Header Ads



துருக்கி நாடு இலங்கைக்கு உதவுவதை பாராட்ட வேண்டும் - சபுகொட விகாராதிபதி


துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தினால் புனித ரமழானை முன்னிட்டு பேருவளை நகரசபை பகுதியில் 600 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.


பேருவளை சபுகொட மஹாவிகாரையில் 180 குடும்பங்களுக்கும், மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா மகளிர் கல்லூரியில் 420 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.


துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் R.DEMET SEKER CIOGLU நிகழ்வில் கலந்து கொண்டு அவற்றைக் கையளித்தார். சபுகொட விகாரையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு விகாராதிபதி தங்கல சாரத தேரோ தலைமை வகித்தார். அதன் பரிபாலன சபை செயலாளர் டி.டி.குணசிங்க உட்பட பலரும் இங்கு உரையாற்றினர். கினியாவல பாலித தேரோவின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


சமயப் பாடசாலை சிறார்களுக்கு தூதுவர் இனிப்புப் பண்டங்களை வழங்கி அவர்களை மகழ்வித்தமை குறிப்பிடத்தக்கது.


அல்-பாஸியத்துல் நஸ்ரியாவில் இடம்பெற்ற நிகழ்வுக்கு அப்ரார் பவுண்டேசன் தலைவர் நிஸாம் தலைமை வகித்தார். அதன் உறுப்பினர்களான டில்சாத் அன்வர், றிஸ்கான் அப்துல் ஹமீத், எம்.எஸ்.எம்.ஹுஸைன், எம்.இஹ்ஸான் ஆசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


துருக்கி தூதரக அதிகாரி எம்.எஸ்.எம்.ராபி நிகழ்வை தெரியப்படுத்தினார்.


துருக்கி தூதுவர் இங்கு உரையாற்றும் போது "இலங்கைக்கும் துருக்கி நாட்டுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இருநாடுகளுக்குமிடையில் வர்த்தக,பெருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் உறவு மிகவும் சக்தி பெற்று விளங்குகிறது. துருக்கி மக்கள் இலங்கை தேயிலையை மிகவும் விருப்பத்துடன் அதிகளவில் பாலிக்கின்றனர். அதே போல் கூடுதலானோர் உல்லாசப்பயணிகளாக இலங்கைக்கு வருகின்றனர்.நோன்பு நோற்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சிங்கள-_ தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சிங்கள சகோதரர்களுக்கும் மணிதாபிமான அடிப்படையில் உதவி செய்யக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.


சபுகொட விகாராதிபதி பேசும் போது-துருக்கி நாடு பாரிய நிலநடுக்கத்தைச் சந்தித்து 50,000 பேர் வரை பலியான நிலையில், இதுபோன்ற உதவியைச் செய்வதை பாராட்ட வேண்டும்" என்றார்.


இரு சமூகங்களுக்கிடையில் இன உறவை மேலும் கட்டியெழுப்ப இது ஓர் உந்து சக்தியாக அமையும் என்றார்.

No comments

Powered by Blogger.