Header Ads



அமைச்சுப் பதவி தராமல் 10 பேருக்கு அநீதி, பொறுமையுடன் செயற்படுகிறோம்


பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் இன்று(19.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


பொருளாதார பாதிப்புக்கு தீர்வுகாண வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.


ஜனாதிபதியை நாங்கள் தெரிவுசெய்திருந்தாலும், பொதுஜன பெரமுனவை முழுமைப்படுத்திய வகையில் அமைச்சரவை ஸ்தாபிக்கப்படவில்லை. அமைச்சரவை விவகாரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் செயற்படுகிறோம்.


69 இலட்சம் மக்களின் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.


தேசிய வளங்களை தனியார்மயப்படுத்தும் கொள்கை பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. இருப்பினும், தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகள் செயற்படுத்தப்படுவதில்லை என்பது பல விடயங்கள் ஊடாக தெளிவாக விளங்குகிறது என குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.