய வேலையையே அவர் செய்துள்ளார். அவ்வாறான நிலையில், அவருக்கு எதிராக ஐ.சி.சி. பி.ஆர். எனும் சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன் வைக்க முடியாது.


எனவே அந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரிக்கின்றது" என அறிவித்தே கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ், சி.ஐ.டி.யின் ஆட்சேபனத்தை நிரகரித்து மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித்தை பிணையில் விடுவித்தார்.


பொய்யான தகவலை வழங்கியதன் ஊடாக, இனங்களுக்கு இடையே முரண்பாட்டு நிலையை ஏற்படுத்த முயன்றமை தொடர்பில் குற்றம் சாட்டி, சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவின் சமூக ஊடகங்கள் தொடர்பிலான விசாரணையாளர்கள் சாஜித்தை கைது செய்திருந்த நிலையில் அவர் நேற்று (4) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்ன்லையில் விசாரணைக்கு வந்தது.


இதன்போது சி.ஐ.டி.யின் சமூக வலைத்தள விவகார விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்தனர்.


சந்தேக நபரான சாஜித் மீது, தண்டனை சட்டக் கோவையின் 120,175 மற்றும் 485 ஆம் அத்தியாயங்களின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 ஆவது அத்தியாயத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் குற்றம் சாட்டியிருந்தனர்.


இந்நிலையில் விளக்கமறியலில் இருந்து சாஜித் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான ரிஸ்வான் உவைஸ், வஸீமுல் அக்ரம் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.


இதன் போது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் அது அடிப்படை அற்றது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.


குறித்த சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தை விளக்கிய சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அதன் கீழ் சாஜித் மீது குற்றம் சுமத்த முடியது என குறிப்பிட்டார்.


வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி வாதங்களை முன் வைத்த சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டிலிருந்து சந்தேக நபரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார்.


அத்துடன் சந்தேக நபருக்கு, இணையம் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவலை அவர் எந்த பொது வெளியிலும் பகிரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அதனை அவர் பாதுகாப்பு அமைச்சுக்கே அறிவித்ததாகவும், அவ்வாறு அறிவிக்காமல் இருந்து, ஏதேனும் அசம்பாவிதம் இடம்பெற்றிருந்தால் தனது சேவை பெறுநரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க தவறியமைக்காக கைது செய்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் தனக்கு கிடைத்த தகவல் உண்மையா பொய்யா என விசாரித்து தகவலை பாதுகாப்பு அமைச்சிடம் கூறும் அளவுக்கு உளவுத் துறையோ வேறு பாதுகாப்பு தரப்போ தனது சேவை பெறுநரின் கட்டுப்பாட்டில் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், பொது மக்கள் குழப்பம் அடையும் வகையில் அத்தகவல் பரவ பொலிஸாரின் நடவடிக்கையே காரணமானது என சுட்டிக்காட்டினார்.


அத்துடன் தனக்கு அந்த தகவலை அளித்தவரின் தொலைபேசி இலக்கம், வங்கிக் கணக்கிலக்கம் உள்ளிட்டவற்றை இணைத்தே தனது சேவை பெறுநர் தகவல் அளித்திருந்த நிலையில், அத்தகவலை மையப்படுத்தி ஏன் இதுவரை அந்த நபர் அல்லது நபர்களை அடையாளம் காண சி.ஐ.டி.யினர் தவறியுள்ளனர் என சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கேள்வி எழுப்பினார்.


இந்த விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு அப்பால் நகராமல் இருப்பது சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவும், இந்த தகவலின் பின்னால் உள்ளவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்து கண்டிப்பாக விசாரணை அவசியம் எனவும் அது குறித்த விசாரணை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வாதிட்டார்.


எனவே சாட்சியாளராக இருக்க வேண்டிய தனது சேவை பெறுநரை சிறை வைப்பது அபத்தமானது என அவர் சுட்டிக்கடடினார்.


எனினும் இதற்கு பதிலளித்த சி.ஐ.டி. அதிகாரிகள் பிணையளிக்க கடும் ஆட்சேபனை வெளியிட்டனர். விசாரணை நிறைவு பெறவில்லை எனக் கூறி அவர்கள் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.


குறித்த தகவலால் ஏற்பட்ட நிலைமைகள் பாரதூரமானது என அவர்கள் குறிப்பிட்டனர்.


எனினும் இரு தரப்பு வாதங்கள், சம்பவம் தொடர்பிலான சந்தர்ப்ப விடயங்களை ஆராய்ந்த நீதிவான் பிரசன்ன அல்விஸ், டெனீ எதிர் சிறிமல், தயாநந்த எதிர் வீரசிங்க, உதய பிரபாத் கம்மன்பில எதிர் எம்.டி.சி.பி. குனதிலக உள்ளிட்ட 5 உயர் நீதிமன்ற தீர்க்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்களை ஆதாரமாக எடுத்த நீதிவான், பொலிசார் கூறுவதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை விளக்கமறியலில் வைக்கக் கூடாது என திறந்த மன்றில் சுட்டிக்காட்டினார்.


இந்த வழக்கை பொருத்தவரை பிணை வழங்க நீதிவானுக்கு தடையாக இருப்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டே என சுட்டிக்கடடிய நீதிவான், அக்குற்றச்சாட்டு எந்தளவு நியாயமற்றது என்பதை மேற்குறித்த வழக்குத் தீர்ப்புக்களுடன் ஒப்பீடு செய்து விளக்கினார்.


அதன்படி, பொறுப்புள்ள குடி மகனாக தனக்கு கிடைத்த தகவலை சந்தேக நபர் உரிய அதிகாரிக்கே அனுப்பியுள்ளமை தெளிவாவதாக நீதிவான் திறந்த மன்றில் கூறினார்.


அவ்வாறு பொறுப்புடன் செயற்பட்ட ஒருவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் கைது செய்வது, பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளிக்க அச்சப்படும் சூழலை உருவாக்கும் எனவும், அதனால் பொது மக்கள் குற்றம் ஒன்று நடப்பதை பார்த்துக்கொண்டு இருப்பார்களே தவிர தகவல் வழங்க முன் வர மாட்டார்கள் என சுட்டிக்காட்டினார்.


இங்கு சந்தேக நபர் மீது ஐ.சி.சி.பி.ஆர். பயன்படுத்தப்பட்டுள்ளமை அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான நோக்கத்துக்காக என்பது தெளிவாவதாக குறிப்பிட்ட நீதிவான் அக்குற்றச்சாட்டை நிராகரித்தார்.


அதன்படியே ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை முடியவில்லை என பொலிஸார் அறிவித்ததால், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க தீர்மானிப்பதாக அறிவித்த நீதிவான், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணை ஒன்றில் விடுவித்து வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


oruvan

No comments

Powered by Blogger.