Header Ads



காலி முகத்திடல் போராட்டத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் இருந்தனர், பைத்தியக்காரன் போல கோட்டாபய


நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரியூட்டியவர்களை விரட்டுமாறும், அவர்களைச் சுடுமாறும் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்துக்கு உத்தரவிட்டார், ஆனால் இராணுவ அதிகாரிகள் அந்த உத்தரவை ஏற்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.


``நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தவர்கள் யார், நாடாளுமன்ற உறுப்பினர் அமரக்கீர்த்தி அத்துகோரலவை கொன்றவர்கள் யார்?''என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பியினரே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள். நான் மட்டுமல்ல எல்லோரும் அவர்களைத்தான் சொல்கின்றார்கள்.


அவ்வாறு அட்டகாசம் புரிந்தவர்கள் பலர் ஜே.வி.பியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.


காலிமுகத்திடல் போராட்டத்தில் விடுதலைப்புலிகளும் கலந்துகொண்டனர். புலிகள் இன்னும் செயற்படுகின்றார்கள்.


அடிப்படைவாத முஸ்லிம்களும் அங்கு இருந்தனர். கோட்டாபய ராஜபக்சவால் அவர்களை விரட்ட முடியாமல் போனது.


அவர்களை விரட்டத் தேவை இல்லை என்று கோட்டாபய நினைத்தார். ஆனால், இறுதியில் நிலைமை மோசமானது.


கடந்த மே 9 ஆம் திகதி இரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரியூட்டியவர்களை விரட்டுமாறும் அவர்களைச் சுடுமாறும் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்திற்கு  உத்தரவிட்டார்.


ஒரு பைத்தியக்காரன்போல் எல்லாப் பக்கமும் தொலைபேசி அழைப்பு எடுத்து அவர் உத்தரவிட்டார். ஆனால், இராணுவ அதிகாரிகள் அந்த உத்தரவை ஏற்கவில்லை. இது தொடர்பில் நான் அறிந்த எல்லாவற்றையும் வெளியே சொல்லமாட்டேன்.


இறுதியாக கோட்டாபயவுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் யார்? அவரை வந்து சந்தித்த வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் யார்? அவரைப் பதவியை விட்டு ஓடுமாறு கூறியவர்கள் யார்? இதற்குப் பின்னால் உள்ள சதி என்ன? எல்லாம் எனக்குத் தெரியும்.


நான் எல்லாவற்றையும் சொல்லமாட்டேன். ஆனால், ரணில் விக்ரமசிங்க சரியான முடிவை எடுத்தார்.


ஜனாதிபதியாகி மறுகணமே காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை விரட்டியடித்தார்.


ரணில் சரியான பாதையில் அரசாங்கத்தை கொண்டு செல்கின்றார். அவரை நாம் ஜனாதிபதியாக நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.


ரணில் சீனாவுடனும் உறவைப் பேணுகின்றார். இந்தியாவுடனும் உறவைப் பேணுகின்றார். அதேபோல், ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் நட்பு வளையத்துக்குள் வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.