Header Ads



குண்டுத் தாக்குதல் பற்றி தகவல் வழங்கிய, மௌலவியை பொலஸார் பிடித்தது எப்படி..?


(அததெரன) 


அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக பொய்யான தகவலை வழங்கிய நபரை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.


கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அவசர இலக்கமான 118க்கு தொடர்பு கொண்டு, அக்குரணையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.


தான் மாவனெல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


அதன்படி செயற்பட்ட பொலிஸார் இராணுவத்தினரின் ஆதரவுடன் அக்குரணை நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.


இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 19ஆம் திகதி மற்றுமொரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில், தான் ஹல்துமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என தகவல் வழங்கிய நபர் தெரிவித்துள்ளார்.


தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தகவல் வழங்கியவர்களின் இலக்கங்களைச் சரிபார்த்ததில், இரண்டு இலக்கங்களும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.


மேலும், தகவல் அளித்தவர்கள் கொடுத்த முகவரிகளை சரிபார்த்தபோது, ​​அந்த வீடுகளில் அப்படி யாரும் இல்லை என்பது உறுதியானது.


அதன்படி, தகவல் அளிக்கப்பட்ட கணினி அமைப்பின் தகவல்களை ஆய்வு செய்ததில், இந்த தகவல் ஒரே நபரால் அளிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.


ஹாரிஸ்பத்துவ - பட்டுகொட பிரதேசத்தில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


அதன்படி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்து, ஹாரிஸ்பத்துவ - பட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த போது, ​​கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தத் தகவலை வழங்கிய நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


21 வயதான இசதீன் மொஹமட் சஜித் என்ற சந்தேக நபர் மௌலவியாக பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.


அவரது கைப்பேசியைள சரிபார்த்ததில் சம்பந்தப்பட்ட அழைப்புகள் வந்திருப்பது உறுதியானது.


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் போது, ​​வேறொருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.


இதன்படி, சந்தேகநபர் நேற்று பிற்பகல் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.