Header Adsஅடுத்தடுத்து துவம்சம் என்ற கூட்டுச் சதியில், கொந்தளிக்கும் 3 முஸ்லிம் நாடுகள்


- லத்தீப் பாரூக் -

சூடான், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனம் ஆகிய மூன்று முக்கிய முஸ்லிம் நாடுகள் இன்று வெளிநாட்டுத் தலையீடுகள் காரணமாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைக்கு பிரதான காரணம் வெளிநாட்டுத் தலையீடுகளே.


சவூதி அரேபியாவின் ஆதரவுடன் கூடிய பிரயோசனமற்ற சமாதான முயற்சிகளையும் மீறி சூடானில் இரண்டு முக்கிய இராணுவ பிரிவுகளுக்கு இடையிலான மூர்க்கத்தனமான மோதல்கள் தொடருகின்றன. இதனால் அப்பாவி மக்கள் பெரும் துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது ஏற்படுத்தப்பட்டு வரும் அர்த்தமற்ற அழிவுகள் அந்த நாட்டை சின்னாபின்னமாக்கிவிடும் அச்சநிலை உருவாகி உள்ளது.


தீர்வுகளுக்கான நம்பிக்கைகள் அற்றுப் போன நிலையில், துயரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் சகல தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான சூடான் மக்கள் அண்டை நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த இடப்பெயர்வு எந்த விதமான எதிர்ப்பார்ப்புக்களும் அற்ற ஒரு எதிர்காலத்தை நோக்கியதாகவே உள்ளன.

 

சூடானில் இடம்பெற்று வரும் மோதல்கள் அந்த நாட்டின் ஆயுதப் படைப் பிரிவுகளுக்கு இடையிலானது. ஆயுதப் படைகளின் தளபதியும் அந்த நாட்டின் தலைவராகவும் கருதப்பட்ட ஜெனரல் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர். இராணுவத்தின் துரித ஆதரவு படைப்பிரிவான சுளுகு பிரதானி மொஹமட் அம்தான் டகாலோ ஐக்கிய அரபு இராச்சியத்தின் பூரண ஆதரவு பெற்றவர்.


மோதல்கள் தொடருவதற்கான அறிகுறிகளே அங்கு தொடர்ந்தும் காணப்படுகின்றன. இந்த நாடு இன்னொரு சிரியாவாகவோ அல்லது லிபியாவாகவோ கூட ஆகலாம். ஒவ்வொரு முஸ்லிம் நாடாக அடுத்தடுத்து துவம்சம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய கூட்டுச் சதித் திட்டத்துடன் கூடிய நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக இது நடக்கலாம். இந்த சதித் திட்டத்தினதும் நிகழ்ச்சி நிரலினதும் இறுதி இலக்கு மத்திய கிழக்கை வெறுமனே வெற்று நிலமாக்கி அங்கு அகண்ட இஸ்ரேல் ராஜ்ஜியத்தை உருவாக்கி அதை பிராந்திய ரீதியான வல்லரசாக நிலைநிறுத்துவதாகும்.


பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அங்கு இடம்பெறும் போராட்டம், மக்களின் பெரும் ஆதரவுடன் பிரதமராகப் பதவி ஏற்ற இம்ரான் கானுக்கும் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷரீப் உடைய அரசுக்கும் இடையிலானது. இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது இம்ரான் கானின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து அதன் மூலம் இம்ரானின் அரசு தோற்கடிக்கப்பட்டமை இப்போது நிரூபணமாகி உள்ளது.


இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி அமெரிக்க ஆதரவுடன் பாகிஸ்தான் இராணுவத்தின் பின்னணி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டமே இம்ரானின் ஆட்சி கவிழ்ப்பாகும். இதே இராணுவம் ஒரு காலத்தில் இம்ரான் ஆட்சிக்கு வரவும் அதரவாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உலக அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அடையாளச் சின்னமாகவும் கருதப்பட்ட இம்ரான் கான் பதவியில் இருந்த போது பாகிஸ்தானின் தலைவிதி சில நாசகார சக்திகளின் கரங்களில் இருப்பதை உணர்ந்து கொண்டார். இது அமெரிக்காவையும் பாகிஸ்தான் இராணுவத்தையும் உள்ளடக்கியது. பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இவை தான் வழிகாட்டிச் செயற்பாடுகளில் இருந்து வந்தன.


எவ்வாறேனும் மற்றவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்படுவதை விட தனது விதியைத் தானே தீர்மானித்து தன்னை சுயமாகக் கட்டி எழுப்பி பராமரித்துக் கொள்ளக் கூடிய ஒரு தேசமாக பாகிஸ்தானை உருவாக்குவதில் இம்ரான் கான் தெளிவான நோக்குடனும் அர்ப்பணத்துடனும் செயற்பட்டார். பாகிஸ்தானுக்கும் அதன் மக்களுக்கும் நன்மை தரக்கூடிய தரப்புக்களுடன் கைகோர்ப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். வெளிநாடுகளின் நலன்களின் கீழ் அடிமை பட்டுக் கிடப்பதை அவர் அடியோடு வெறுத்தார்.


பாகிஸ்தான் இராணுவம் தனது முகாம்களுக்குள் இருக்க வேண்டும். நீண்டகாலமாக பாகிஸ்தான் இராணுவம் அதிகார பலத்தை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக இருந்து வந்துள்ளதை இம்ரான் வெறுத்தார்.


பாகிஸ்தான் இராணுவம் ஊழல்கள் மலிந்து கிடக்கும் ஒரு அமைப்பு. சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாக பாகிஸ்தானை பிளவு படுத்தி பங்களாதேஷை உருவாக்குவதில் பாகிஸ்தான் இராணுவத்தின் பங்களிப்பு இங்கு எவராலும் மறக்க முடியாத எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விடயமாகும். இந்த அச்சுறுத்தல் இன்னமும் அந்த நாட்டுக்கு உள்ளது. பாகிஸ்தானை மேலும் பிளவு படுத்தி துண்டாடி அதை வலுவற்ற ஒரு தேசமாக்க முயற்சிக்கும் சக்திகள் இன்னும் செயற்பட்ட வண்ணமே உள்ளன.

 

இவற்றின் நடுவே பாகிஸ்தான் உலக அரங்கில் ஒரு முன்னணி முஸ்லிம் நாடு என்பதையும் இம்ரான் உணர்ந்து கொண்டார். பாகிஸ்தானுக்குள் பொருளாதார பிரச்சினைகள் உட்பட இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் கூட அது பொதுவான நலன்களின் அடிப்படையில் உலகின் ஏனைய முஸ்லிம் நாடுகளுடன் கைகோர்த்து செயற்பட வேண்டிய ஒரு நாடு என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த சிந்தனையைக் கொண்டிருந்த அவர் முன்னாள் மலேஷிய பிரதமர் மஹாதிர் மொஹமட் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டொகன் ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய முஸ்லிம் அணியை உருவாக்குவதில் ஈடுபட்டார்.


இம்ரானின் இந்த புதிய முயற்சி அமெரிக்கா, பிரிட்டன், ஏனைய ஐரோப்பிய நாடுகள்; இஸ்ரேல் மற்றும் அவர்களின் அரபுலக பங்காளிகள் மத்தியில்; அதிர்வலைகளை ஏற்படுத்தின. இவர்கள் தங்களது நலன்களைப் பேணி எகிப்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஸியை பதவியில் இருந்து தூக்கி எறிந்ததைப் போல இம்ரானையும் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டிய தேவையை அவர்களுக்கு எற்படுத்தியது.


இதன் விளைவுதான் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை. இம்ரானின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு பெருந்தொகை பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டு இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 


நம்பி;கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டு இம்ரானின் பதவி பறிக்கப்பட்ட பின் ஊழலுக்குப் பேர்போன ஷரீப் மற்றும் பூட்டோ குடும்பங்களின் கரங்கள் ஓங்கின. இந்த சதிப் புரட்சிக்கு பின் புலத்தில் இருந்து செயற்பட்ட இராணுவத்தின் துணையோடு தான் வெளிநாட்டு சக்திகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்றைய பிரதமர் தெரிவானார்.


ஆனால் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டிவிட்டது. தங்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட இம்ரான் கான் தான் பாகிஸ்தானின் பிரதமர் என்றும் அவரது அரசு தான் சட்டபூர்வமான அரசு என்றும் மக்கள் தொடர்ந்து கருதினர்.


இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்கியது முதல் இராணுவத்தின் துணையோடு இன்றைய சதிகார அரசு இம்ரானை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு தன்னால் முடியுமான எல்லா முயற்சிகளையும் செய்து வருகின்றது. அவரை கொலை செய்வதற்கு கூட சில முயற்சிகள் இருக்கலாம் என்ற சந்தேகமும் சிலரால் முன் வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான வழக்குகளை அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்து அவரது வாழ்வு பெரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.


இவ்வாறானதோர் பின்னணியில் தான் அவர் அண்மையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கடத்தப்பட்டார். பின்னர் தடுத்து வைக்கப்பட்டு மோசமாக நடத்தவும் பட்டார். இதனை அடுத்து நாடு முழுவதும் மக்கள் எழுச்சியுடன் கூடிய வன்முறைகளும் தலைதூக்கின. நிலைமை மோசமடைந்ததை அடுத்து 2023 மே 11 வியாழக்கிழமை கூடிய பாகிஸ்தானின் உச்ச நீதிமன்ற அமர்வு இம்ரானின் கைது சட்ட விரோதமானது என்றும் அவரை விடுதலை செய்யும் படியும் உத்தரவிட்டது.


இது தெரிவு செய்யப்படாத அரசுக்கும் இராணுவத்துக்கும் விடுக்கப்பட்ட தெளிவான செய்தியாகும். இராணுவம்தான் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலை இனிமேலும் கிடையாது என்ற தெளிவான செய்தியை மக்கள் எழுச்சி ஏற்கனவே இராணுவத்துக்கு வழங்கியுள்ளது. இராணுவம் அரசியலில் தலையிட்டு இராணுவ சட்டத்தை பிரகடனம் செய்யாவிட்டால், புதிய ஜனநாயக பாகிஸ்தான் ஒன்று மலருவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் காத்திருக்கின்றது.


சூடானும் பாகிஸ்தானும் இவ்வாறு கொந்தளித்துக் கொண்டு இருக்கையில், மறுபுறத்தில் உலகம் முழுவதும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து பலஸ்தீன பூமியில் உருவாக்கப்பட்ட செயற்கை நாடான இஸ்ரேல் மீண்டும் காஸா பிரதேசத்தில் வான்வழி தாக்குதல்களை நடத்தி பால் மற்றும் வயது வித்தியாசமின்றி அப்பாவி பலஸ்தீன மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கி உளளது. காஸாவின் உள் கட்டமைப்புக்களும் குடியிருக்கும் வீடுகளும் நாசமாக்கப்பட்டு மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


பலஸ்தீன பூமியை கண்டும் கூட இராத யூத மக்களை அங்கு கொண்டு வந்து குடியேற்றி அந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரம்பரையாக வாழ்ந்து வந்த பலஸ்தீன மக்களை இனச்சுத்திகரிப்பு, படுகொலைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் மூலம் வெளியேற்றி யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டவிரோத நாடு தான் இஸ்ரேல்.


இவ்வாறான ஆரம்பகால படுகொலைச் சம்பவங்களில் ஒன்று தான் டேர் யாஸின் படுகொலைச் சம்பவம். பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்த பயங்கரவாதி மெனாச்சம் பெகின் தான் இந்த படுகொலைகளுக்கு தலைமை தாங்கி நடத்தினார். 250க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு தலைமை தாங்கிய மெனாச்சம் பெகினுக்கு இந்த உலகம் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கி அழகு பார்த்தது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் இஸ்ரேலுக்கு எந்தளவு ஆதரவாக இருந்துள்ளன என்பதற்கு இது நல்லதோர் சான்றாகும்.


இஸ்ரேல் புரிந்துள்ள யுத்தக் குற்றங்கள் பற்றி பேசும் போது, இந்த சட்டவிரோத நாட்டை உருவாக்கிய ஐ.நா தீர்மானம் கூட செல்லுபடியற்றதாகி விடுகின்றது. சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றின் காவலர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என்பன கூட இஸ்ரேலின் யுத்தக் குற்றங்களில் பங்காளிகள் ஆகிவிடுகின்றன. மத்திய கிழக்கில் உள்ள சர்வாதிகாரிகளோ இவற்றைக் கண்டும் காணாமல் தமது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பலஸ்தீனத்தில் கசாப்புக்கடை நடத்தும் உரிமையை இஸ்ரேலுக்கு பூரணமாக வழங்கி உள்ளனர்.

 

பலஸ்தீன பூமியின் புதல்வர்களும் புதல்விகளும் தான் பலஸ்தீன மக்கள். தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட தமது மண்ணின் உரிமையை மீண்டும் நிலைநிறுத்துவதற்காகவே, தம்மிடம் இருந்து பிரிக்க முடியாத உரிமைகளுக்காகவே அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள சுமார் 300 மில்லியன் அரபு மக்களின் பூரண ஆதரவு அவர்களுக்கு உண்டு. ஆனால் அடக்குமுறை ஆட்சிகளால் அவர்கள் எல்லோருமே நசுக்கப்பட்டவர்களாக உள்ளனர். 


இஸ்ரேல் பலஸ்தீனத்தில் தொடர்ந்தும் படுகொலை புரிய பிரதான காரணமும் இதுவேயாகும்.


பலஸ்தீன் பத்தி எழுத்தாளர் டொக்டர் றம்ஸி பரோட் இவ்வாறு கூறுகின்றார் '1948ல் பலஸ்தீன பூமியின் வரலாற்று எச்சங்களின் நடுவே வன்முறை மூலம் பிரசவித்தது முதல், கடைசியாக இவ்வருடம் மே மாதம் 9ம் திகதி காஸாவில் அது நடத்தி உள்ள காட்டு மிராண்டித்தனம் வரைக்கும் தனது 75 வருடகால வரலாறு நெடுகிலும்,  இஸ்ரேலின் வரலாறு வன்முறை கலந்ததாகவே உள்ளது'.


அண்மைய ஐந்து நாள் தொடர் குண்டுத் தாக்குதலின் பின் 35 பலஸ்தீன ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதம் 13ம் திகதி சனிக்கிழமை முதல் இஸ்ரேலும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன.


No comments

Powered by Blogger.