Header Ads



IMF ஒப்பந்தத்தில் தோல்வி கண்டால், இலங்கைக்கு என்ன நேரும்...?


 சர்வதேச நாணய நிதியம் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களையும் இலங்கை தொடர்ச்சியாக மீறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆ.நிக்சன் தெரிவிக்கிறார்.


இதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்ட இந்த ஒப்பந்தத்தையும், இலங்கை அரசாங்கம் மீறுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.


இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்த தருணங்களில், சர்வதேச நாணய நிதியம் இதுவரை 17 தடவைகள் உதவிகளை வழங்கியுள்ளது.


இவ்வாறான 17 தடவைகளில், 9 தடவைகள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இடைநடுவில் நிறுத்திக் கொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.


''சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மாத்திரம் அல்ல, சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தத்தையும் இலங்கை மீறியது. உதாரணமாக, 400 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி கிடைக்கக்கூடிய மிலேனியம் சிட்டி ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் 2020ம் ஆண்டு கிழித்தெறிந்தது. 2018ம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை கோட்டாபய ராஜபக்ஷ 2020ம் ஆண்டு கிழித்தெறிந்தார்.


அதைவிட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செய்வதற்காக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனை ரத்து செய்தார்கள். அதற்கு பதிலாக இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் வழங்கப்பட்டுள்ளது.


அதானிக்குத் தரப்பட்ட எண்ணெய் உற்பத்தி

முழுமையான ஒப்பந்தம் இதுவரை நடைமுறையில் இல்லை. மன்னாரில் எண்ணெய் வள உற்பத்தி அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதுவரை அது சரியான வகையிலான நடைமுறைக்கு வரவில்லை. சர்வதேச ஒப்பந்தங்களை இலங்கை இலகுவாக கிழித்தெறிவது உண்மை.


அதேபோன்றுதான், இனப் பிரச்னைக்கு தீர்வாக காணப்படும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம், அதனை இதுவரை அமல்படுத்தவில்லை. இன்னும் பல வரலாறுகளுடன் உதாரணங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது.


அதையும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கூற வேண்டும். அரசியலுக்கு அப்பால் ஒரு பொருளாதார பொறிமுறையொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது. பொருளாதார பொறிமுறையொன்றை உருவாக்க முடியாது. ஏனென்றால், அவ்வாறு உருவாக்கினால், தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் அதற்குள் வர முடியாது. சர்வதேச நாணய நிதியம் ஒன்றை மாத்திரம் சொல்கின்றது. மீள் நல்லிணக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றது.


சர்வதேச நாணய நிதியம் அரசியலை பற்றி பேச மாட்டார்கள். ஆனால், சர்வதேச நாணய நிதியம் மீள் நல்லிணக்கம் தொடர்பில் பேசும் போதே பொருளாதார பொறிமுறைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள் வர வேண்டும் என்று விளங்குகின்றது.


அதை செய்யமாட்டார்கள். இலங்கையின் பொருளாதார விடயங்களை, இவர்கள் இலங்கையின் மத்திய வங்கி ஊடாக மாத்திரமே முன்னெடுப்பார்கள். மத்திய வங்கிக்குள் மாத்திரம் முடிவெடுத்தால், தன்னிறைவு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால், சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தில் தோல்வி தான் காணும்," என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.


சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் தோல்வி கண்டால், அடுத்து இலங்கைக்கு என்ன நேரும்? என பிபிசி தமிழ், அ.நிக்சனிடம் வினவியது.


''இலங்கை யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழியையும் பொருட்படுத்தவில்லை. 2009ம் ஆண்டு யுத்தத்திற்கு பிறகு வந்த பொறுப்புகூறலை தவறியுள்ளது. யுத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், யுத்த குற்றங்களை விசாரணைகள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புகூறலை கூட நிராகரித்துள்ளது.


சர்வதேசத்தை நிராகரிப்பது இலங்கைக்கு புதிய விடயம் கிடையாது. இந்த முறை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த திட்டங்களை ஏற்றுக்கொள்கின்றது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தாது என்று சொன்னால், எதிர்காலத்தில் இலங்கை தொடர்ந்தும் கீழே போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.


ஆனால், ஒரேயொரு சந்தர்ப்பம் இருக்கின்றது. பிராந்தியத்தில் மிக சிறிய நாடு என்ற காரணத்தினால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மன்னிப்பு வழங்கிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இவ்வாறு சந்தர்ப்பம் வழங்குகின்றன.


இது மாத்திரமே இலங்கைக்கு உள்ள ஒரேயொரு சாதகமான விடயம். இலங்கை செய்த அனைத்து அட்டகாசங்களையும் பொறுத்துக்கொண்டு, சின்ன நாடு சின்ன நாடு என சந்தர்ப்பத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


இலங்கை சீனாவை ஏமாற்றுவது குறைவு. ஆனால்;, அமெரிக்காவையும், இந்தியாவையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் என்ன தான் தவறு செய்தாலும், இந்த நாடுகள் எமக்கு உதவும் என்ற விடயம் இலங்கைக்கு நன்றாக தெரியும்.


சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். இனப் பிரச்னைக்கான தீர்வையும் வழங்க வேண்டும். ஆனால், அது நடக்காது. புவிசார் அரசியல் நோக்கத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து இலங்கையை செல்ல பிள்ளையாக பார்க்கின்றன.


இதனால், இலங்கை என்னதான் சர்வதேச ஒப்பந்தங்களை மீறினாலும், அதனை அந்த நாடுகள் மன்னிக்கின்றன. ஆனால், இலங்கை முற்று முழுதாக சீனாவுடன் தான் தங்கி நிற்கின்றது. இந்தவிடயத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் தோல்வி காணும். இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் நிச்சயம் தோல்வி காணும்" என அவர் கூறுகின்றார்.

No comments

Powered by Blogger.