Header Ads



தெளிவான சிந்தனையில் இருக்கின்றேன் - வியாழேந்திரன்


ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


மியன்மார் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட அரசியினை புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (03.04.2023) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.


இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இன்று வடக்கு கிழக்கில் தமிழ் காட்சிகள் அனைத்தும் தமிழர்களின் உடைய பிரச்சினை சார்ந்த விடயங்களில் அனைவரும் ஒரே குரலாகப் பேச வேண்டும். நாங்கள் கொள்கை அடிப்படையில் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருகின்றவர்கள்.


வடகிழக்கு இணைப்பில் மாத்திரமே கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்கக் கொள்ள முடியும் என்கின்ற தெளிவான சிந்தனை இருக்கின்றேன். வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் காட்சிகள் மாத்திரம் அல்ல அனைத்து தமிழ் கட்சிகளும் நாங்கள் தமிழர்களுடைய பிரச்சனை என்கின்ற வருகின்ற போது ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும்.


இன்று நில அபகரிப்பு வருகின்றது எங்களுடைய மக்கள் எல்லா அபிவிருத்தி திட்டங்களிலும் கண்மூடித்தனமாக இருக்கவில்லை. ஆனால், அபிவிருத்தி என்கின்ற போர்வையில் ஒரு சில தனி நபர்கள் வந்து 500 ஏக்கர் 600 ஏக்கர் என்கின்ற செயல் திட்டங்களுக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.


எங்களுக்கு அபிவிருத்தி மற்றும் உரிமை எங்களுக்குத் தேவை. ஆனால் அந்த அபிவிருத்தி என்கின்ற விடயத்தை வைத்துக்கொண்டு நில அபகரிப்பை நாங்கள் அனுமதிக்க முடியாது.


எனவே, தமிழ் கட்சிகள் முன்னெடுக்கின்ற நியாயமான போராட்டங்களில் நாங்கள் நிச்சயமாக வரவேற்கின்றோம். நாங்கள் தமிழ் மக்களை மையப்படுத்தி அரசியல் செய்கின்றோம்.


அதனால் தயவு செய்து எல்லா தமிழ் கட்சிகளும் நான் கூறுகின்ற விடயம் ஒன்றுதான் தமிழர்களுடைய பிரச்சினை என்று வருகின்ற போது, எல்லாரும் ஒரே குரலில் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.


தமிழர் தாயக பிரதேசத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்ற வணக்க ஸ்தலங்களை உடைக்கின்ற செயற்பாடு, தமிழ் கிராமங்களைத் திட்டமிட்டு அபகரிக்கின்ற செயற்பாடு மற்றும் குடியரசுகளை அமர்த்துகின்ற செயற்பாடு. அதோடு அபிவிருத்தி என்கின்ற போர்வையில் குடியேற்றங்களை அமர்த்துகின்ற செயற்பாடு சில இடங்களில் வடகிழக்கில் இடம்பெற்றிருக்கின்றது.


இவ்வாறான வேலைத் திட்டங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு, இவற்றை அனுமதிக்கக் கூடாது.


தொல்பொருள் என்கின்ற போர்வையில் தமிழர்களுடைய வரலாற்றுப் பூர்வீகங்களைப் பண்பாட்டோடு ஒன்றிணைந்து இருக்கின்ற தலங்களை அழிக்க நினைக்கின்ற நாசக்கார செயற்பாடு மிக மோசமானது.


கடந்த காலங்களில் தமிழ்ச் சமூகம், தமிழ் இளைஞர் - யுவதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் பலவகையில் துன்புறுத்தப்பட்டு இன்றும் கூட அந்த சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளாகப் பல கோணங்களிலே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.


இந்த சட்டம் அப்போது இருந்தபோது உண்மையிலே யாரும் பெரிதாகக் கவலைப்படவில்லை குறிப்பாகத் தென்னிலங்கையில் இருப்பவர்களும் இதனால் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ்ச் சமூகமே.


இப்போது இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்பது ஒட்டுமொத்த இலங்கையை மையப்படுத்திக் கொண்டுவரப்படுகின்ற ஒன்று என்பதனால், இன்று தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தென்னிலங்கையில் உள்ளவர்கள் கூடுதலாகக் குரல் எழுப்புகின்ற நிலைமையினை பார்க்கின்றோம்.


ஆனால் ஒரு கட்டத்தில் எங்களுடைய சமூகத்திற்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டபோது, தென்னிலங்கை அரசியல்வாதிகள் எவரும் வாய் திறக்கவில்லை.


இந்த நிலையில், இந்த சட்டம் தொடர்பான விடயங்கள் சரியான முறையில் ஆராயப்பட வேண்டும். அதேவேளையில், அது மீளவும் எங்களுடைய சமூகத்தை அடக்கும் செயற்பாடாக வரும் என்றால் நிச்சயமாக அது ஏற்றுக் கொள்ள முடியாது. அதனைத் திருத்த வேண்டும். நிச்சயமாக இந்த சட்டம் வந்தவுடன் நாடாளுமன்றத்தில் சட்டமாகப் போவதில்லை.


வாத பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்படும் அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற பேரிலே இன்று வரை அந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற, அதிலும் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட சமூகம் தமிழ்ச் சமூகம். ஆகவே எந்த சட்டங்கள் கொண்டு வந்தாலும் எங்களுடைய சமூகத்தினை அடக்குகின்ற செயற்பாடாக இருக்கக் கூடாது. அதில் மாற்றங்கள் பாரியளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்.


ஒரு ஜனநாயக நாட்டினுடைய மிகப்பெரிய முதுகெலும்பு கருத்துச் சுதந்திரம் அதனை எவரும் அடக்க முடியாது. அது ஊடக அடக்குமுறைக்கு ஒருபோதும் துணைபோக முடியாது.


ஆகவே, இவ்வாறு கொண்டு வரப்பட இருக்கின்ற சட்டத்திலேயே எங்களுடைய கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு ஊடகங்களினுடைய குரல்வளை நசுக்கப்படுமானால் நிச்சயமாக அது ஒரு பாரதூரமான செயற்பாடாகதான் நான் பார்க்கின்றேன்.


அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அடுத்தது, ஒரு ஜனநாயக நாட்டிலே மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து ஜனநாயக வழியில் போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.


ஆனால், ஜனநாயகத்துக்கு மாறாக வன்முறையில் ஈட்டுபவர்கள் மீது உண்மையில் ஒரு நியாயபூர்வமான சட்டத்தை மேற்கொள்ளலாம் ஆனால் அதை விடுத்து ஜனநாயக ரீதியாக ஜனநாயக விழுமியங்களை மதித்து ஜனநாயக கருத்துக்களுக்கு உடன்பட்டு ஜனநாயக வழியில் போராடுபவர்களை நசுக்குகின்ற வகையில் இவ்வாறான சட்டங்கள் வருமானால் அவர் நிச்சயமாக எடுக்கப்பட வேண்டியவை.


No comments

Powered by Blogger.