Header Ads



ரஷ்யாவுக்கு இலங்கை வழங்கிய உத்தரவாதமும், அந்நாடு வழங்கவுள்ள சலுகையும்


மேற்கத்தேய நாடுகளின் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யக் கப்பல்கள் கைப்பற்றப்படாது என்பதுடன், பணியாளர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் ரஷ்ய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடியுடன் மசகு எண்ணெயை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடம் இருந்து இலங்கை தற்போது கொள்வனவு செய்யாவிட்டாலும், இலங்கை நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து, இலங்கை அதிகாரிகளுக்கும் ரஷ்ய அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்த அமைச்சர், பேச்சு வெற்றிகரமாக முடிந்தால், இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இணக்கப்பாடு எட்டப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.


இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை நீக்கியுள்ளதாகவும் 

ரஷ்யாவிடம் இருந்து உரம் கொள்வனவு செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டார். 


அதுமட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து ரயில் இயந்திரங்கள், சரக்கு ரயில் பெட்டிகள் மற்றும் உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.