Header Ads



இலங்கையர் ஒவ்வொருவரும் எவ்வளவு கடனாளி தெரியுமா..? மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி வரவிருக்கிறது


இலங்கை இப்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு இடைவேளையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நரகத்திலிருந்து ஒரு இடைவேளை தான் இதுவென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்தார்.


தற்போதைய சூழலை வைத்து இலங்கை பொருளாதார மறுமலர்ச்சியடைந்து முன்னோக்கிச் செல்கின்றது என மக்கள் நினைத்து விடக் கூடாது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை இலங்கை விரைவில் சந்திக்கும் என களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியபோது அவர் தெரிவித்தார்.


பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாங்கள் இப்போது ஒரு இடைவேளையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவரப் போகின்றது என யாராவது நினைத்தால் அது தவறு. இது ஒரு இடைவேளை தான். நாடு சரியான திசையில் கொண்டு செல்லப்படாததால் ஏற்கனவே அனுபவித்ததை விட மிகவும் மோசமான நிலைக்கு நாம் திரும்புவோம் என அவர் தெரிவித்தார்.


1971 ஆம் ஆண்டிற்கு பின் உற்பத்திப் பொருளதாரத்தை மேம்படுத்தாமல் பொருளாதார சொத்துக்களைப் பெறாமல் இலங்கையின் செலவுகள் அதிகரித்ததால் இந்த நெருக்கடிக்கு இப்போது முகங்கொடுக்க வேண்டியுள்ளது.


பொருளாதார வளங்களை பெருக்குதல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக நாங்கள் கடன்களைப் பெற்றும் எமது வளங்களை விற்றுக் கொண்டும் இருந்தோம். நாங்கள் இப்போது ஒரு கடனாளி நாடாக இருக்கின்றோம். ஒவ்வொருவர் மீதும் ரூ.1.4 மில்லியன் கடன் தொகை உள்ளது.


பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர IMFஇடமிருந்து கடன் பெறும் அதே பழைய வழியைத் தான் ரணிலின் அரசாங்கமும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் தேர்ந்தெடுத்துள்ளது. நாடு ஏற்கனவே கடனால் தான் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அதற்கு தீர்வாக அரசாங்கம் மீண்டும் கடனைத் தான் பெற்றுள்ளது என்று மேலும் தெரிவித்தார்.


உற்பத்திப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் கடன்களைப் பெறுவதைத் தவிர்த்து வளங்களைப் பெருக்கும் வழியைப் பின்பற்றுவதைத்  தவிர இலங்கையை இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க எவராலும் முடியாது என சில்வா வலியுறுத்தினார்.


No comments

Powered by Blogger.