Header Ads



வாயை பிளக்கச் செய்த விளம்பரமும், வெளியான அதிர்ச்சித் தகவலும்


எலி பிடிக்க 1 கோடியே 38 லட்சம் ரூபாய் சம்பளமா? னு நம் எல்லோரையும் வாய்ப்பிளக்க செய்தது சமீபத்தில் நியூயாா்க் மேயர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஒர் அறிவிப்பு. எலிகள் என்றாலே பெரும் தொல்லைதான் என்றாலும் நியூயாா்க்கில் அது கூடுதல் தொல்லையாக இருக்கிறது. அங்கு உள்ள சுரங்கப் பாதைகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளது. ஆம் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித பயன்பாட்டிற்கு வரும் முன்பு விலங்குகள் மீது பரிசோதிக்கப்படும். அதிலும் எலிகள் மீதான பரிசோதனை சற்று கூடுதல்தான்.


கண்டுபிடிப்புகள் மட்டும் அல்ல எப்போதெல்லாம் வைரஸ் நோய்களால் மனித இனம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் விலங்குகளை பரிசோதிப்பதும் இயல்பு. அப்படியாகத்தான் அமொிக்காவின் நியூயார்க் நகாில், பூங்கா, சுரங்கப்பாதை, குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட 79 எலிகளை ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.


வைரஸ் பாதிப்பு குறித்தான அந்த ஆய்வு முடிவுகள் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளன, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 79 எலிகளில் 16 எலிகளுக்கு கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான, ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்நிலையில் எலிகள் மீதான சோதனைகளை மேலும் அதிகாித்திருப்பதாவும், எலிகளிடமிருந்து வேறு விலங்குகளுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்திவருவதாகவும் ஆராய்ச்சியாளா்கள் தொிவித்துள்ளனா்.


மனிதா்களை பாதிக்கும் தொற்று நோய்கள் பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து பரவக்கூடியவை என பெரும்பலான ஆய்வு முடிவுகள் கூறும் நிலையில் எலிகளால் மீண்டும் தொற்று அதிகாிக்குமா என அச்சம் எழுந்துள்ளது. ஆனால் அதேவேளையில் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சாா்ஸ் வகை வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து பரவக்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், அதனால் எலிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை என்கிறது அமொிக்காவின் சிடிசி எனப்படும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்.


எலிகளால் மனிதா்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரவுமா பரவாதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க சமீபத்திய நாட்களில் உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் மெல்ல அதிகாித்துவருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.