Header Ads



வருடாந்தம் 10,000 பொறியியலாளர்களை உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கவும் நடவடிக்கை


நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான  கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.


நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் மேலும் அபிவிருத்திக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு ஜனாதிபதி கொண்டு வந்தார்.


தற்போது இலங்கையில் கணனி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலம் மொத்த தேசிய வருமானத்தில் வருடாந்த பங்களிப்பு சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இதில் செயற்கை நுண்ணறிவு ( AI ) தொழில்நுட்பம் மூலம் ஈட்டப்படும் வருமானம் எவ்வளவு என அறியப்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அந்த தொகையை கண்டறிவதற்கான முறைமை ஒன்றை தயாரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.


அடுத்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி  தெளிவுபடுத்தினார்.


ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,


''விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையின் நவீனமயமாக்கல், சுற்றுலாத் துறை, விநியோக மையங்களை மேம்படுத்துதல் போன்ற நமது பொருளாதார சீர்திருத்தங்களுடன் அவசரமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய  விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது தவிர, நாங்கள் தொழில்நுட்ப துறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.


இன்று உலகம் செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறிவரும் நிலையில் இலங்கையும் செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தி, அதில் அதிக முதலீடு செய்ய வேண்டும். இதனை  தனியார் துறை ஊடாகவே மேற்கொள்ள  வேண்டும். அது தொடர்பில் உங்கள் கருத்துக்களைப் பெறவது தான்  இன்று நான் இந்த  கலந்துரையாடலுக்கு உங்களுக்கு  அழைப்பு விடுத்ததன் முதன்மை நோக்கமாகும். இந்தத்  திட்டங்களை எவ்வாறு தொடங்குவது? அதன் சாதக பாதகங்கள் என்ன?  என்பது தொடர்பில் உங்களுடன் கலந்துரையாட வேண்டும்.


அடுத்த ஆண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காக ஒரு பில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. நாட்டில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில், அதற்கு ஏற்ற சூழல் தேவை. அதற்காக தனியான ஒரு நிறுவனமும் தரவுகளும் தேவை. எனவே இந்த திட்டங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த உங்கள் கருத்துக்களைப் பெற  எதிர்பார்க்கிறேன்.


மேலும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில் நாம் அதற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை அரசு ஏற்கனவே தயாரித்துள்ளது.


நம் நாட்டில் ஆண்டுக்கு 2500 பொறியாளர்கள் மட்டுமே  உருவாக்கப்படுகின்றனர். குறைந்தபட்சம் 10,000 பொறியாளர்களை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில், சிங்கப்பூரையும் இந்தியாவையும் கருத்தில் கொள்ள வேண்டும். கிழக்கு ஆசியா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறி வருகின்றன என்றாலும், மேற்கு ஆசியாவில் இதுவரை அந்த  இடத்திற்கு வரவில்லை. எனவே எங்களிடம் இன்னும் தெளிவான  துறைகள் உள்ளன. அதற்கு நாம் மூலோபாயங்களை  வகுத்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த நோக்கத்திற்காக, பல்கலைக்கழக ஆராய்ச்சி துறைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.


தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்   கனக ஹேரத் மற்றும் அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர்  நிரஞ்சன் குணவர்தன ஆகியோர்   செயற்கை நுண்ணறிவை   இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் பரந்த பரப்பில் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.


அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் இத்துறையின் புதிய போக்குகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இத்துறையின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலில் கலந்துகொண்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.


ஜனாதிபதியின் மூலோபாய விவகாரங்களுக்கான சிரேஷ்ட மேலதிக செயலாளர்  சாந்தனி விஜேவர்தன மற்றும் இலங்கை செயற்கை நுண்ணறிவு சங்கம், பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய புத்தாக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப துறை நிபுணர்கள் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


 ஜனாதிபதி ஊடகப் பிரிவு

30-04-2023

No comments

Powered by Blogger.