Header Ads



பாராளுமன்றத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மீண்டும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.


இலங்கையில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(28) பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.


இதன் பிரகாரம்,2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு வர்த்தமானி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டதுடன்,இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான நேர்முகப் பரீட்சை இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது.


கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் இந்த நேர்முகத்தேர்வில் தெரிவான மாணவர்கள் எப்போது இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் கல்வி அமைச்சரிடம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.


2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உயிரியல் மற்றும் கணிதத்தில் உயர்தரத்திற்கு தோற்றியவர்கள் மாணவர் தாதியர் பயிற்சி நெறிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்கான வர்த்தமானி இது வரை வெளியிடப்படவில்லை எனவும்,3 வருடங்களுக்கு மேலாகிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்த கற்கையில் சேரும் மாணவர்கள் வேறு கற்கைகளுக்கு விண்ணப்பிக்காத நிபந்தனையின் பேரில் சுமார் 4000 மாணவர்கள் ஏனைய கற்கைகளுக்கு விண்ணப்பிக்காதுள்ளனர் எனவும்,எனவே இந்த வர்த்தமானி வெளியீட்டை ஒத்திவைப்பதன் மூலம் ஏனைய பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்  சுட்டிக்காட்டினார்.எனவே,குறித்த இந்த வர்த்தமானி எப்போது வெளியிடப்படும் என்று கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.


அத்துடன்,பட்டதாரிகளை வேலைக்கு ஆட்சேர்ப்புச் செய்து கொள்வதில் அநீதி இழைக்கப்பட்ட 465 பேருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.


அதேபோன்று இலங்கை ஆசிரியர் பயிற்றுனர்களை 3 ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும் எனவும், அது தொடர்பான நியமனங்கள் எப்போது வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கேள்வி எழுப்பினார்.



No comments

Powered by Blogger.