Header Adsஅற்புதமான, அழகான உண்மைச் சம்பவம்


அந்த கோடீஸ்வரப் பெண் வெகு தூரம் பயணம் செய்து தன் வாகனத்தில் போக்குவரத்துக் குறைந்த நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தாள். வாகனம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து நடு வீதியில் நின்று விட்டது.சரிசெய்ய முயற்சித்தும் கைகூடவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றாள்.


வீதியில் சென்ற ஓரிரு வாகனங்களை நிறுத்த முயற்சித்தும் யாரும் நிறுத்தவில்லை. 


நேரம் சென்று இருளும் சூழ ஆரம்பித்திருந்தது. இறுதியாக பழைய காரொன்று பக்கத்தில் வந்து நின்றது. 


ட்ரைவரைப் பார்த்தாள். சற்று இளமையான தோற்றம்; அவனிடம் வறுமையின் வாசமும் வீசியது. அதில் ஏறுவதற்கு சற்று தயங்கினாள். இவனை நம்பலாமா என்று கூட யோசித்தாள். வேறு வழியின்றி பயத்துடன் ஏறிக் கொண்டவள் ட்ரைவரிடம் பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றி விசாரித்தாள்.


அதற்கு ட்ரைவர்: எனது பெயர் ஆதம். தொழில் டெக்சி ட்ரைவர். என்றான்.


சற்று ஆறுதலானாள். அவனின் மொபைல் இலக்கத்தையும் வாங்கிக் கொண்டாள். 


அவன் மிகவும் ஒழுக்கமும் பண்பாடும் நிறைந்தவனாகக் காணப்பட்டான். அவள் பக்கம் அவன் திரும்பவுமில்லை; அதிகம் பேசவுமில்லை. அவனைப் பற்றி தப்பெண்ணம் கொண்டதற்காக தன்னைக் கடிந்து கொண்டாள்.


டவுனுக்குள் வந்ததும் இறங்கிக் கொண்டு எவ்வளவு என்று கேட்டாள்.


அதற்கவன்:" இது உதவி. உதவியில் வியாபாரம் செய்யக் கூடாது. இதை வேறு யாருக்காவது கொடுங்கள். என்று கூறிவிட்டுச் சென்றான். அவனது குணத்தில் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள் அவள்.


பசியோடும் களைப்போடும் இருந்தவள் ஒரு லேடீஸ் ரெஸ்டோரன்ட்  உள்ளே சென்று ஒரு பெண் வெய்டரிடம் தேவையானதை ஓடர் செய்தாள்.  அந்தப் பெண் வெய்டர் நிறைமாத கர்ப்பிணியானதால் மிகவும் சோர்வுடன் காணப்பட்டாள்.


அவள்மீது பரிதாபம் கொண்டு: வீட்டில் ஓய்வெடுக்கலாமே. ஏன் கஷ்டப்படுகிறாய்? என்றாள்.


அதற்கு வெய்டர்: வறுமை நிலை. பிரசவத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டுமே! என்றாள்.


அல்லாஹ் உதவி செய்வான் என்றவள் தனக்கு சற்று முன் வீதியில் நடந்த சம்பவத்தைக் கூறிவிட்டு பில்லுக்கான பணத்தைக் கொடுத்தாள்.


மிகுதி பணத்தைக் கொண்டு வந்த வெய்டர் பெண் அந்த பணக்காரப் பெண்ணைக் காணாது ஆச்சரியப்பட்டாள்.


அவள் இருந்த மேசையில் சிறியதொரு பேப்பரில்: 'மிகுதிப் பணம் உக்குரியது. மேசைக்குக் கீழிருக்கும் பணம் பிறக்கப்போகும் உன் குழந்தைக்கான எனது பரிசு' என்றிருந்தது. 


மேசையின் கீழிருந்த பணத்தை எடுத்தாள். அது அவளது 8 மாத சம்பளப் பணம். மிகவும் சந்தோஷப்பட்டாள். உடனடியாக அனுமதி பெற்று வீடு திரும்பினாள்.


இடையில் வீடு வந்த மனைவியைப் பார்த்த கணவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.


ஆனால் மனைவி கூறியதைக் கேட்டவுடன் மகிழ்ந்தான்.


மனைவி கூறினாள்: " ஆதம்! அல்லாஹ் அந்தப் பெண்ணின் மூலம் எமக்கு அருள் செய்திருக்கின்றான் என்றவள் அந்தப் பணக்காரப் பெண்ணைப் பற்றியும் அவளுக்கு வீதியில் நடந்த  சம்பவம் பற்றியும் கூறினாள்.


அப்போது ஆதம்: " அந்தப் பெண் கூறிய டெக்சி ட்ரைவர் நான்தான்" என்றான் அமைதியாக...


இருவரும் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டனர். 


அன்று மாலை ஆதமுக்கு மொபைல் அழைப்பொன்று வந்தது. மறுமுனையில் ஓர் ஆண் : " ஆதம்! என் மனைவிக்கு உதவியதற்கு நன்றிகள். ABU DHABI MOTORS LLC என்ற கம்பனியில் உங்களுக்காக TOYOTA CAMRY காரொன்றுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. அங்குபோய் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான சிறியதொரு அன்பளிப்பு"...


சுப்ஹானல்லாஹ்... 


அல்லாஹ்வின் அருள் எவ்வளவு விசாலமானது. அவன் நல்லோரை கைவிடுவதில்லை.


நாம் செய்யும் நலவுகள் நாம் விதைக்கும் விதைகள். அது விருட்சமாக வளர்ந்து அதன் பலன்கள்  நமக்கே திரும்பி வரும்.


" நன்மைக்கு நன்மை தவிர வேறு கூலி உண்டா..." அல்குர்ஆன்- 55:60 


- பாஹிர் சுபைர் -

1 comment:

  1. ஆம் هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ‌ۚ‏ மிகவும் அருமையான பதிவு. நாம் உண்மையாகவே அல்லாஹ்வுக்காக உதவி செய்யும் போது அந்த உதவி நமக்கு பல மடங்காக வந்து சேரும் என்பதற்கு இந்த சம்பவம் மிகவும் சிறந்த உதாரணம். இதனை நாம் தனிப்பட்டமுறையில் கடைப்பிடித்து நடப்போமா?

    ReplyDelete

Powered by Blogger.